Published : 22 Sep 2014 11:54 AM
Last Updated : 22 Sep 2014 11:54 AM
தீபாவளி பண்டிகையையொட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் இந்த ஆண்டு பேன்ஸிரக பட்டாசு விற்பனை அதிகரித்துள்ளது.
தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளில் மட்டுமன்றி பல்வேறு விழாக்களில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது சமுதாயத்தில் வழக்கமாக மாறியுள்ளது. சீசன் தொழிலாக இருந்த பட்டாசுத் தொழில் தற்போது முழுநேரத் தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு பட்டாசு தேவை அதிகரித்துள்ளது.
நாட்டின் ஒட்டுமொத்த பட்டாசு தேவையில் 90 சதவீதம் விருதுநகர் மாவட்டம், சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள 800-க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூலம் நிறைவு செய்யப்படுகிறது.
அலுமினியம் பாஸ்பேட், வெடி உப்பு எனப்படும் பொட்டாஷியம் நைட்ரேட், பச்சை உப்பு எனப்படும் பேரியம் நைட்ரேட், சிவப்பு உப்பு எனப்படும் ஸ்ட்ரான்ஷியம் நைட்ரேட், அலுமினிய கம்பி, ஸ்பார்க்லர் ஆகியவற்றை குறிப்பிட்ட சதவீதத்தில் கலந்து பலவிதமான பட்டாசு ரகங்கள் தயாரிக்கப்பட்டுகின்றன.
இந்த ரசாயனங்களைப் பயன்படுத்தி சத்தம் ஏற்படுத்தும் பட்டாசுகள், ஒளி ஏற்படுத்தும் பட்டாசுகள், இவை இரண்டும் இணைந்த பட்டாசுகள் என்று 3 வகையிலான பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன.
இதில் ஒவ்வொரு வகையிலும் சுமார் 200 முதல் 250 வகையிலான பட்டாசு ரகங்கள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. தீபாவளி பண்டிகையே பட்டாசு உற்பத்தியின் இலக்கு என்பதால் விருதுநகர் மாவட்ட பட்டாசுத் தொழிற்சாலைகளில் உற்பத்தி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
பெரும்பாலான பட்டாசுத் தொழிற்சாலைகளில் தற்போது மத்தாப்பு மற்றும் பேன்ஸிரக வெடிகள் தயாரிப்புப் பணிகளே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக, விசில் போன்ற ஒலியெழுப்பும் பட்டாசு வகைகளும், வானில் சென்று பல வண்ணங்களை உமிழ்ந்தபடி வெடித்துச் சிதறும் ‘மணி மருந்து’ நிரப்பப்பட்ட பட்டாசு வகைகளும் தற்போது அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன. மேலே சென்று வெடிக்கும்போது கண்ணைக் கவரும் வகையில் பல வண்ணங்களை உமிழ்வது பேன்ஸிரக பட்டாசுகளின் சிறப்பு.
அதிக சத்தம் எழுப்பும் பட்டாசு ரகங்களைவிட இந்த ஆண்டு பேன்ஸிரக பட்டாசுகளே அதிகம் விற்பனையாகின்றன. சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் இந்த ஆண்டு பேன்ஸிரக பட்டாசு விற்பனை இருக்கும் என்று பட்டாசு வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT