Published : 24 Mar 2019 09:46 AM
Last Updated : 24 Mar 2019 09:46 AM
சேலம் மாவட்டத்தில் பிரதான தொழிலாக விளங்கும் வெள்ளி கொலுசு உற்பத்தியில் 1.5 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வருவாய் ஈட்டி வருகின்றனர்.தொழிலாளர்களின் வாழ்வாரத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, பொன்னம்மாபேட்டை, குகை, இளம்பிள்ளை உள்ளிட்ட 60 கிராம பகுதிகளில் வெள்ளி கொலுசு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள் ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பிஹார், ஜார்கன்ட், மேற்கு வங்காளம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சந்தையில் வரவேற்பு
சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் வெள்ளி செயின் (கொலுசு) உற்பத்தியாளர் சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யாமல் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் குடிசை தொழில்போல, வீடுகளில் இருந்து வெள்ளி கொலுசு, அரைஞாண்கயிறு, மெட்டி உள்ளிட்டவை உற்பத்தி செய்கின்றனர்.
வெள்ளி கொலுசுக்கள் பல்வேறு வடிவமைப்பு மற்றும் ரகங்களில் தயாரிக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கும் வெள்ளி கொலுசு பளபளப்பாகவும், அழகுற காண்போரின் கண்களை கவரும் வடிவமைப்பில் உள்ளதால், நாடு முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் ரகம், வடிமைப்புக்கு ஏற்ற வகையில் கிலோவுக்கு ரூ.ஆயிரம் முதல் ரூ.2 ஆயிரம் வரை கூலியாக பெற்று வருகின்றனர்.
கலைநயத்துடன் வடிவமைப்பு
வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞாண்கயிறு சேலம் மாவட்ட உற்பத்தியாளர்கள் பிரத்யேகமான முறையில், கலைநயத்துடன் வடிவமைத்து கொடுக்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தில் உள்ள தங்க, வெள்ளி நகை கடைக்காரர்கள், சேலம் வெள்ளி செயின் உற்பத்தியாளர்களிடம் வெள்ளியை கொடுத்து, அதற்கு மாற்றாக கொலுசு, மெட்டி, அரைஞாண்கயிறாக வாங்கி கொள்கின்றனர்.
கொலுசு தயாரிப்பு 16 கட்டங்களை கொண்டது. கம்பி மிஷின், உருக்குக்கடை, மிஷின் பாலிசி, கைமெருகுகடை, பூ மிஷின், பொத்துகுண்டு வளையம் மிஷின், அரும்பு மிஷின், குஷ்பூ பட்டறை, எஸ்.செயின், சாவித்ரி சலங்கை, பட்டை மிஷின், குப்பாமிஷின், கெட்டி பூ மிஷின், பொடிமிஷின், கன்னிமாட்டும் மிஷின், லூஸ் பட்டறை! இத்தனையையும் கடந்த பிறகே கொலுசு முழுவடிவம் பெறும். அதற்கு 2 முதல் 3 நாட்களாகும்.
நீடித்து உழைக்கும்
வெள்ளி கொலுசில் செம்பு, பித்தளை ஆகியவை ‘சேதாரம்’ என்ற பெயரில் சேர்க்கப்படுகிறது. சேலம் மாநகரில் கைகளால் தயாரிக்கப்படும் வெள்ளி கொலுசுகள் 58 கிராம் முதல் 65 கிராம் எடை கொண்டது. நேர்த்தியான வடிவமைப்பும், கலை நயமிக்க வேலைப்பாடுகள் நிறைந்த, இந்த கொலுசுகள் 3 ஆண்டுகள் நீடித்து உழைக்க கூடியது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சேலத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 டன் அளவுக்கு வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளியிலான ஆபரண பொருட்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆண்டு முழுவதும் சீசன் இல்லாவிட்டாலும் பண்டிகை காலங்களிலும், முகூர்த்த காலத்திலும் சேலத்தில் வெள்ளி தொழில் சுறுசுறுப்படையும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளி விலையேற்றம், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்கள் சேலத்தில் வெள்ளி தொழில் மந்த நிலை நீடித்தாலும், தொழிலாளர்களுக்கு போதுமான பணி வாய்ப்பு பெற்று வருகின்றனர்.
ஜிஎஸ்டியால் பாதிப்பு
இதுகுறித்து சேலம் மாவட்ட வெள்ளி செயின் (கொலுசு) உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் ஜெகதீசன் கூறியதாவது:
கடந்த 1982-ம் ஆண்டு தமிழக அரசு வெள்ளி தொழிலுக்கு வரி விலக்கு அளித்தது. தற்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாகவும், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தேர்தல் காரணமாக தொழிலில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களே வெள்ளி தொழில் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதால், அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, உற்பத்தி செய்யப்படும் கொலுசுகளை பல்வேறு கட்ட பணிக்காக தொழிலாளர்கள் எடுத்து செல்லும் போது, பறக்கும் படை சோதனை பெயரில் கெடுபிடி காட்டக் கூடாது. இந்தியா முழுவதும் சேலம் வெள்ளி கொலுசுக்கு அமோக வரவேற்பு உள்ளதால், இத்தொழில் மேம்பட அரசு நலத்திட்டங்களையும், தொழில் சார்ந்த உதவிகளை செய்து கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சேலம் செவ்வாய்ப்பேட்டையில் வெள்ளி கொலுசு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT