Published : 22 Aug 2018 04:06 PM
Last Updated : 22 Aug 2018 04:06 PM

கருணாநிதி புகழ் வணக்கக் கூட்டம்: பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா வருவது உறுதி

சென்னையில் அகில இந்தியத் தலைவர்கள் கலந்துகொள்ளும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் புகழ் வணக்கக் கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கலந்துகொள்வது உறுதியாகியுள்ளது. அதே சமயத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அந்நிகழ்ச்சிக்கு வரவில்லை என்றும் திமுக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு ‘கலைஞரின் புகழுக்கு வணக்கம்’ என்ற பெயரில் பல்வேறு துறையினர் கலந்துகொள்ளும் இரங்கல் கூட்டங்களை திமுக நடத்தி வருகிறது. அந்த வகையில், நிறைவு நிகழ்ச்சியாக சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் அகில இந்தியத் தலைவர்கள் கலந்துகொள்ளும் ‘தெற்கில் உதித்தெழுந்த சூரியன்’ எனும் இரங்கல் கூட்டம் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளை திமுக தலைமைக்கழகம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் மேற்கொண்டு வருகிறார். ஒரு லட்சம் திமுக தொண்டர்களை ஒருங்கிணைத்து மாபெரும் நிகழ்ச்சியாக இதனை நடத்திக் காட்ட சென்னை தெற்கு மாவட்ட திமுக முடிவு செய்துள்ளது. அகில இந்தியத் தலைவர்கள் யார், யாரெல்லாம் கலந்துகொள்கிறார்கள் என்ற பட்டியல் வியாழக்கிழமை உறுதியாகிவிடும் என திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை தெற்கு மாவட்ட திமுகவின் சார்பாக பெயர் தெரிவிக்க விரும்பாத முக்கிய நிர்வாகி ஒருவர் பேசுகையில், “பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இந்த நிகழ்ச்சிக்கு வருவது 100 சதவீதம் உறுதியாகி விட்டது. காங்கிரஸ் சார்பாக ராகுல் காந்தி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் அக்கட்சியின் சார்பாக வருவார். 4-5 மாநில முதல்வர்கள் வருகிறார்கள்” என்று கூறினார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கருணாநிதியின் சட்டப்பேரவை வைர விழாவை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அப்போது காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்த ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவைத் தலைவர் டெரிக் ஓ பிரையன் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா என பல்வேறு அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். வர முடியாத தலைவர்களின் சார்பாக அக்கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

ஆனால், அந்த விழாவுக்கு பாஜக சார்பில் யாரையும் திமுக அழைக்கவில்லை. பாஜக மதவாத கட்சி என்பதால் அக்கட்சி தலைவர்கள் யாரும் அழைக்கப்படவில்லை என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டது. இது அச்சமயத்தில் சர்ச்சையை எழுப்பியது. இதனால், திமுகவை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உட்பட்டவர்கள் விமர்சித்தனர். அதிமுக சார்பாகவும் அவ்விழாவுக்கு யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை.

இந்நிலையில், கருணாநிதியின் இரங்கல் கூட்டத்திற்கு அமித் ஷா வர உள்ளது குறித்து நம்மிடம் பேசிய திமுக முக்கிய நிர்வாகி ஒருவர், “வைர விழா நிகழ்வு வேறு; தலைவரின் இரங்கல் கூட்டம் வேறு; இரண்டும் ஒன்றல்ல. அரசியலுக்கு அப்பாற்பட்டு மிகப்பெரும் தலைவருக்கு எடுக்கும் விழா இது. தலைவருக்கு புகழஞ்சலி செலுத்துவதற்கு எந்தவித அரசியல் சாயமும் பூசத் தேவையில்லை. ராகுல் காந்தி ஏன் வரவில்லை என்பதும், அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் தெரியவில்லை” என தெரிவித்தார்.

ராகுல் காந்தி அந்நிகழ்ச்சிக்கு வர வாய்ப்பிருக்கிறதா என்பது குறித்து அகில இந்திய காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்புவிடம் கேள்வி எழுப்பினோம். அதற்கு, “மறைந்த திமுக தலைவரின் இரங்கல் நிகழ்வில் அரசியல் பார்க்க வேண்டாம். அவர் இந்த அரசியல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டு நிலைத்திருப்பவர். இந்த நிகழ்வுக்கு அமித் ஷா உட்பட யார் வந்தாலும் தவறில்லை. கலைஞருக்கு தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகத் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். அரசியலைத் தாண்டி அவர் மீது எல்லோருக்கும் மரியாதை இருக்கிறது. அந்த மரியாதை என்றென்றைக்கும் இருக்கும். ராகுல் காந்தி வருகிறாரா என்பது குறித்து தகவல் இல்லை” எனக் கூறினார்

திமுக தலைமைக்கழகம் அழைப்பு விடுத்த உடனேயே அமித் ஷா வருகைக்கு ஒப்புக்கொண்டாரா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. சமீபத்தில் சென்னை வந்திருந்த அமித் ஷா “இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது” எனப் பேசினார். அது, தமிழகத்தை இதுவரை அதிக காலம் ஆட்சி செய்து வந்த திமுக, அதிமுக இரு கட்சிகளையும் குற்றம் சாட்டுவதாக அமைந்தது. திமுகவும், பாஜகவையும், மத்திய அரசையும் கடுமையாக பல பிரச்சினைகளில் விமர்சித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் அமித் ஷாவின் வருகை முக்கியமானதாக கருதப்படுகிறது. அதேசமயம், திமுகவுக்கும் கருணாநிதிக்கும் நெருக்கமானவராக கருதப்படும் ராகுல் காந்தி இந்நிகழ்ச்சிக்கு வரவில்லை என்பதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x