Published : 23 Nov 2018 06:59 PM
Last Updated : 23 Nov 2018 06:59 PM
1804 ஆம் ஆண்டு இதே நவம்பர் மாதம் உருவானதுதான் கோவை மாவட்டம். இந்தக் காலகட்டத்தை வைத்துதான் கோவை தினமாக கோவை பிரமுகர்கள் கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடி வருகிறார்கள். மாவட்டம் உருவானபோது நீலகிரி, கோவை, ஈரோடு, தாராபுரம் வரை நீண்டிருந்தது. அதற்கு முன்பு காடு அடர்ந்து கிடந்தது. ஆதிகாலத்திலோ மலையும், மலை சார்ந்த காடுகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருளர்கள், வேடுவர்கள், வேளாளர்கள் குழுவாக, கூட்டங்களாக வசித்து வந்தனர்.
கோயம்புத்தூரின் பூர்வகுடிகள் இருளர்கள். இவர்களின் தலைவன் கோவன் என்பவன் இந்த அடர்ந்த காட்டுப்பகுதியை பரிபாலனம் செய்து வந்தான். அவன் கும்பிட்டு வந்த தெய்வம் கோனியம்மன்.
கோவனின் வழி வந்த கோசர் குலத்தவர்கள் சங்க காலத்தில் இங்கே ஆட்சி புரிந்ததால் கோவன், கோனியம்மன், கோசர் பெயராலேயே கோவன்புத்தூர், கோசர்புத்தூர், கோயம்புத்தூராகி, கோவையாகி மருவியது என்பது வரலாற்று அறிஞர்களின் கூற்று. இன்றைக்கும் இவனுக்காக, அவனுக்காக, அவளுக்காக, இவளுக்காக, இவருக்காக, அவருக்காக என்பதை அவனுக்கோசரம், இவனுக்கோசரம், இவளுக்கோசரம், அவளுக்கோசரம், இவருக்கோசரம், அவருக்கோசரம் என கொங்கு மொழியில் சொற்கள் உருளுவதைக் காணலாம். அநேகமாக கோசரம் என்ற சொல் இப்படி கோவை மண்ணில் விடாப்பிடியாக உருண்டு வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
அது சரி. இதற்கு கொங்கு நாடு என எப்படி பெயர் வந்தது? மலைகளும், மலைசார்ந்த பகுதிகளான கோவையில் சோலைகளும், தேனடைகளும் அதிகம். அதைச் சுவைத்துப் பருகிய ஆதிகுடிகள் மத்தியில் சேரர் மரபை சேர்ந்த கொங்கன் என்ற அரசன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அதனால் இது கொங்குநாடு என்றும் பெயர் பெற்றதாக பேரூர் புராணம் குறிப்பிடுகிறது. இதில் ஆதி முதலான நகராக பேரூர் சொல்லப்படுகிறது.
பேரூர் புறநகரில் பொய்கைகளும், அதில் தாமரை மலர்களும், அவற்றில் அன்னப்பறவைகளும், மயில், கிளி, நாகண வாய்ப்பறவை, சக்கரவாகப்பறவை என காட்சிப்படுத்தப்படுகின்றன. வன்னி, வில்வம், கொன்றை, பாதிரி முதலிய மரங்களும் சாதி முல்லை, மல்லி முதலிய கொடிகளும் படர்ந்து நிற்கின்றன. இதில் இடைநகர், உள்நகர், பரத்தையர் வீதி, கடை வீதி, வடக்கு வீதி, தெற்கு வீதி, கிழக்கு வீதி, மேற்கு வீதி என வகைப்படுத்தப்பட்டு நட்ட நடுவே பட்டிபெருமாள் எழுந்தருளியிருக்கும் கோயில் இருக்கிறது.
கொங்கு நாட்டின் உட்பிரிவுகளில் ஒன்று ஆறை நாடு. இன்றைக்கும் கோவைக்கு மேற்கே ஆனைகட்டி மலைப்பகுதிகளில் ஆறைநாட்டுக்காடு என ஒரு பழங்குடி கிராமம் பெயர் வழங்கப்படுவது கவனிக்கத்தக்கது. இந்த ஆறைநாட்டுக்காடு மேற்கில் வெள்ளிமலை தொடங்கி கிழக்கில் அவிநாசி வரை நீள்கிறது. இதில் கிழக்குப் பாகத்தை வடபரிசார நாடு என்றும் மேற்குப் பாகத்தை பேரூர் நாடு என்றும் பெயர் வழங்கியிருக்கிறார்கள்.
கி.மு. 44 முதல் கி.பி. 54 வரை உரோமபுரி நாட்டுடன் பேரூர் நாட்டிற்கு வாணிகத்தொடர்பு இருந்தது. அக்கால ரோமானியக் காசுகள் பேரூர் நொய்யல் கரைகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கி.பி. 3 முதல் 7-ம் நூற்றாண்டு வரை பல்லவ மன்னர்கள் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழகம் முழுக்க ஆண்டுள்ளனர். கி.பி. 650-ல் அப்பர் சுவாமிகள் பேரூருக்கு வந்து சென்றுள்ளார் என பேரூர் புராணம் குறிப்பிடுகிறது.
கி.பி. 8, 9 ஆம் நூற்றாண்டுகளில் சேரர்களும், பாண்டியர்களும், அதன் பின் கங்கர்களும் பேரூர் நாட்டை ஆண்டுள்ளனர். கங்கர்கள் ஆட்சியில் சுந்தரர் கி.பி. 850-ல் பேரூர் வந்துள்ளார். கி.பி. 9 முதல் 12 வரை பேரூர் நாடு சோழர்களின் ஆட்சிக்குட்பட்டு இருந்தது. பேரூர் திருக்கோயிலின் அரத்தமண்டபம், மகாமண்டபம் சோழ நாட்டுச் சோழர்களால் கட்டப்பட்டது. அதன் பின்னர் கொங்கு சோழர்களும், கொங்கு பாண்டியர்களும். ஹொய்சாளர்களுமே மாறி மாறி இதனை ஆண்டனர்.
கி.பி. 1295-ல் அல்லாவுதீன் என்ற அரசன் தென்னாட்டு அரசர்களைத் தோற்கடித்து நாட்டைக் கைப்பற்றியதில் பழைய அரசியல் முறைகள் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டது. பிறகு விஜயநகர சாம்ராஜ்யம் நிறுவப்பட்டது. விஜயநகர அரசர்கள் ஆட்சியின் போது அருணகிரிநாதர் கி.பி. 1450-ல் பேரூர் வந்துள்ளார். 1565-ல் விஜயநகர அரசு முடிவுக்கு வந்தது. 1600-ல் கொங்குநாடு மைசூர் வசம் சென்றது. சில ஆண்டுகளில் நாயக்கர்கள் இதை வசப்படுத்தினர். இந்தக் காலத்தில் வீரசைவர் ஆச்சார்ய சாந்தலிங்கர் என்பவர் இங்கே வந்து திருமடம் அமைத்து மாணவர்களுக்கு பாடம், சாஸ்திர நூல்கள் கற்றுத் தந்திருக்கிறார்.
கி.பி. 1672-ல் மீண்டும் பேரூர் நாடு மைசூர் வசம் சென்றது. 1873 வரை சர்வமான்யமாக இருந்த பேரூரை திப்பு சுல்தான் ஜப்தி செய்து, அதில் கிடைத்த வருவாயில் ஒரு பகுதியை மட்டும் கோயிலுக்குக் கொடுத்து வந்திருக்கிறார். 1790-91ல் ஆங்கிலேயர் இப்பகுதியைக் கைப்பற்றி இதன் முழு வருவாயை கோயிலுக்கே கொடுத்துள்ளனர். 1799-ல் ஆங்கிலேயர் பேரூர் கிராமம் முழுவதும் கைப்பற்றி கோயிலுக்கு பட்டா செய்து கொடுத்து விட்டனர். 1847-ல் இந்த கிராமம் தர்மகர்த்தாக்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. பேரூர் 1607.50 ஏக்கர், மாவுத்தம்பதி 3005.77 ஏக்கர் என இரண்டு கிராமங்கள், ஒரு வாய்க்கால், இரண்டு குளங்கள், இன்னொரு குளத்தில் பாதி என இதன் பரப்பளவு நீண்டது.
கோயில் சார்ந்த, கிராமம் சார்ந்த, விளைச்சல் சார்ந்த மக்கள் வாழ்க்கை என்பது இங்கே, இந்தக் காலகட்டத்தில் தொய்வு பெற்று அதைத்தாண்டி கிழபுறமுள்ள பிரதேசம் பஞ்சாலைகள், நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள், பவுண்டரிஸ், இண்டஸ்ட்ரீஸ், இயந்திர பணிமனைகள், குடியிருப்புகள், பள்ளிகள், கல்லூரிகள் என பெருக தற்போதுள்ள கோவை நகரமும், கோவை மாவட்ட கிராமங்களும் வளம்பெற்றன. பேரூர் என்ற ஆதி கோவை நகரம் இதில் ஒரு சிறு கிராமமாக மாறி நிற்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT