Last Updated : 17 Oct, 2018 02:42 PM

 

Published : 17 Oct 2018 02:42 PM
Last Updated : 17 Oct 2018 02:42 PM

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் ஆபத்தில் உள்ளதா? - பாதிப்பை சந்திக்கும் காஞ்சிபுரம், திருவள்ளூர்

2020-ம் ஆண்டில் சென்னையிலும் நிலத்தடி நீர் வற்றி உப்பு நீராகி விடும் எனவும் நிதிஆயோக் ஏற்கெனவே எச்சரித்துள்ளது. சென்னையில் நிலத்தடி நீரில் கடல் நீர் கலந்து வரும்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் தான் கைகொடுத்து வருகின்றன. அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர்  உறிஞ்சப்படுவதால் அந்த மாவட்டங்களும் தற்போது சுரண்டலுக்கு ஆளாகி வருகின்றன.

நிலத்தடி நீர் சட்டவிரோதமாக எடுக்கப்படுவதைத் தடுக்க உத்தர விடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வணிக நோக்கில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதைத் தடை செய்வதுடன், வணிக நோக்கத் துக்காக நிலத்தடி நீர் உறிஞ்சப் படுவதை முறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இதையடுத்து திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம், சம்பந்தப்பட்ட இடங்களை ஆய்வு செய்து, பூந்த மல்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சியதாகக் கூறி 140-க்கும் மேற்பட்ட ஆழ்குழாய் கிணறுகளை மூடிவிட்டது.

நிலத்தடி நீர் உறிஞ்சுவதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சுமார் 4,000-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதுபோலவே தண்ணீர் கேன் விற்பனையாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இருப்பினும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் புறநகர் பகுதிகளில் குடிநீர் தேவைக்காக தனியார் தண்ணீர் லாரிகளை நம்பியிருப்பவர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இதுமட்டுமின்றி தண்ணீர் கேன் விற்பனையாளர்கள் போராட்டத்தால் குடிநீருக்கே மக்கள் அல்லல்படும் சூழல் உள்ளது.

இந்தநிலையில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் எந்த அளவுக்கு உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியா இதுவரை இல்லாத அளவு மிக மோசமான தண்ணீர் பிரச்சினையை சந்தித்து கொண்டிருப்பதாகவும், 2020-ம் ஆண்டில் சென்னையிலும் நிலத்தடி நீர் வற்றி உப்பு நீராகி விடும் எனவும் நிதிஆயோக் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.

சென்னை குடிநீர் வாரியம் சென்னையின் நிலத்தடி நீர் மட்டத்தை, 145 இடங்களில் உள்ள கண்காணிப்பு கிணறுகள் மூலம் ஆய்வு செய்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டமானது ஆண்டுதோறும், பருவநிலைக்கு ஏற்றவாறு மாறக்கூடியது. டிசம்பர் 2015 மற்றும் டிசம்பர் 2016 ஆகிய மாதங்களில் பதிவுசெய்யப்பட்ட நிலத்தடி நீர்மட்ட அளவில், கடந்த டிசம்பரில் 0.97 மீட்டர் முதல் 2.92 மீட்டர் வரை நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது.

சென்னையில் ஆண்டு சராசரி மழையளவு 1200 மிமீ. தென்மேற்கு பருவமழையின்போது 400 மிமீ, வடகிழக்கு பருவமழையின்போது 800 மிமீ என்ற அளவில் பெய்யும். இந்த காலகட்டங்களில் சென்னையில் நிலத்தடி நீர் செறிவூட்டுதல் நடைபெறுகிறது. இது சரியான முறையில் நடைபெறவில்லை என்றால் சிக்கல் ஏற்படுகிறது.

சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறித்து எம்ஐடிஎஸ் எனப்படும் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தின் (மெட்ராஸ் இன்ஸ்ட்டியூட் ஆப் டெவலப்மெண்ட் ஸ்டடிஸ்) பேராசிரியரும், நீரியல் நிர்வாகத்துறை வல்லுநருமான சிவசுப்பிரமணியனை தொடர்பு கொண்டு கேட்டோம். அவர் கூறியதாவது:

சென்னையை பொறுத்தவரை கடல்நீர் உட்புகுந்துள்ளதால் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நிலத்தடி நீருக்காக திருவள்ளூர் மற்றும் காஞ்புரம் மாவட்டங்களையே நம்பி இருக்க வேண்டிய சூழல் உள்ளது. சென்னையில் தண்ணீர் சப்ளை செய்யும் லாரிகள் மற்றும் தண்ணீர் கேன் சப்ளை செய்யும் நிறுவனங்கள் இந்த இரு மாவட்டங்களில் இருந்தே நிலத்தடி நீரை பயன்படுத்துகின்றன.

நிலத்தடி நீரை பொறுத்தவரை மழை பெய்வது மற்றும் ஏரி, குளங்கள் இருந்தால் மட்டுமே நீர்மட்டம் குறையாமல் இருக்கும். ஒவ்வொரு ஆண்டும் பெய்யும்போது உரிய முறையில் மழைநீரை சேமித்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே நிலத்தடி நீர் செறிவூட்டுதல் என்பது அவசியமான ஒன்று.

அதுபோலவே இரண்டு மாவட்டங்களிலும் உள்ள ஏரிகளில் நீரை நிரப்பினால் நிலத்தடி நீர்மட்டும் கணிசமாக உயரும். உறிஞ்சப்படும் நிலத்தடி நீர் மீண்டும் சமநிலைக்கு வர வாய்ப்புள்ளது. ஆற்று பாசனப்பகுதியில் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சினாலும் கூட மீண்டும் மழை பெய்யும்போது அல்லது ஆற்றில் தண்ணீர் வரும்போது நிலைமை சரியாகி விடும்.

எடுத்துக்காட்டாக, கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து நாள்தோறும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சு எடுக்கப்படுகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டும் வெகுவாக குறைந்து விடுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். அந்த பகுதியில் கிணறுகளில் நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

ஆனால் ஆற்றில் தண்ணீர் ஓடும்போது அல்லது மழை சரியான அளவு பெய்யும்போது நிலத்தடி நீர்மட்டும் கணிசமான அளவு உயர்ந்து விடுகிறது. ஆனால் ஆற்றுபடுகை அல்லது ஏரி, குளங்கள் இல்லாத பகுதியில் நிலத்தடி நீரை உறிஞ்சினால் பெரிய ஆபத்து தான்.

ஆனால் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் நிலைமை வேறானது. கடந்த சில ஆண்டுகளாகவே போதிய மழை பெய்யாத நிலையில் இரு மாவட்டங்களிலும் நிலத்தடி நீர்மட்டம் கிழே சென்றுள்ளது.

ஏரிகள் முறையாக தூர் வாரப்பட்டு நீர் நிரப்பப்படாத நிலையில் நிலத்தடி நீர்மட்டம் கீழே இறங்கியுள்ளது. நிலத்தடி நீர் செறிவூட்டுதல் முறையாக நடைபெறவேண்டும். காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் விவசாய பகுதியாகவும் உள்ளன.

எனவே குடிநீர் தேவையை மட்டும் கருத்தில் கொள்ள முடியாது. விவசாயத் தேவைக்கும் தண்ணீர் தேவையாக உள்ளது. அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டால் தண்ணீர் இன்றி விவசாயமும் பெரும் பாதிப்பு அடையும்.

குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன், விவசாயமும் நடைபெற போதுமான அளவு நிலத்தடி நீர்மட்டும் செறிவூட்டப்பட வேண்டும். இதற்கு உரிய மழை பெய்வதுடன், நீர்நிலைகளை முறையாக பராமரிப்பதும் அவசியம்’’ என சிவசுப்பிரமணியின் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x