Published : 06 Aug 2014 12:00 AM
Last Updated : 06 Aug 2014 12:00 AM
சுமார் 18-ம் நூற்றாண்டில் ஒரே காலகட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு வெவ்வேறான மைல் கற்களைப் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலிலும், புதுக்கோட்டையில் இருந்து கந்தர்வகோட்டை செல்லும் சாலையில் கூழியான்விடுதியிலும் தமிழ் மற்றும் ரோமன் எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கண்டறியப்பட்டது.
தற்போது, தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி மற்றும் மாப்பிள்ளைநாயக்கன் பட்டி ஆகிய கிராமங்களில் தமிழ், அரபு எண்கள் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட துணைத் தலைவர் ஆர்.மணிகண்டன் கூறியதாவது:
‘செங்கிப்பட்டி மற்றும் மாப்பிள்ளைநாயக்கன் பட்டியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தமிழ், அரபு எண்களில் பொறிக்கப்பட்ட மைல் கற்கள் 18-ம் நூற்றாண்டில் சாலை அளவீட்டு முறை நடைமுறைப்படுத்திய பிறகு நடப்பட்டது என ஆங்கிலேயர் கால ஆளுகையின்போது வெளியிடப்பட்ட ஆவணங்கள் மூலம் தெளிவாகிறது.
மேலும், இதை தஞ்சாவூர் அரண்மனை அருங்காட்சியகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள மைல் கல்லோடு ஒப்பிட்டபோது தஞ்சை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ், அரபு எண்களிலும், புதுக்கோட்டை பகுதியில் தமிழ், ரோமன் எண்களுடனும் நடப்பட்டுள்ளது உறுதி செய்யப்படுகிறது.
இரு மாவட்டங்களிலும் உள்ள மைல் கற்கள் எண்களில் வேறுபட்டாலும் ஒரே காலத்தில் நடப்பட்டவையாகும்.
அறிவியல் இயக்கத்தின் மாவட்ட துணைச் செயலர் சை.மஸ்தான் பகுருதீன், கந்தர்வகோட்டை வட்டார செயலர் மு.முத்துக்குமார் உள்ளிட்டோர் கண்டெடுத்த வரலாற்று மைல் கற்களை தமிழ்நாடு தொல்லியல் துறையின் அருங்காட்சியகங்களில் ஒப்படைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT