Published : 13 Oct 2018 07:53 AM
Last Updated : 13 Oct 2018 07:53 AM
திருச்சியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானம், விமான நிலை யத்தின் சுற்றுச்சுவரில் மோதிய நிலையில் 4 மணி நேரத்துக்கு மேல் வானில் பறந்தது. 136 பயணி கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி சர்வதேச விமான நிலை யத்தில் இருந்து 130 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 1.18 மணிக்கு துபாய்க்கு புறப்பட்டது. பயணிகளுடன் பைலட் கேப்டன் கணேஷ்பாபு, பணியாளர்கள் உட்பட மேலும் 6 பேர் விமானத்தில் இருந்தனர். ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த விமானத்தை, 1.19 மணியளவில் அதன் பைலட் வான்நோக்கி பறக்க வைக்க முயற்சித்தார்.
அப்போது மிகவும் தாழ்வாக பறந்தபடி மேல் எழும்பிய விமானத் தின் சக்கரம் அமைந்துள்ள பகுதி, எதிர்பாராமல் திருச்சி - புதுக் கோட்டை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள விமான நிலைய சுற்றுச்சுவர், அதனருகிலுள்ள விமானத் தொலைத்தொடர்பு ஆண்டெனாக்கள் ஆகியவற்றின் மீது உரசிச் சென்றது. இதில், சுமார் 10 அடி அகலத்துக்கு சுற்றுச்சுவர், 5 யூனிட் ஆன்டெனா, ஓடுதளத்துக்கான மின் விளக்கு ஆகியவை சேதமடைந்தன.
சுற்றுச்சுவரை ஒட்டிய கண் காணிப்பு கோபுரத்தில் பணிபுரிந்த சிஐஎஸ்எப் வீரர்கள் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக விமான நிலைய வான் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கிருந்த அதிகாரிகள் விமான பைலட்டை தொடர்புகொண்டு பேசினர். அப் போது, சுற்றுச்சுவர் மீது உரசிச் சென்றதால் விமானத்துக்கும், அதன் பறக்கும் தன்மைக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும், பாதுகாப்பாக இருப்ப தாகவும் பைலட் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த விமானம் தொடர்ச்சியாக பயணிக்க அனு மதிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய இயக்குநர் குணசேகரன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் விபத்து நடந்த இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது அந்த இடத்தில் சுற்றுச்சுவர் மற்றும் ஆன்டெனாக்களின் உடைந்த பகுதிகள் மட்டுமின்றி, விமானத்தின் சில பாகங்களும் சிதறிக் கிடந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி யடைந்த அதிகாரிகள், உடனடி யாக அந்த விமானத்தைப் பாது காப்பாக தரையிறக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய விமான நிலைய ஆணையக் குழுமம் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் ஆகியவற்றுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதற்கிடையே அந்த விமானம் திருச்சி, பெங்களூரு, மும்பை வான் எல்லைகளைத் தாண்டி மஸ்கட் வான் எல்லைக்குள் நுழைந்து, துபாய்க்கு அருகில் சென்று கொண் டிருந்தது. அப்போது விமானத்தின் பைலட்டை தொடர்புகொண்ட அதிகாரிகள், உடனடியாக மும்பைக்கு திரும்பி வரும்படி உத்தரவிட்டனர். இதற்கிடையே, அந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் அவசரமாக தரை யிறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்நிலையில், அதிகாலை 5.47 மணிக்கு விமானம் பாதுகாப்பாக மும்பையில் தரை யிறக்கப்பட்டது.
அங்கிருந்த பொறியாளர்கள் ஆய்வு செய்தபோது, விமானத்தின் அடிப் பகுதியில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருந்ததும், விஎச்எப் டவர் உடைந்திருந்ததும் கண்டறியப் பட்டது. மேலும், திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் இருந்த கம்பிவேலியின் ஒருபகுதி விமானத்தின் சக்கரங்களுக்கு அருகே சிக்கியிருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, இந்த விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக அங்கிருந்து அழைத்துச் செல்லப் பட்டனர்.
இதுகுறித்து திருச்சி விமான நிலைய இயக்குநர் குணசேகரன் கூறியபோது, "விமானம் உரசிச் சென்றதில் ஐஎல்எஸ் ஆன்டெனாக் கள் பழுதடைந்ததால், மாற்று வழிகளில் வான் போக்குவரத்துக் கான தகவல் தொடர்பு மேற் கொள்ளப்பட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. விமானத்தில் பயணம் செய்தவர்களுக்கு இந்த விபத்து குறித்து உடனே தெரிவிக் கப்படவில்லை. மாற்று விமானம் மூலம் அனைத்து பயணிகளையும் துபாய்க்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
விரைந்து விரிவாக்கப் பணி
திருச்சி மாநகர மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகி ஜெகநாதன் கூறியபோது, "புதுக்கோட்டை சாலையை ஒட்டி விமான நிலையம் அமைந்துள்ளதால், ஓடுதளம் முடிவதற்கு 500 அடிக்கு முன் பாகவே விமானத்தைப் பறக்கச் செய்ய வேண்டும் என்பது நடை முறை. இதை முறையாக கடை பிடிக்காத பைலட்டின் கவனக் குறைவு காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும், இன்னும் ஒரு மீட்டர் தூரம் கூடுதலாகச் சென்று பறந்திருந் தால் சுற்றுச்சுவரில் நேருக்கு நேராக மோதி பெரிய அளவில் விபத்து ஏற்பட்டிருக்கும். கவனக்குறைவாக இருந்தபோதிலும், பைலட்டின் கடைசிநேர சாதுர்யத்தால் 136 உயிர்கள் நூலிழையில் தப்பின. ஓடுதள பற்றாக்குறையால் மங்களூரு விமான நிலையத்தில் 2010-ம் ஆண்டு ஏற்பட்ட விமான விபத்தில் 158 பேர் பலியாகினர். திருச்சியிலும் அதுபோன்றதொரு நிலைமை ஏற்படாதிருக்க ஓடுதள விரிவாக்கப் பணிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
விமான விபத்தில் கார் சேதம்
துபாயில் வேலை செய்துவரும் திருவாரூர் மாவட்டம் அம்மையப்பன் வி.எஸ்.என்.நகரைச் சேர்ந்த ராஜா செல்வராஜ் நேற்று அதிகாலை இந்த விமானத் தில் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் இருந்து ஊருக்கு காரில் புறப்பட்டபோது, விமானம் மோதி உடைந்த சுற்றுச்சுவரி லிருந்து பெயர்ந்த கல் காரில் விழுந்ததில் கண்ணாடி உடைந்தது. இதில், காரில் இருந்த ராஜா செல்வராஜின் மனைவி மணிமாலா(40) காயமடைந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT