Last Updated : 14 Aug, 2014 12:20 PM

 

Published : 14 Aug 2014 12:20 PM
Last Updated : 14 Aug 2014 12:20 PM

படிக்கும் பழக்கத்தை உருவாக்க புத்தகங்களை இலவசமாக விநியோகிக்கும் பேராசிரியர்: 15 ஆண்டுகளாக தொடரும் அறிவுச் சேவை

புதுவை தாகூர் கலைக் கல்லூரியில் 94-ம் ஆண்டு முதல் பேராசிரியராக பணிபுரிபவர் சம்பத்குமார். வாசகர் வட்டம் என்ற அமைப்பை தொடங்கி புத்தகம் படிக்கும் பழக்கத்தை இளைஞர் கள் மத்தியில் உருவாக்க பெரு முயற்சி செய்து வருகிறார்.

இது தொடர்பாக அவர் ‘தி இந்து’-விடம் பேசியதாவது:

‘‘புத்தகம் படிக்கும் பழக்கத்தை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்வதற்கு பலவிதமாக யோசித்தேன். இதற்கான முயற்சிகளை சில நல்ல நண்பர்களுடன் சேர்ந்து முன்னெடுத்தபோது, இளைஞர்களை புத்தகம் வாங்க செய்வதுதான் இதற்கான முதல்படி எனத் தோன்றியது. எனவே நல்ல புத்தகங்களை அவர்களுக்கு இலவசமாக வழங்க முடிவு செய்தேன்.

எனக்கு மகாத்மா காந்தியை மிகவும் பிடிக்கும் என்பதால் ஆண்டுதோறும் காந்தி பிறந்த நாளில் ‘சத்தியசோதனை’ புத்தகத்தை இலவசமாக கொடுக்க ஆரம்பித்தேன். கடந்த 2006-ம் ஆண்டு புதுவை கடற்கரை காந்தி சிலை முன்பு ஒரே நேரத்தில் 1,000 பேருக்கு ’சத்தியசோதனை’ புத்தகத்தை இலவசமாக வழங்கினோம்.

அதேபோல் புதுமை கவிஞர் பாரதி பிறந்த நாளன்று அந்த மகாகவியின் கவிதைப் புத்தகம் மற்றும் விவேகானந்தர் பிறந்த நாளில் அந்த முண்டாசு முனிவரின் தன்னம்பிக்கை நூல்கள், கண்ணதாசன் பிறந்த நாளில் ’அர்த்தமுள்ள இந்துமதம்’, ராஜாஜி பிறந்த நாளில் அவர் எழுதிய ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய புத்தகங்களை இலவசமாக கொடுத்து வருகிறேன்.

இந்தியாவில் தலைசிறந்தவர்களின் பிறந்த நாளன்று, அவர்களின் புத்தகங்களை இளைய தலைமுறைக்குக் கொடுத்து படிக்க வைப்பதுதான் அந்த சிறப் புக்குரியவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை என்று நான் நம்புகிறேன்.

முன்பு புத்தகங்களை இலவசமாகவே கொடுத்து வந்தேன். இப்போது அதில் சிறு மாற்றம் செய்துள்ளேன். முக்கியமானவர்களின் பிறந்த நாளன்று, அவர்களைப் பற்றி ஒரு சில கேள்விகளைக் கேட்டு, அதற்கு பரிசாக புத்தகங்களைக் கொடுத்து வருகிறேன். இதன் மூலம் அந்த பெருமைக்குரியவர்களைப் பற்றி எல்லோரும் கொஞ்சமாவது அறிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுமல்லவா?

இப்படி நான் புத்தகங்களை இளைஞர்களுக்கு இலவசமாக கொடுப்பதை அறிந்த சிலர், தங்கள் பங்களிப்பாக சில உதவிகளையும் செய்கிறார்கள். இதனை என்னுடைய தனிப்பட்ட முயற்சி என்று சொல்ல மாட்டேன். ஊர் கூடி தேர் இழுப்பது மாதிரிதான் இது. இதன் பயனாக நானறிந்த சில இளைஞர்கள் மத்தியில் படிக்கும் பழக்கம் உருவாகியுள்ளது. இவர்களில் பலர் இப்போது புத்தகக் கடைகளுக்குச் சென்று நல்ல புத்தகங்களை விலைகொடுத்து வாங்கி படிக்கத் தொடங்கியுள்ளனர். அதை பார்க்கும்போது, ‘ஒரு விளக்கால் இன்னொரு விளக்கை ஏற்றலாம்’ என்று ஓர் அறிஞர் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x