Published : 13 Oct 2018 04:28 PM
Last Updated : 13 Oct 2018 04:28 PM
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் தாமிரபரணி மகாபுஷ்கர விழா அக்டோபர் 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில் தாமிரபரணி நதியைப் பற்றிய ஒரு பார்வை:
பொதிகை மலையில் புறப்பட்டு பாய்ந்தோடிவரும் தாமிரபரணி தமிழகத்திலேயே பிறந்து தமிழகத்திலேயே கடலில் கலக்கும் வற்றாத ஜீவ நதி. அகத்தியர் வாழ்ந்த இடமாக புராணங்களில் கூறப்படும் பொதிகை மலை பிறப்பெடுக்கும் தாமிரபரணி, மன்னார் வளைகுடாவில் கடலில் கலக்கிறது. இந்த நதி பிறக்கும் பொதிகையும், கடலில் கலக்கும் மன்னார் வளைகுடாவும் தனிச்சிறப்பு வாய்ந்தது.
மேற்குத்தொடர்ச்சி மலையில் உயிர்ச்சூழல் அதிகம் காணப்படும் பகுதி பொதிகை, இங்குள்ள தாவரங்களும், விலங்குகளும் வேறுபட்டவை. அதுபோலவே மன்னார் வளைகுடாவும், அரிய கடல்வாழ் உயிரினங்கள் வாழும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.
கடல் மட்டத்தில் இருந்து 5659 அடி உயரத்தில் உள்ள பொதிகை மலைப்பகுதியில் தான் களக்காடு - முண்டந்துறை வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. பொதிகை மலைப்பகுதியில் உள்ள காரையார் அணைக்கட்டு தாமிரபரணியை தடுக்கும் முன்பாகவே பேயார், உள்ளார், பாம்பார் உள்ளிட்ட துணை நதிகள் இதனுடன இணைகின்றன. அதன் பிறகு சேர்வலாறும் இணைகிறது. அதன் பிறகு கல்யாண தீர்த்தம், அகஸ்தியர் அருவியாக பாய்ந்து பாபநாசத்தை வந்தடைகிறது தாமிரபரணி.
பொதிகையின் அடிவாரமான பாபநாசத்தில் தாமிரபரணியின் பிரவாகம் தொடங்குகிறது. பாபநாசத்தில் தொடங்கி அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, திருப்புடைமருதூர் என பயணம் செய்யும் தாமிரபரணி அம்பாசமுத்திரம் மற்றும் சேரன்மகாதேவி வட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தை வளப்படுத்திச் செல்கிறது.
இதன் பிறகு மாஞ்சோலையில் பிறக்கும் மற்றொரு துணை நதியான மணிமுத்தாறும் தாமிரபரணியில் சங்கமிக்கிறது. இதன் பிறகு கடனாநதி, ஜம்புநதி, ராமாநதி, களக்காடு மலையில் பிறக்கும் பச்சையாறுயும் தாமிரபரணியுடன் இணைகிறது.
குற்றாலத்தில் பாய்ந்தோடும் சிற்றாறு சீவலப்பேரியில் தாமிரபணியில் கலக்கிறது. பின்னர் நெல்லை மற்றும் பாளையங்ககோட்டையைக் கடந்து தூத்துக்குடிக்குள் கால் பதிக்கிறது தாமிரபரணி. இதன் பிறகு முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார் திருநகரி வழியாக சென்று புன்னக்காயல் அருகே மன்னார் வளைகுடாவில் கலக்கிறது.
காரையார், சேர்வலாறு, மணிமுத்தாறு என பெரிய அணைகள் மலைகளிலும், கோடைமேலழகியான், கன்னடியன், அரியநாயகிபுரம், பழவூர், சுத்தமல்லி, மருதூர், ஸ்ரீவைகுண்டம் என பல தடுப்பணைகளும் சமவெளிப்பகுதியில் அமைந்துள்ளன. ஆற்றின் துணை நதிகளும் அதனுடன் சேர்த கால்வாய்களும் தாமிரபரணி தண்ணீரை குளங்களில் நிரப்பி விவசாயத்தை செழிக்கச் செய்கின்றன.
பல நூற்றாண்டு காலம் நீண்ட வரலாறு கொண்ட தாமிரபரணி பாசனப்பகுதி தமிழகத்தின் மிக நீண்ட நீர்ப்பாசன திட்டத்துக்கு எடுத்துக்காட்டாகும். செல்லும் இடமெல்லாம் வளம் சேர்க்கும் தாமிரபரணி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் விவசாயத்தின் ஆதாரம். நெல், வாழை, தென்னை, காயற்கறிகள் பழங்கள் என நெல்லை மாவட்ட விவசாய உற்பத்தியின் உச்சமான பகுதி.
செல்லும் இடமெல்லாம் வளர் சேர்க்கும் தாமிரபரணி புன்னக்காயலில் மன்னார் வளைகுடா கடலில் கலக்கிறது. அது கலக்கும் மன்னார் வளைகுடாவும் அரிய உயிர்ச்சூழல் நிறைந்த பகுதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT