Published : 28 Dec 2018 06:08 PM
Last Updated : 28 Dec 2018 06:08 PM

காட்டில் தவமிருக்கும் ‘கேமரா காதலர் - ‘வைல்டு லைஃப் போட்டோகிராபியில் கலக்கும் கோவை இளைஞர்

வரலாற்றை மாற்றும் சக்தி கொண்டது புகைப்படக் கலை. நம் ஒவ்வொருவரின் வாழ்வுடன் இணைந்த புகைப்படங்கள், பல படிகளைக் கடந்து வந்துள்ளன. வரலாற்று நிகழ்வு, மனித உணர்வுகள், பொதுக்கூட்டம், தலைவர்கள், அறிவியல் சாதனங்கள் என அனைத்தையும் நமக்கு அடையாளம் காண்பித்தவை புகைப்படங்களே.பல விஷயங்களை அடுத்த தலைமுறை தெரிந்து கொள்ள உதவுவதும் புகைப்படமே. பல நூறு பக்கங்கள் எழுத வேண்டிய விஷயத்தைக்கூட ஒரு புகைப்படம் விளக்கிவிடும்.

பல கதைகளையும், தகவல்களையும் கொடுக்கும் புகைப்படங்கள், உண்மைகளைக் கண்டறியவும் உதவுகின்றன. இருபதாம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள், உலக வரலாற்றையே  மாற்றியுள்ளன. வியட்நாம் போரின்போது எடுக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் உலகையே உலுக்கியது. பல நாடுகளில் நிலவிய பஞ்சத்தை வெளிக்கொணர்ந்தவை புகைப்படங்களே.

புகைப்படக் கருவியை உருவாக்குவதற்கான முயற்சி பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தொடங்கினாலும், 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில்தான் நவீன புகைப்படக் கருவிகள் தோன்றின. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19-ம் தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. 1980-க்குப் பிறகு டிஜிட்டல் கேமராக்கள் வரத் தொடங்கின. தற்போது வரை டிஜிட்டல் கேமராக்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

100

செல்போனில் படமெடுக்கும் வசதி வந்த பிறகு, ஒவ்வொருவரும் போட்டோகிராபர்களாகிவிட்டோம். சிலர்  செல்ஃபி எடுக்காத நாளே இல்லை என்ற நிலை உருவாகிவிட்டது.

புகைப்படங்களில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. பிரஸ் போட்டோகிராபி, இன்டஸ்ட்ரியல், வைல்டு லைஃப், கிட்ஸ், நேச்சர், ஈவன்ட், ப்ராடக்ட், சினிமா, லேண்ட்ஸ்கேப், போர்ட்ரெய்ட், மேக்ரோ, ஸ்ட்ரீட் போட்டோகிராபி என பல வகைகள் உள்ளன. 
இவற்றில் சவால் நிறைந்ததாகக் கருதப்படுவது `வைல்டு லைஃப் போட்டோகிராபி’.

அடர்ந்த வனப் பகுதியில்  பல நாட்கள் காத்துக் கிடந்தாலும், சில சமயங்களில் எதிர்பார்க்கும் புகைப்படம் கிடைக்காது. அதேசமயம், எதிர்பாராத வகையில் ஒரு விநாடியில் சிறந்த புகைப்படம் கிடைக்கும்.

கோவை ராமநாதபுரத்தைச் சேர்ந்த பெருமாள் வெள்ளியங்கிரி (31), வைல்டு லைஃப் போட்டோகிராபியில் மிகுந்த ஈடுபாடு கொண்டு, சாதிக்கத் துடித்துக் கொண்டிருக்கிறார். அண்மை யில், சர்வதேச புகைப்பட சங்கம் நடத்திய `போட்டோ கிரவுட்` என்ற போட்டியில் 3-வது இடம் பிடித்துள்ளார். "புகைப்படக் கலையில் ஆர்வம் வந்தது எப்படி" என்று வழக்கமான கேள்வியுடன் அவரிடம் பேசத் தொடங்கினோம்.

போட்டோகிராபரான இன்ஜினீயர்

"சிறு வயது முதலே இயற்கை, விலங்குகள் மீது ஆர்வம் அதிகம். 2010-ல் தந்தை வெள்ளியங்கிரி இறந்துவிட்டார். தாய் சகுந்தலா பல்வேறு சிரமங்களுக்கிடையில் என்னைப் படிக்க வைத்தார். கோவையில் பி.இ. எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினீயரிங் முடித்த பின்னர், சர்வதேச ஆங்கில மொழித் திறன் தேர்வை எழுதினேன். இதன் மூலம் இங்கிலாந்தில் நியூகேஸில் நகரில் உள்ள நார்த்தம்பிரியா பல்கலைக்கழகத்தில் `எம்.எஸ்சி. எலெக்ட்ரிகல் பவர்` படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. படிப்பை முடித்த பின் கோவை திரும்பி, தனியார் நிறுவனத்தில் பணியாற்றினேன்.

புகைப்படக் கலை மீது இருந்த ஆர்வம் காரணமாக 2010-ல் நல்ல கேமராவை வாங்கினேன்.  வெயில், மழை, பனியின்போது சிறப்பாகப் படமெடுப்பது எப்படி? நல்ல ஃபிரேமிங், சிறந்த லைட்டிங் குறித்தெல்லெல்லாம் யுடியூப் மூலம் 10 மாதங்கள் கற்றுக்கொண்டேன். எடுத்த உடனேயே விலங்குகளைப் படமெடுக்க முனைவதைக் காட்டிலும், பட்டாம்பூச்சி மற்றும் பல்வேறு பூச்சியினங்களைப் படமெடுக்கலாம் என கருதினேன்.

100

331 வகை பட்டாம்பூச்சிகள்

இதற்காக சிங்காநல்லூர் குளம், குறிச்சி குளம், நீலாம்பூர் அச்சன்குளம், கோவை குற்றாலம், ஆனைகட்டி செல்லும் வழியில் உள்ள பொன்னூத்து  உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று, பட்டாம் பூச்சிகளைப் படமெடுக்கத் தொடங்கினேன். இவற்றைப் படமெடுக்க மிகுந்த பொறுமை அவசியம். நமது நிழல் பட்டாலே பறந்துவிடும் அளவுக்கு நுண்ணிய உணர்வு கொண்டவை. இது தொடர்பாக நான் ஆய்வு செய்ததில், 331 வகையான பட்டாம்பூச்சிகள் கோவையில் இருப்பது தெரியவந்தது.

கோவையைச் சேர்ந்த போர்ட்ரெய்ட் புகைப்படக் கலைஞர் வினிதா குருபரன், டெல்லியைச் சேர்ந்த இயற்கை புகைப்படக் கலைஞர் கீதா யாதவ்  ஆகியோர் மிகுந்த ஊக்கம் அளித்தனர். 2011-ல் பல்வேறு பூச்சிகள், ஈசல், வண்டுகள் உள்ளிட்டவற்றை எடுத்துக் கொண்டிருந்த நான், 2012-ல் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குச் சென்று படமெடுக்கத் தொடங்கினேன். 

வைல்டு லைஃப் போட்டோகிராபியைப்  பொறுத்தவரை, எப்போதும் ஏமாற்றத்துக்குத்  தயாராக இருக்க வேண்டும். கிடைத்தாலும்,  கிடைக்காவிட்டாலும் முயற்சியை கைவிட்டுவிடக்கூடாது. விலங்குகளைப் பார்க்க முடியவில்லையே என சோர்வடைந்துவிடக் கூடாது. தொடக்கத்தில் சாதாரண படங்களே கிடைத்தன. இரண்டு நாட்கள் காத்திருந்தாலும், திருப்தியான படம் கிடைக்காது.

மான், காட்டெருமை உள்ளிட்டவற்றை எடுத்த போதிலும், புலி, சிறுத்தையை எடுக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனினும், நான் முயற்சியைக் கைவிடவில்லை. பல நாட்கள் வனத்தில் தங்கியிருந்து, நல்ல படம் கிடைக்காமல் சோர்வடைந்து வீடு திரும்பியபோது, அம்மா என்னை உற்சாகப்படுத்தினார். பின்னர், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குச் சென்றேன்.

அங்கு சென்று 6-வது நாளில் யானைக் குடும்பத்தைப் படமெடுக்க முடிந்தது. என்னைப் பொறுத்தவரை இதுவே எனது முதல் சிறந்த படமாகும். பின்னர்,  கபினி வன விலங்குகள் சரணாலயம், நாகர்ஹோளே தேசிய பூங்கா உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று படமெடுத்தேன். தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநிலங்களில் பல்வேறு வனப் பகுதிகளுக்கும் சென்று படமெடுத்தேன். ஒரு நல்ல ஷாட் கிடைக்க 10 நாட்கள்கூட தவம் செய்வதுபோல காத்திருக்க வேணடும். வனப் பகுதிகளில் உணவு, தங்குமிடத்துக்கு அதிக செலவாகும்.

wild-4jpg

அதேபோல, உரிய அனுமதியையும்பெற வேண்டும். இதையெல்லாம், தாண்டித்தான் நல்ல படங்களை எடுக்க வேண்டும். மகாராஷ்டிரா சென்றபோது  சிங்கத்தைப் படமெடுத்தது மறக்க முடியாதது. பிற பகுதிகளில் சிங்கம், புலி, சிறுத்தை, அரிய வகை  குரங்குகள், மான்கள், யானைகள், காட்டெருமைகள் என பல வகையான விலங்குகளைப் படமெடுக்க முடிந்தது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட பல போட்டிகளில் பங்கேற்றேன்.

சர்வதேச அங்கீகாரம்

கனடா நாட்டின் நேச்சுரல் ஹேபிடேட் பத்திரிகை எனது புகைப்படத்தை தேர்வு செய்து, வெளியிட்டது. இதேபோல, அமெரிக்காவின் ஸ்மித் ஜர்னல் உள்ளிட்டவைகளும் எனது படங்களைப் பிரசுரித்துள்ளன. அண்மையில் சர்வதேச புகைப்பட சங்கம் நடத்திய `போட்டோ கிரவுட்` போட்டியில் எனது புகைப்படம் 3-வது இடத்தைப் பெற்றது.

கோவை குற்றாலம் பகுதியில் ஒரு குரங்குதீவிரமாக யோசித்துக் கொண்டிருப்பதை படமெடுத்து, அதற்கு ஒரு சிறிய கதையை எழுதி படத்துடன் அனுப்பிவைத்திருந்தேன். சர்வதேச அளவிலான போட்டியில் 3-வது இடம் பிடித்தது மகிழ்ச்சியாக உள்ளது.

2019-ல் சர்வதேச அளவில் நடைபெற உள்ள `பிபிசி அவார்டு` போட்டியில் வெல்ல வேண்டுமென்பதே எனது லட்சியம். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துகொண்டே, புகைப் படங்களை எடுத்து வருகிறேன். சில சமயம் விடுமுறை எடுத்துக்கொண்டு, வனப் பகுதிக்கு சென்று படங்களை எடுத்துள்ளேன்.

பெங்களூருவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் 'சுதிர் சிவராமன்' எனது ரோல் மாடல். அவரைப் போல சர்வதேச அளவில் பிரசித்திப் பெற்ற புகைப்படக் கலைஞராக வேண்டு மென்பதே எனது விருப்பம்" என்று முடித்துக்கொண்டார் இந்த கேமரா காதலர்.

திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் 

"புதிதாய் படமெடுப்பவர்களுக்கு  என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?" என்று கேட்டதற்கு, "புகைப்படக் கலையில்  பல பிரிவுகள் உள்ளன. அதில் ஏதாவது ஒரு பிரிவைத் தேர்வுசெய்துகொண்டு, அதில் பயிற்சி பெறுங்கள். கேமரா மற்றும் புகைப்படக் கலை தொடர்பான பல்வேறு விஷயங்களையும்  கற்றுக்கொள்ளுங்கள்.

முதலில் கேமராவைப் பற்றியும், லைட்டிங், ஃபிரேமிங், பேக்ரவுண்ட் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்தும் தெரிந்துகொண்டு, பின்னர் புகைப்படமெடுக்கத் தொடங்குங்கள். புகைப்படக் கலையின் திறனை மேம்படுத்திக் கொண்டால், நல்ல வாய்ப்புகள் உள்ளன" என்றார் பெருமாள் வெள்ளியங்கிரி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x