Last Updated : 05 Sep, 2014 03:19 PM

 

Published : 05 Sep 2014 03:19 PM
Last Updated : 05 Sep 2014 03:19 PM

மதிப்புக்குரிய ஆசிரியர்கள் கவனத்துக்கு... ஒரு சம்பவம், ஒரு செய்தி, ஓர் உத்தரவு!

எனது முதல் வகுப்பு ஆசிரியர் பெயர் பத்மா. பத்மா மிஸ்ஸை அடிக்கடி நான் நினைத்துக் கொள்வேன். நம்மில் பலரும் அப்படித்தான். நமக்கு பிடித்தமான ஆசிரியரை என்றும் நினைவில் இருந்து நீக்குவதில்லை. ஒரு குறிப்பிட்ட ஆசிரியரை மட்டும் வாழ்நாள் முழுக்க நினைத்துக் கொண்டிருக்கிறோம் என்றால் அது நம் வாழ்வில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கம். எங்கேயாவது நம் ஆசிரியரை பார்த்துவிட்டால், ஒரு நிமிடம் குழந்தையாக மாறி அவர் முன் செல்லும்போது பழைய மாணவனாகவே கையை தூக்கி நெற்றியில் வைத்து 'குட் மார்னிங் மிஸ்' சொல்வோமே, அந்த ஒரு செயல்போதும் ஆசிரியருக்கும் - நமக்கும் இடையேயான பந்தத்தை சொல்வதற்கு. ஆனால், ஐந்து விரல்களும் ஒரே மாதிரி இல்லாததுபோல், எல்லாவற்றிற்கும் விதிவிலக்கு இருக்கிறது. ஒரு சம்பவம், ஒரு செய்தி, ஓர் உத்தரவு குறித்து இங்கே பதிவிடுவது அவசியம் என நினைக்கிறேன்.

ஒரு சம்பவம்:

அம்மா: "புக்ஸெல்லாம் குடுத்து ரெண்டு, மூணு மாசம்தான் ஆச்சு. அதுக்குள்ள எப்படி கிழிச்சு வச்சுருக்க பாரு. என்னதான் பண்ணுவ?"

மகள்: "அம்மா, நான் கிழிக்கல. எங்க மிஸ் கரெக்‌ஷன் போட்டுவிட்டு புக்ஸ தூக்கி தூக்கி போடுவாங்க. அதனாலதான் கிழியுது. முகில்வண்ணன் மட்டும் மிஸ் புக்க எரியறதுக்கு முன்னாலயே கேட்ச் பிடிக்க ரெடியா நின்னு பிடிச்சுடுவான். அதனால அவன் புக் மட்டும் இன்னும் நல்லா இருக்கு."

ஒரு செய்தி:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருப்புறம்பியத்தில் உள்ள தனியார் பள்ளியில் இரும்பு ஸ்கேலால் ஆசிரியை தாக்கியதில் 2-ம் வகுப்பு மாணவனின் பார்வை பறிபோனது.

ஓர் உத்தரவு:

பள்ளிகளில் மாணவ, மாணவியரை அடிக்கக்கூடாது; அவர்கள் மனம் வருந்தும்படி, ஆசிரியர்கள் திட்டக் கூடாது என்பது ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிமுறை. இருப்பினும், அதை மீண்டும் வலியுறுத்தும் வகையில் "எக்காரணத்தை கொண்டும் மாணவர்களை மனரீதியாக, உடல் ரீதியாக துன்புறுத்தக் கூடாது. பிரம்பு, கம்பு மற்றும் ஸ்கேல் போன்றவற்றால், அடிக்கக்கூடாது. கடும் வார்த்தைகளில் திட்டுதலும் கூடாது என, தனியார் பள்ளிகளை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் எச்சரித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆசிரியர்களை கொண்டாடும் தினத்தில் ஆசிரியர்களை இழிவுபடுத்த வேண்டும் என்பது இந்தப் பதிவின் நோக்கமல்ல. ஆனால், குழந்தைகளை திட்டுவது, அடிப்பது, வன்மையாக தண்டிப்பது ஏன் என பகுப்பாய்ந்து பார்க்க வேண்டும்.

ஆசிரியர்களும் மனிதர்கள்தானே!

இதுபற்றி உளவியல் நிபுணர் டாக்டர் அபிலாஷா கூறும்போது, "நம் சமூகத்தில் ஆசிரியர்களுக்கு முன்பு இருந்த அங்கீகாரம் இப்போது இல்லை. பெரும்பாலான தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் இப்போது, மார்கெட்டிங் எக்ஸிகியூடிவ்கள் போல் டார்கெட் நோக்கி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். ரிசல்ட் ஓரியண்டடா ஒர்க் பண்ணுங்க என்பதே அவர்களுக்கான அட்வைஸ். அவற்றை எட்ட ஆசிரியர்கள் மாணவர்களிடம் நிறைய கெடுபிடி காட்ட வேண்டியிருக்கிறது. நிர்வாக நெருக்குதலால் மாணவர்களை கடிந்து கொண்டால், மாணவர்களே மிரட்டுகின்றனர். இல்லையென்றால் பெற்றோரை கூப்பிட்டு வந்து, இத பாருங்க பையனை அடிக்கற வேலையெல்லாம் வேணாம்னு சொல்லிட்டுப் போகச் சொல்றாங்க.

வீட்டில் ஒரு சராசரி பெண்ணாக அன்றாட வேலைகளை பார்த்துவிட்டு, பள்ளியில் நிர்வாகத்திடம் படாதபாடு பட்டு, ஒரு நாளைக்கு 5 முதல் 6 வகுப்புகள் பாடம் எடுத்து உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் கலைத்து விடுகின்றனர்.

அரசுப் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இப்படியெல்லாம் நெருக்கடி இல்லை. அவர்கள் பாடு கொண்டாட்டம்தான் என்று சிலர் கூறலாம். ஆனால், அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை வேறுவிதமானது. அதுவும் ரிமோட் கிராமங்களில் உள்ள பள்ளி ஆசிரியர்கள்பாடு திண்டாட்டம்தான். ஒரு குறிப்பிட்ட சாதி அந்தப் பகுதியில் ஆதிக்கத்தில் இருக்கலாம். அதனால், அந்தப் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளிக்கு வராவிட்டாலும், படிக்காவிட்டாலும், சண்டித்தனம் செய்தாலும், ஏன் ஆசிரியரை கேலி செய்தாலும்கூட கேள்வி கேட்க முடியாது. இப்படி ஒருவர் மீது காட்ட முடியாத கோபத்தை அழுத்தத்தின் காரணமாக இன்னொருவர் மீது காட்டும்போது விபரீத விளைவுகள் ஏற்படுகின்றன என்கிறார்.

இப்படி ஏதோ உணர்ச்சி வேகத்தில், தவறு செய்து சிக்கலுக்குள்ளாகும் ஆசிரியர்கள் நிலை பரிதாபமானதே. ஆசிரியர்களும் மனிதர்கள் தானே. அவர்களுக்கும் வடிகால் தேவையே. ஆசிரியர்களுக்கு அவ்வப்போது மன அழுத்த மேலாண்மை பயிற்சி வகுப்புகளை நடத்துவது அவசியம். உளவியல் ரீதியாக அணுகினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காணலாம். புத்தகத்தை தூக்கு எறிவதும், இரும்பு ஸ்கேலை எறிந்து காயப்படுத்துவதும் ஒருவிதமான மன அழுத்தத்தின் விளைவே. ஆசிரியர்களுக்கு, நம் சமூகத்தில் முன்பிருந்த அதே அங்கீகாரம் திரும்பத் தரப் பட வேண்டும். ஆசிரியர்கள் மார்கெட்டிங் வேலை செய்பவர்கள் அல்ல என்பதை நிர்வாகம் உணர வேண்டும். அப்போது சம்பவம், செய்தி, உத்தரவு எதற்குமே இடமிருக்காது.

'மாணவர்களை நான் அடித்ததே இல்லை'

சென்னையில் மாநகராட்சிப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு மேலாக ஆசிரியராக பணி புரிந்து ஒய்வு பெற்ற ஆசிரியை பிரேமா நாராயணன் (72), தனது பணிக்காலத்தில் ஒரு முறைகூட எந்த ஒரு குழந்தையயும் அடித்ததில்லை என்கிறார்.

அவருக்கு மட்டும் எப்படி அது சாத்தியமாயிற்று. அவர் சொல்லும் அறிவுரை: "நாம் சொல்வதை கேட்க, நம் உத்தரவுகளுக்கு பணிவதற்கே மாணவர்கள் இருக்கிறார்கள் என ஆசிரியர்கள் நினைத்தால் அது தவறான அணுகுமுறை. பள்ளியில் கற்றல் இருவழியில் நடைபெறுகிறது. ஆசிரியரிடமிருந்து மாணவனும், மாணவனிடம் இருந்து ஆசிரியரும் கற்றுக் கொள்கின்றனர். மாணவர்களின் விருப்பம் அறிந்து அவர்கள் போக்கில் பாடகங்களை கற்றுத்தர வேண்டும்.

மாணவர்களே, சமூகத்தில் என்ன டிரெண்ட் என்பதை ஆசிரியர்களுக்கு கற்றுத்தருகிறார்கள். எனவே திறந்த மனதுடன் இருங்கள். மாணவன் ஒழுங்கீனமாக இருந்தால் ஏன் கோபப்பட வேண்டும். அவர்கள் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கத்தானே நாம் இருக்கிறோம். அப்புறம் எதற்காக கோபம். நாம் புத்தகங்களை தூக்கி எறிந்தால் அவன் எதிர்காலத்தில் கல் வீசுவான், நாம் அவனை அடித்தால் பின்னொரு நாளில் அவன் சமூக விரோதியாகக்கூட மாறலாம்.

எனவே, கற்பித்தலை எளிமைப்படுத்துங்கள். மாணவர்களோடு நிறைய உரையாடுங்கள். அவர்கள் சொல்வதை பொறுமையாகக் கேளுங்கள். தவறு செய்தால் தண்டிக்காதீர்கள் ஆனால், கண்டியுங்கள் ஓர் அன்னை போல்" என சொல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x