Published : 01 Jul 2018 05:09 PM
Last Updated : 01 Jul 2018 05:09 PM

தமிழர்களின் பல்லாண்டு கனவு நனவானது; ஹார்வர்டு பல்கலையில் தமிழுக்கு தனி சிம்மாசனம்: அமெரிக்காவில் இன்று கோலாகல அறிவிப்பு

உலகின் மிக உயரியதும் பழமையானதுமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்குஆய்வு இருக்கை அமையவேண்டும் என்பது தமிழர்களின் பல்லாண்டு காலக் கனவு. அது இனிதே நிறைவேறிவிட்டதை வட அமெரிக்கத் தமிழச் சங்கப் பேரவையான ‘ஃபெட்னா’ (FeTNA) விழாவில் ஹார்வர்டு தமிழ் இருக்கைக் குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவிக்கிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் தெற்காசியக் கற்கைகள் துறையின் கீழ், தற்போது தமிழ்மொழி கற்றுத் தரப்படுகிறது. ஆனால் தமிழையும், அதன் இலக்கிய வளத்தையும் ஆய்வுசெய்து உலக சமுதாயத்திடம் பகிர்ந்துகொள்ள மற்ற செம்மொழிகளுக்கு இருப்பதுபோல்அங்கு தனியாக ஓர் ஆய்வு இருக்கை இல்லை. அதை அமைக்க, ஏற்கெனவே பலரும்முயன்று வந்தனர். அமெரிக்க வாழ் தமிழக மருத்துவர்களான டாக்டர் விஜய் ஜானகிராமன்,டாக்டர் சு.திருஞானசம்பந்தம் இணைந்து எடுத்த முயற்சியின் வாயிலாக இதற்கான பூர்வாங்க அனுமதியை ஹார்வர்டு பல்கலைக்கழகம் கடந்த 2015-ல் வழங்கியது.

அதைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்குச் செலுத்த வேண்டிய ரூ.40 கோடி ரூபாய் (6மில்லியன் அமெரிக்க டாலர்) நிதியில், ரூ.6.5 கோடியை விஜய் ஜானகிராமன் மற்றும் சு.திருஞானசம்பந்தம் ஆகிய இருவரும் வழங்கினர். எஞ்சிய நிதியைத் திரட்ட அமெரிக்காவின் மேரிலேண்டை தலைமையிடமாகக் கொண்டு, ‘தமிழ் இருக்கைக் குழு’ (Tamil Chair Inc) என்ற லாபநோக்கமற்ற அமைப்பைப் பதிவு செய்து, அதன் மூலம் நன்கொடை இயக்கத்தைத் தொடங்கினர்.

தமிழ் இருக்கைக் குழு

டாக்டர்கள் விஜய் ஜானகிராமன், சுந்தரேசன் சம்பந்தம் ஆகியோருடன் முனைவர் எம்.ஆறுமுகம், பால் பாண்டியன், பேராசிரியர் வைதேகி ஹெர்பர்ட், எழுத்தாளர் அ.முத்துலிங்கம், குமார் குமரப்பன், முனைவர் வ.இரகுராமன், முனைவர் பாலா.சுவாமிநாதன் சிவன் இளங்கோ உள்ளிட்ட பலர் இந்தத் தமிழ் இருக்கை குழுவில் அங்கம் வகித்து வருகின்றனர். இவர்களின் அழைப்பைஏற்று, ‘தமிழால் இணைவோம்’ எனும் தனது கொள்கை முழக்கத்துக்கு அர்த்தம் சேர்க்கும் வகையில் இந்த அரிய முயற்சியில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் அதிகாரபூர்வ ஊடக ஒருங்கிணைப்பாளராக (Official cause partner) தன்னை இணைத்துக்கொண்டது. அதையடுத்து வாசர்களுக்குத் தமிழ் இருக்கை குறித்த தகவல்களை பல்வேறு வடிவங்களில் ‘இந்து தமிழ்’நாளிதழ் உடனுக்குடன் எடுத்துச் சென்றது. தனது இணையதளம் வாயிலாகவும் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் இருக்கையின் முக்கியத்துவம் குறித்து விளக்கியதோடு, இதற்கான நன்கொடை திரட்டும் பணியின் முன்னேற்றங்களையும் உடனுக்குடன் வெளியிட்டு உற்சாகப்படுத்தி வந்தது.

தேர்தல் அறிக்கையில் தமிழ் இருக்கை

2016-ல் சென்னையில் நடந்த ’இந்து தமிழ்’ வாசகர் திருவிழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய நீதியரசர் எஸ்.கிருபாகரன், கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் “ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் இருக்கை அமைய அனைவரும் முன்வந்து தாராளமாக நன்கொடை வழங்க வேண்டும்” என வலியுறுத்தினர். அதையடுத்து “உலகம் முழுவதும்தமிழைப் பரப்ப பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுக்கு உதவுவோம்” என்று திமுக அறிக்கை வெளியிட்டது.

அதேபோல், கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுக ஆட்சி மீண்டும்அமைந்தால் “ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைக்க உதவுவோம்” என்று முன்னாள்முதல்வர் ஜெயலலிதாவும் குறிப்பிட்டார்.

ரூ.10 கோடி நிதி

2016-ம் ஆண்டின் இறுதிக்குள் உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் தந்த நன்கொடையானது ஒட்டுமொத்தமாக 2 மில்லியன் டாலர்களாக உயர்ந்தது.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் பொறுப்பேற்ற முதல்வர் கே.பழனிசாமி தலைமையிலான அரசு ரூ.10 கோடியை வழங்கியது. பெரும் பங்காக அமைந்துவிட்ட அரசின்இந்த நிதியைப் பெற்றுத் தருவதில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், பள்ளிக்கல்வித் துறை செயலர் உதயச்சந்திரன் ஐஏஎஸ், முனைவர் எம்.ஆறுமுகம் ஆகியோர் பெரும் பங்கு வகித்தனர்.

அதைத் தொடந்து திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தங்களது கட்சிஅறக்கட்டளையில் இருந்து ரூ.1 கோடி வழங்கினார்.

‘இந்து தமிழ்’ நாளிதழில் இதுகுறித்த தகவல்கள் தொடர்ந்து வெளியானதோடு, மேலும் எவ்வளவு தொகை தேவை என்பதும் அவ்வப்போது குறிப்பிடப்பட்டது.

ஆட்டோ ஓட்டுநர் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி வரை

அன்றாட வருமானத்தில் இருந்து ஒரு பகுதியைச் சேர்த்து வைத்து அளித்த ஆட்டோ ஓட்டுநர், தனது பணிக்கொடையை மொத்தமாய் வழங்கிய ஓய்வுபெற்ற 83 வயது தலைமை ஆசிரியர், தனது சேமிப்பின் பெரும்பகுதியை வழங்கிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, சில நடிகர்கள், தமிழகத் தமிழாசிரியர்கள் என அனைத்து தரப்பில் இருந்தும் உணர்வுபூர்வமான பங்களிப்பு தொடர்ந்தது. பல கல்விக் குழுமங்கள், பன்னாட்டுத் தமிழ்ச் சங்கங்கள், மலேசியத் தொழிலதிபர் தான்ஸ்ரீ சோமசுந்தரம் என பலரும் நன்கொடையை வாரி வழங்கினர்.

ஒட்டுமொத்த தேவையான ரூ.40 கோடியைத் திரட்டித் தருவதற்கான கெடுவாக 2018 ஜூலை மாதத்தை ஹார்வர்டு பல்கலைக்கழகம் குறித்திருந்த நிலையில், அதற்கு ஒரு மாதம் முன்பாகவே இந்தியப் பணத்தில் ரூ.43 கோடி (6.3 மில்லியன் அமெரிக்க டாலர்) திரண்டுவிட்டது என்ற பூரிப்பான செய்தியை தமிழ் இருக்கைக் குழு ’இந்து தமிழ்’வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளது.

2019 ஜூலையில் தொடக்கம்

தாய்த் தமிழின் பெருமையை உலகெங்கும் மேலும் சிறப்போடு கொண்டு செல்வதற்கான இந்த அரிய, பெரிய முயற்சிக்கு அதன் தொடக்க விதையாக இருந்த டாக்டர் விஜய் ஜானகிராமன் இந்த மகிழ்ச்சியான தருணத்தில் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியதாவது:

“தாய்மொழி மீதான தமிழர்களின் பற்றுதல்தான் எங்கள் முயற்சிக்கான அஸ்திவாரம். ‘இந்து தமிழ்’ நாளிதழின் தொடர்ந்த பங்களிப்புக்கும், அதன் வாசகர்கள் தந்த பேராதரவுக்கும் முதலில் நன்றி தெரிக்க கடமைப்பட்டிருக்கிறேன். ஹார்வர்டில் தமிழ் இருக்கை அமைந்தால் தமிழுக்கும், தமிழர்களுக்கும் உலக அரங்கில் எப்படிப்பட்ட பயன்கள் விளையும் என்பதைத்தனது கட்டுரைகள், செய்திகள் வழியாக ‘இந்து தமிழ்’எடுத்துக்காட்டிய விதம், நம்முடைய மொழி என்ற பெருமித உணர்வுடன் நன்கொடை அளிக்க பெரிதும் தூண்டியது.

அதோடு, தன்னார்வத்துடன் முன்வந்து தமிழ் இருக்கையைப் பிரபலப்படுத்திய ஏனைய ஊடகங்களுக்கும் தமிழ் இருக்கைக் குழு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பாஸ்டன் வளாகத்தில் 2019 ஜூலை முதல் தமிழ் இருக்கை செயல்படத் தொடங்கும். தமிழ் இருக்கைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பல தமிழ் அறிஞர்கள்முன்னிலையில் ஒரு எளிய நிகழ்வில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வரும் ஜூலை மாத இறுதிக்குள் இதை அறிவிக்க இருக்கிறது.

அதற்கு முன்பாக, ஜூலை 1-ம் தேதி (இன்று) அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நடைபெற்றுவரும் ’ஃபெட்னா’ விழாவின் நிறைவாக, ஹார்வர்டு தமிழ் இருக்கைக்கான நன்கொடை திரட்டும் பணி வெற்றிகரமாக நிறைவேறியதை, நாங்களும் அதிகாரபூர்வமாக உலகத்தமிழர்களுக்கு அறிவிக்க இருக்கிறோம்.” இவ்வாறு அவர் கூறினார்.

தமிழர்கள் பெருமிதத்தோடு தலை நிமிர்ந்து நிற்கும் இந்தத் தருணத்தில், ‘இந்து தமிழ்’நாளிதழும் தனது வாசகர்கள் மற்றும் ஏனைய தமிழ் ஆர்வலர்களுக்கு நெகிழ்ச்சியோடு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x