Published : 02 Dec 2018 12:00 PM
Last Updated : 02 Dec 2018 12:00 PM

பாகிஸ்தானும் தீவிரவாதத்துக்கு எதிரான போரும்

மும்பையில் பாகிஸ்தான் தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலின் 10-வது நினைவு தினத்தை இந்தியா கடந்த 26-ம் தேதி அனுசரித்தது. அதற்கு சில தினங்களுக்கு முன்பு, அமெரிக்காவின் 9/11 தீவிரவாத தாக்குதலில் பாகிஸ்தானியர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும், தீவிரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையில் பாகிஸ்தான் பங்கேற்றதால் 75 ஆயிரம் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் 12,300 கோடி டாலர் அளவுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டதாகவும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியிருக்கிறார்.

இந்த புள்ளி விவரத்தை அவர் எங்கிருந்து பெற்றாரோ தெரியாது, ஆனால், தீவிரவாதிகளுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் அடைக்கலம் கொடுத்ததால், பாகிஸ்தானுக்கு உண்மையிலேயே பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான நாடுகள், தீவிரவாதத்தின் மையமாக பாகிஸ்தான் இருப்பதாக நினைக்கின்றன. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கு அது மிகவும் தாமதமாக இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

கடந்த 15 ஆண்டுகளாக, தீவிரவாதத் துக்கு எதிரான போரில் ஒத்துழைப் பதற்காக பாகிஸ்தானுக்கு 3,300 கோடி டாலர் கொடுத்திருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியிருக்கிறார். `இனிமேல் பாகிஸ்தானுக்கு கோடிகளில் நிதியை அள்ளித் தர மாட்டோம். எங்களி டமிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு, பதிலாக ஒன்றுமே செய்யவில்லை அந்த நாடு. பின்லேடன் ஒரு முக்கிய உதாரணம்.

மற்றொரு உதாரணம் ஆப்கானிஸ்தான்.

அமெரிக்காவிட மிருந்து பணத்தைப் பெற்றுக் கொண்டு திருப்பி எதுவுமே செய்யாத பல நாடு களில் பாகிஸ்தானும் ஒன்று. இனி அது நடக்காது.’ என ட்விட்டரில் கூறியிருக் கிறார் ட்ரம்ப். 2018-ம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்தே, தீவிரவாதத் துக்கு எதிரான போரில் பாகிஸ்தான் எந்த உதவியுமே செய்யவில்லை என அடிக்கடி கூறிவந்தார் ட்ரம்ப்.

அமெரிக்கா மீதான 9/11 தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என இம்ரான் கூறி யிருப்பது உண்மைதான். அதில் பங் கேற்ற அத்தனை தீவிரவாதிகளும் சவுதியை சேர்ந்தவர்கள். ஆனால், இந்த தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட காலித் ஷேக் முகமது பாகிஸ்தானை சேர்ந்தவன். பாகிஸ்தானில் பதுங்கி யிருந்த இவனை, கடந்த 2003-ம் ஆண்டு ஐஎஸ்ஐ உதவியுடன் சிஐஏ கைது செய்ததையும் அவன் இப்போது அமெரிக்காவின் மிகுந்த பாதுகாப்பான கவுன்டனாமோ பே சிறையில் வைக்கப் பட்டு இருப்பதையும் இம்ரான்கான் மறந்துவிட்டார். அதேபோல், அல் காய்தா தலைவன் ஒசாமா பின்லேடன், அப்போடபாத்தில் பாகிஸ்தான் ராணுவ முகாமுக்கு அருகில் தங்கியிருந்ததை யும் அவர் மறந்துவிட்டார்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், ராணுவம், ஐஎஸ்ஐ-யின் ஆதரவு இருந்தால்தான் சாத்தியம். அதற்கு இம்ரான் கானும் விலக்கல்ல. இந்திய நிலைகள் மீதும் எல்லையில் உள்ள இந்தியர்கள் மீதும் தொடர்ந்து நடந்து வரும் தாக்குதல்களுக்கு ஐஎஸ்ஐ ஆதரவு இருப்பது எல்லோ ரும் அறிந்த ஒன்றுதான்.

மும்பை தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு தாக்குதல்களை நடத்திய லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதும் எல்லோருக்குமே தெரியும். தீவிரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, தண்டிக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆனால், பயங்கர தீவிரவாதியான ஹபீஸ் சையது போன்றவர்கள், பாகிஸ் தானில் எந்தவித பயமும் இல்லாமல் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கை களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

உலகம் முழுவதும் நடக்கும் தீவிரவாத செயல்களில் பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்புகளால், அப்பாவி பொதுமக்கள் பலியாகிறார்கள். பாகிஸ் தானின் வட கிழக்குப் பகுதிகளில், அமெரிக்காவின் அதிபராக புஷ் இருந்த காலம் தொட்டு, இன்னமும் ட்ரோன்கள் மூலம் ஏவுகணைகளை வீசி பாகிஸ்தான் தீவிரவாதிகளைக் கொன்று வருகிறது அமெரிக்கா. தீவிரவாதிகள் குறித்த துப்பு கிடைத்தும் நடவடிக்கை எடுக்காவிட்டால், நாங்கள் எடுப்போம் என அமெரிக்கா கூறி வருகிறது.

புஷ் முதல் ஒபாமா, ட்ரம்ப் வரை ட்ரோன் தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. `உள்நாட்டில் உன்னால் தீவிரவாதத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், நாங்கள் தாக்குவோம்.. அப்புறம் இறையாண்மை கெட்டுவிட்டதாக புலம்பக் கூடாது.’ இதுதான் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா சொல்ல வரும் தகவல்.

அண்டை நாடுகளுடன் நட்புடன் இருக்கவே விரும்புவதாகவும் எல்லை யிலும் இந்தியாவுக்குள்ளும் அரங்கேறும் தீவிரவாத செயல்களுக்கும் தங் களுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறும் பாகிஸ்தானை நம்ப யாரும் தயா ராக இல்லை. பாகிஸ்தானில் நடக்க விருக்கும் சார்க் மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும் என பாகிஸ்தான் விரும்புகிறது.

ஆனால், அது நடக்க வேண்டுமென்றால், தலைவர்கள் பங் கேற்கும் கூட்டத்தில் தீவிரவாத பிரச் சினை முக்கியமான விஷயமாக விவாதிக்கப்பட வேண்டும். பிராந்திய ரீதியாக வும் உலக அளவிலும் பாகிஸ்தான் மதிக்கப்பட வேண்டுமென்றால், உள் நாட்டில் சுதந்திரமாக இயங்கி வரும் தீவிரவாத அமைப்புகளை அழித்தால் தான் அது சாத்தியமாகும் என்பதை இம்ரான் கான் உணர வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x