Last Updated : 27 Oct, 2018 12:31 PM

 

Published : 27 Oct 2018 12:31 PM
Last Updated : 27 Oct 2018 12:31 PM

ட்ரம்ப் கெடு முடிய இன்னும் 10 நாட்கள்; கச்சா எண்ணெய் விலை உயரும் ஆபத்து: என்ன செய்யப்போகிறது இந்தியா?

நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரான் மீதும் அதனிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதும் கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டியுள்ளார். அமெரிக்க விதித்த கெடு முடிய 10 நாட்களே உள்ள நிலையில், இந்த நெருக்கடியால் மீண்டும் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொடும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்தார்.

அதன் பிறகு ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

ட்ரம்ப் மிரட்டல்

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறியவுடன் அந்த நாட்டின் மீது பொருளாதரத் தடைகளை அமெரிக்கா விதித்து வருகிறது. மேலும் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

அமெரிக்காவின் மிரட்டல்களுக்கு இடையே நவம்பரில் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஏற்கெனவே தெரிவித்துள்ளார். ஆனால் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நடவடிக்கை எடுக்கப்போவதாக ட்ரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனிடையே நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ட்ரம்ப் பேசும்போது, ”நவம்பர் 5 முதல் ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் அனைத்து பொருளாதாரத் தடைகளும் முழு வேகத்தில் விதிக்கப்படும். மேலும் ஈரானின் தவறான அணுகுமுறையால் இன்னும் கூடுதலாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும். தீவிரவாதிகளுக்கு ஆயுத உதவி வழங்கும் ஆபத்தான ஆயுதங்களை ஈரான் உற்பத்தி செய்ய நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று தெரிவித்துள்ளார்.

இதனால் நவம்பர் மாதத்துக்கு பிறகு ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு சிக்கல் ஏற்படும் என தெரிகிறது. ஈரானில் இருந்து அதிகஅளவு கச்சா எண்ணெய் வாங்கும் நாடு இந்தியா. மேலும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய்க்கு இந்தியா டாலரில் பணம் செலுத்துவதில்லை.

மாறாக இந்திய ரூபாயை கணக்கிட்டு அதற்கு நிகரான அளவு பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. ஏறக்குறைய பண்டமாற்று முறை போன்றே ஈரானிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்கிறது. இதனால் இந்தியாவின் அந்நியச் செலவாணி கையிருப்பில் எந்த பாதிப்பு இல்லாமல் உள்ளது.

கச்சா எண்ணெய் விலை உயரும்?

ஆனால் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க முடியவில்லை என்றால் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை மட்டுமே இந்தியா நம்ப வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் கச்சா எண்ணெய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டு அதன் விலை உயரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் உயர்ந்து வந்த நிலையில் தற்போது தான் நிலைமை சீரடைந்து வருகிறது. அமெரிக்காவின் தடையால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்தால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயரும் ஆபத்து உள்ளது. அதுமட்டுமின்றி ஈரான் தவிர மற்ற நாடுகளுக்கு இந்தியா டாலரில் பணம் செலுத்த வேண்டிய சூழல் இருப்பதால் நமது அந்நியச் செலவாணி கையிருப்பும் குறையும்.

இதனால் இந்திய ரூபாய் மதிப்பும் சரிவடையும் ஆபத்து இருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எனவே கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாய் மதிப்பு சரியும் ஆபத்து என்ற இரட்டை பிரச்சினையை இந்தியா எப்படி சமாளிக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x