Published : 18 Aug 2014 06:12 PM
Last Updated : 18 Aug 2014 06:12 PM

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை: 26 வயது இளம்பெண்ணின் சாகசப் பயணம்

உத்திரப் பிரதேசம் மாநிலம் நரோரா பகுதியைச் சேர்ந்த ரோஷிணி ஷர்மா, கன்னியாகுமரி முதல் காஷ்மீரில் உள்ள லே (Leh) பகுதி வரை, தனது அவேன்ஜர் 200 cc பைக்கில், ஏறக்குறைய 4,100 கிலோமீட்டர் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “எனக்குப் பயணம் மற்றும் சாகசம் இரண்டின் மீதும் பேரார்வம் உள்ளது. இதற்குமுன் பெங்களூரிலிருந்து சென்னைக்கும், பெங்களூரிலிருந்து புனேக்கும் என குறைந்த தூரமுடைய இடங்களுக்குப் பயணம் மேற்கொண்டது, இந்த நீண்ட தூர பயணத்திற்கு உதவிகரமாக இருந்தது”, என்று தெரிவித்தார்.

நீண்ட பயணம் நிறைவேறிய நாள்

கடந்த ஜுன் 28-ஆம் தேதி, இவரது பயணம் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கியது. பெங்களூர், ஹைதராபாத், நாக்பூர், ஜான்சி, ஆக்ரா, புது டெல்லி, பானிபட், மணாலி மற்றும் சர்சு ஆகிய இடங்களைக் கடந்து காஷ்மீரின் லே பகுதிக்கு ஜூலை 7-ஆம் தேதி சென்றடைந்தார்.

இவ்வளவு நீண்ட பயணத்தைத் தனியாக மேற்கொண்டது பற்றிய கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், “நான் தன்னம்பிக்கையோடு இருந்தேன். நான் பயணிக்கத் துவங்கும் முன் முன்னெச்சரிக்கையாக செய்துகொள்ள வேண்டியவை அனைத்தையும் செய்தேன். எங்கும் எதுவும் நடக்க வாய்ப்பு உள்ளது. ஒரு சூழ்நிலையை நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துதான் விளைவுகள் அமையும். ஆதனால், நீங்கள் எதையும் எப்போதும் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்”, என்று கூறினார்.

சாகசத்தின் நன்மை

ஆட்டோமொபைல் நிறுவனத் தொழிலதிபரின் மகளான இவருக்கு, பலவிதமான பைக்குகள் பற்றித் தெரிந்திருந்தது கூடுதல் நன்மையளித்தது. இதுபோன்ற நீண்ட பயணம் செல்ல ஒருவர் மனதளவில் உறுதியாக இருக்கவேண்டும் என்று அவர் தெரிவிக்கிறார்.

இவரது பயணம் ஒவ்வொரு நாளும் காலை ஆறுமணிக்கு துவங்கி, இரவு 8 மணிக்கு முடியும். இரண்டு நாட்கள் மட்டும், சாலைகளின் மோசமான நிலை காரணமாக, சில மணி நேரங்கள் நீண்டது. இவரது முழுப் பயணச் செலவு ரூ.1.2 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

பல அமைப்புகளின் உதவியுடன் பயணம் மேற்கொண்ட இந்த இளம் பொறியாளர் பேசுகையில், “இதுபோன்ற நீண்ட பயணத்தைத் தனியாக மேற்கொள்ளும் முதல் பெண் நானாகதான் இருப்பேன். லிம்கா சாதனை புத்தகத்தில் இடம்பெற விண்ணப்பிக்கப் போகிறேன்”, என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x