Last Updated : 30 Jan, 2019 12:30 PM

 

Published : 30 Jan 2019 12:30 PM
Last Updated : 30 Jan 2019 12:30 PM

மங்களம் அருவிக்குச் செல்ல கரடுமுரடான சாலை

பச்சமலையில் பாய்ந்தோடும் மங்களம் அருவிக்குச் செல்லும் சாலை கரடுமுரடாக இருப்பதால், தார் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பச்சமலை. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,072 மீ உயரத்திலுள்ள இம்மலைப்பகுதியில் 35 காப்பு காடுகளும், வண்ணாடு, தென்பர நாடு, ஆத்திநாடு, கோம்பை ஆகிய 4 மலை நாடுகளுக்கு உட்பட்ட ஏராளமான கிராமங்களும் உள்ளன. இங்கு பெய்யக்கூடிய மழைநீர், மலைகளின் வழியாக பயணித்து சின்ன மங்களம் அருகே மங்களம் அருவியாக மாறி கீழ்நோக்கி பாய்கிறது.

பச்சமலையின் பிரதான சுற்றுலா தலமான டாப் செங்காட்டுப்பட்டியில் இருந்து 13 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த அருவியில், கடந்த 2014-ம் ஆண்டு சூழல் சுற்றுலா திட்டத்தின் கீழ் நுழைவுவாயில், படிக்கட்டுகள் அமைத்தல், நீர்வீழ்ச்சிக்கு அருகே இரும்பு தடுப்புகள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் பிப்ரவரி வரை இந்த அருவியில் நீரோட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் திருச்சி, நாமக்கல், பெரம்பலூர், சேலம் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் இங்கு வந்து குளித்து, மகிழ்ந்து செல்கின்றனர்.

எனினும், சின்ன மங்களம் பிரதான சாலையில் இருந்து மங்களம் அருவிக்குச் செல்லும் சாலை கரடு, முரடாக இருப்பதால், கார் உள்ளிட்ட வாகனங்களில் சுற்றுலா பயணிகளால் அங்கு செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்லும்போது தடுமாறி கீழே விழுந்து காயமடையும் நிலை உள்ளது.

எனவே, கரடு, முரடான பாதை வழியாக சுமார் 1.5 கி.மீ தூரம் நடந்து, அருவிக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே,

மங்களம் அருவிக்குச் செல்ல தார் சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என சுற்றுலா பயணிகளும், பச்சமலை பகுதி மக்களும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாததால் சுற்றுலா பயணிகளின் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மங்களம் அருவி அமைந்துள்ள இடமும், அதன் பராமரிப்பும் திருச்சி மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அருவிக்கு செல்லக்கூடிய சாலை அமைந்துள்ள பகுதி சேலம் மாவட்ட வனத்துறையின் கட்டுப்பாட்டில் வருகிறது. இதுதவிர, சின்ன மங்களம் பிரதான சாலையில் இருந்து மங்களம் அருவிக்குச் செல்லக்கூடிய சாலையை ஒட்டிய நிலங்கள், தனி நபர்களுக்கு சொந்தமாக உள்ளதால் அதனை விரிவுபடுத்துவதிலும் சிக்கல் உள்ளது. இதுபோன்ற காரணங்களால் இங்கு தார்சாலை அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. எனினும், சுற்றுலா பயணிகளின் நலன்கருதி, தார் சாலை அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x