Published : 04 Jan 2019 03:20 PM
Last Updated : 04 Jan 2019 03:20 PM
2018 ஆம் ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் அன்று, தமிழக அரசு 'பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு' என்ற முழக்கத்தை முன்வைத்து ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்து உத்தரவிட்டது. இது ஜனவரி 1, 2019 ஆம் ஆண்டு அமலுக்கு வரும் என்றும் தெரிவித்தது. இடையில், 6 மாதங்கள் இருந்த நிலையில், ஜனவரி 1 ஆம் தேதி தடை அமலுக்கு வந்த நாளன்று தான் அதுகுறித்த பேச்சுகள் எங்கும் அதிகமாக ஒலிக்கத் தொடங்கியது. இன்றுடன் 4 நாட்களாகிவிட்டது.
வணிக வளாகங்கள், கடைகள், உணவகங்களில் மாநகராட்சி அதிகாரிகள், உணவுத்துறை, சுகாதார துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம் என பல்துறை அதிகாரிகள் அடங்கிய 10,000 குழுவினர் தமிழகம் முழுவதும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மண்டல வாரியாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகவும் தமிழக அரசு தெரிவிக்கிறது.
கடந்த 3 நாட்களில் சென்னை மாநகராட்சியில் மட்டும் 21.67 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். தமிழ்நாடு பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம், ஜார்ஜ் டவுன் பிளாஸ்டிக் விற்பனையாளர்கள் சங்கம் என பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பிளாஸ்டிக் உற்பத்தியை நிறுத்தியுள்ளனர்.
பிளாஸ்டிக் தடை குறித்த தமிழக அரசின் அரசாணையில், "பால், தயிர், எண்ணெய், மருத்துவ பொருட்கள் உறைகள் தவிர, தடிமன் வேறுபாடின்றி மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், பிளாஸ்டிக் தட்டு, பிளாஸ்டிக் தேநீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் குவளை, பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல், பிளாஸ்டிக் கைப்பை, பிளாஸ்டிக் கொடி உள்பட 14 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பால் மற்றும் பால் பொருட்களை பேக் செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தயாரித்து ஏற்றுமதி செய்யப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், உற்பத்தி நிறுவனத்தில் 'பேக்' செய்ய பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் மக்கும் பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படுகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டு நான்கு நாட்களான நிலையில், பெரும்பாலான உணவகங்கள், கடைகளில் மாற்றுப் பொருட்கள் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். வாழை இலை, பாக்கு மர இலை, மந்தார இலை, அலுமினியத் தாள், காகிதங்கள், பனை ஓலை பொருட்கள், தாமரை இலை, மரக்கரண்டி, மட்பாண்டம் உள்ளிட்ட மாற்றுப் பொருட்களை வியாபாரிகள் நாட தொடங்கியுள்ளனர். மக்களும் துணிப்பைகள், உணவுப்பொருட்களுக்கு வீட்டிலிருந்து பாத்திரங்கள் கொண்டு செல்லுதல் என பிளாஸ்டிக் தடைக்கு வரவேற்பு அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆனாலும், மாற்றுப் பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, விலை உயர்வு ஆகிய சிரமங்களை எதிர்கொள்வதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெரம்பூர் பகுதியை சுற்றியுள்ள கடைகளில் பிளாஸ்டிக் தடையால் ஏற்பட்டுள்ள மாற்றங்களை காண அங்கு சென்றோம்.
சிறியளவில் பேக்கரி கடை நடத்தி வரும் வியாபாரி ஒருவர் கூறுகையில், "நான் சில பொருட்களுக்கு அலுமினியத் தாள் பயன்படுத்த தொடங்கியுள்ளேன். தடை அமலுக்கு வருவதற்கு முன்பே இந்த மாற்றுப் பொருள்களின் உற்பத்தியை பெருக்கியிருக்க வேண்டும். அலுமினியத் தாள் ஒரு கவர் ரூ.1.50-க்கு விற்கப்படுகின்றது. அதை மொத்தமாக வாங்குவதற்கு கட்டுப்படியாகவில்லை. பொதுமக்கள் பெரும்பாலான அளவில் துணிப்பை கொண்டு வருகின்றனர். துணிப்பைக்கு தட்டுப்பாடு நிலவுகிறது" என்கிறார்.
சிறு சிறு சாலையோர உணவுக்கடைகளில், வாழை இலையில் உணவுப்பொருட்களை மடித்துத் தருகின்றனர். ஆனால், சாம்பார், சட்னி உள்ளிட்டவற்றை எவற்றில் கொடுப்பது என்பதில் மாற்று இல்லாமல் இருப்பதாக கூறும் வியாபாரிகள், அதற்கு குறைவான விலையில் மாற்று வழியை கண்டறிய வேண்டும் என்கின்றனர். வாழை இலை ஒன்று 15 ரூபாய் வரை விலை போவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
பேக்கரி கடை நடத்தி வரும் பாபு என்பவர் தெரிவிக்கையில், "ஏற்கெனவே வியாபாரத்திற்காக வாங்கிய பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தி வருகிறோம். மாற்றுப் பொருட்கள் எப்போது பரவலாக கிடைக்கும் என்பது தெரியவில்லை. சிறியளவிலான துணிப்பைகள் ஒரு கிலோ ரூ.180 ஆகிறது. கடந்த இரண்டு நாட்களாக மாற்றுப் பொருட்கள் இல்லாமல் வியாபாரமே இல்லை" என்கிறார்.
சில மீன் கடைகளில் பொதுமக்கள் மீன்கள் வாங்கவும் வீட்டிலிருந்து பாத்திரங்கள் எடுத்து வருவதை காண முடிகிறது.
இறைச்சிக் கடை நடத்தி வரும் ரமேஷ்பாபு என்பவர், இறைச்சிகளை காகிதத்தின் மீது மந்தார இலைகளை வைத்து மடித்துத் தருகிறார். "மந்தார இலை ஒரு கட்டு ரூ.170. பிளாஸ்டிக் பை சுத்தமாக பயன்படுத்துவதில்லை. சிலர் வீட்டிலிருந்து பாத்திரங்கள், பைகள் கொண்டு வருகின்றனர். மக்கள் பெரும்பாலும் விழிப்புணர்வு அடைந்திருக்கின்றனர். பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்தது நல்லது தான். நமக்கு முந்தைய தலைமுறையினர் பிளாஸ்டிக் இல்லாமல் தான் வாழ்ந்திருப்பர். அதை நினைத்துப் பார்த்தாலே பிளாஸ்டிக்கை உபயோகிக்கக் கூடாது என்ற மனநிலை மக்களுக்கு வந்துவிடும்" என தெரிவித்தார்.
"பிளாஸ்டிக் தடை வந்ததிலிருந்து காய்கறிகள் வாங்க வீட்டிலிருந்தே பை கொண்டு செல்கிறோம். மாவு வாங்க பாத்திரங்கள் கொண்டு செல்கிறோம். பெரிய சூப்பர் மார்க்கெட்டுகளில் ரூ. 20 அளவிலான துணிப்பைகள் விற்கப்படுகின்றன" என காய்கறிகள் வாங்க வந்த ஒருவர் கூறுகிறார்.
பிளாஸ்டிக்குக்கு பதிலாக கிடைக்கும் மாற்றுப்பொருட்கள் எங்கு கிடைக்கும், அதன் விலை குறித்த விழிப்புணர்வே வியாபாரிகளுக்கும் மக்களுக்கும் அதிகமாக தேவைப்படுகிறது. அதனால், மாற்றுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், அவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்கள், அவர்களின் தொடர்பு எண் மற்றும் முகவரி ஆகியவற்றை மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் பிளாஸ்டிக் தடை குறித்த விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட www.plasticpollutionfreetn.org இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதை தொடர்புகொண்டு மாற்றுப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. அந்த இணையதளத்தில் 650-க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் விவரங்கள் உள்ளன இவை அனைத்தும் சிறு, குறு நிறுவனங்கள்.
மாற்றுப் பொருட்கள் பரவலாக்கப்படுவது குறித்து நம்மிடம் பேசிய, பிளாஸ்டிக் தடையை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள 3 மண்டல ஒருங்கிணைப்பாளர்களுள் ஒருவரான ஐஏஎஸ் அதிகாரி அமுதா, "என்னென்ன மாற்றுப் பொருட்கள் என்பதில் குழப்பம் இல்லை. கடைகளில் பரவலாக மஞ்சப்பைகள், துணிப்பைகள் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. வீட்டிலிருந்து பை கொண்டு சென்றால் பிரச்சினையே இல்லை. இயற்கையை பாதுகாப்பது அனைவருக்குமான கடமை. இதனை அனைவரும் இணைந்துதான் செய்ய முடியும். தவிர்க்கப்படக்கூடிய வெறும் 14 பிளாஸ்டிக் பொருட்கள் தான் தடை செய்யப்பட்டிருக்கிறது. எல்லா பிளாஸ்டிக் பொருள்களும் இல்லை. பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக பயன்படுத்த மாட்டோம் என மக்கள் நினைக்க வேண்டும்" என அமுதா தெரிவித்தார்.
தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT