Published : 10 Aug 2018 07:57 AM
Last Updated : 10 Aug 2018 07:57 AM
கேரளாவில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கன மழையால் இடுக்கி அணை நிரம்பியது. இதனால் ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்குப் பிறகு அணை நேற்று திறக்கப்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள மேலும் 22 அணைகளும் நிரம்பியதால் அனைத்து அணைகளும் திறக்கப்பட்டன. இதையடுத்து மீட்புப் பணிக்காக முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கேரளாவில் இடுக்கி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் இறுதி வரை கன மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை உட்பட 22 அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து நிரம்பும் நிலையில் இருந்தன.
இடுக்கி அணை ஜூலை 31-ம் தேதியே திறக்கப்படும் என கேரள மின் துறை அமைச்சர் எம்.எம்.மணி அறிவித்தார். ஆனால் ஒரு வாரமாக மழை குறைந்ததால் அணை திறக்கப்படவில்லை. ஆனால் கடந்த 3 நாட்களாக மீண்டும் பலத்த மழை கொட்டியது. இதில் எதிர்பாராத அளவுக்கு நீர்வரத்து இருந்ததால், இடுக்கி ஆணை அதன் முழு கொள்ளளவான 2,403 அடியை (கடல் மட்டத்திலிருந்து) நெருங்கியது. நேற்று காலை நீர்மட்டம் 2,398.80 அடியானது. இது படிப்படியாக 2,400 அடியை நெருங்கியது.
இதையடுத்து கேரள மின் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அணையை உடனே திறக்க முடிவெடுக்கப்பட்டது. இடுக்கி அணையின் உபரி அணையான செறுதோணி அணையின் ஒரு மதகு பிற்பகல் 12.40 மணி அளவில் திறக்கப்பட்டது.
ஏறக்குறைய 26 ஆண்டுகளுக்குப் பிறகு இடுக்கி அணை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 1981, 1992-ம் ஆண்டு களில் இந்த அணை நிரம்பியுள்ளது. கடந்த 1992 அக்டோபர் மாதம் 12-ம் தேதி இந்த அணை முதல்முறையாக திறக்கப்பட்டது. பின்னர் 26 வருடங்களுக்குப் பிறகு நேற்று அணை மதகு திறக்கப்பட்டது. மதகு வழியாக விநாடிக்கு 1765 கனஅடி தண்ணீர் சீறிப் பாய்ந்து செல்கிறது. இந்த தண்ணீர் பெரியாறு வழியாக மூலதான் கட்டு, காலடி, இடமலையார் வழியாக ஆலுவா சென்றடையும். அங்கிருந்து அரபிக் கடலில் கலக்கும்.
இடுக்கியில் இருந்து அரபிக் கடல் செல்ல 6 மணி நேரம் ஆகும் என அதிகாரிகள் கூறியுள்ளனர். மழையை பொறுத்து அடுத்தடுத்து மற்ற மதகுகள் திறக்கப்படும் என்றும், இரவில் 2-வது மதகு திறக்கப்படும் எனவும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர். நீர்வழித்தடப் பகுதியில் முப்படைகளைச் சேர்ந்த மீட்புக் குழுவினர், ஹெலிகாப்டருடன் தயார் நிலையில் உள்ளனர்.
பெரியாறு அணை நீரால் கேரள மக்கள் அச்சம்
பெரியாறு அணையின் உயரம் 152 அடி. இந்த அணையில் 1980-ம் ஆண்டு வரை 152 அடி தண்ணீர் (15.5 டிஎம்சி) தேக்க முடிந்தது. இடுக்கி அணை பெரியாறு அணையைவிட 5 மடங்கு பெரியது. 72 டிஎம்சி தண்ணீர் தேக்கலாம். எதிர்பார்த்த தண்ணீர் கிடைக்காததால், இடுக்கி அணையில் நீர்மின்சாரம் உற்பத்தி வெற்றி பெறவில்லை. இதனால் பெரியாறு அணையில் பாதுகாப்பு இல்லை எனக் கேரள அரசு தொடர்ந்து தவறான தகவலை கூறிவந்தது.
இதனால், 25.11.1979-ல் இரு மாநில அரசுகளும் ஒப்பந்தம் மேற்கொண்டதால், நீர் தேக்கும் அளவை 152 அடியில் இருந்து 136 அடியாக குறைக்கப்பட்டது. 2011-ம் ஆண்டுவரை 12 முறை பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடிக்கும் மேலே உயர்ந்ததால், இடுக்கி அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 133.60 அடியாக இருந்தது. 142 அடி தண்ணீரை தேக்க 2014 மே 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. அதே ஆண்டு நவ.21-ம் தேதி, 2015 டிச.7-ல் அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இதற்கும் மேல் வந்த தண்ணீர் இடுக்கி அணைக்கே திறக்கப்பட்டது.
பெரியாறு அணை தண்ணீர் 50 கி.மீ. தொலைவில் உள்ள இடுக்கி அணையை 4 மணி நேரத்தில் சென்றடையும். இந்நிலையில் எப்போது பெரியாறு அணை தண்ணீர் கிடைக்கும் என எதிர்பார்த்த கேரளா, தற்போது அங்குள்ள அணைகள் நிரம்பி வெள்ளம் பாய்வதால் பெரியாறு அணை தண்ணீர் இடுக்கிக்கு வந்துவிடக்கூடாது என பிரார்த்திக்கும் நிலையில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT