Last Updated : 12 Jul, 2018 07:26 AM

 

Published : 12 Jul 2018 07:26 AM
Last Updated : 12 Jul 2018 07:26 AM

தன்பாலின உறவு விவகாரம் நீதிமன்றமே முடிவு செய்யட்டும்: அரசியல் சாசன அமர்வில் மத்திய அரசு மனு

தன்பாலின உறவு சட்ட விரோதமா, இல்லையா என்பதை நீதிமன்றமே தன் சட்ட அறிவின் மூலம் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

ஒரே பாலினத்தைச் சேர்ந்த வயது வந்த இருவர் உடல் ரீதியான உறவு கொள்வது சட்டப்படி குற்றம் என்று இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ல் கூறப்பட்டுள்ளது. இப்பிரிவு சட்டப்படி செல்லாது என்று கடந்த 2009-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின்விரிவான விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு முன்பாக நடந்து வருகிறது.

இவ்வழக்கு நேற்று, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஆர்.எப்.நாரிமன், ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா ஆகியோர் அடங் கிய அமர்வு முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தாக்கல் செய்த பதில் மனுவில், ‘பிரிவு 377 சட்டப்படி சரியா, தவறா என்பதை நீதிமன்றமே முடிவு செய்யலாம். அதேநேரம், சகோதரர் அல்லது சகோதரியை திருமணம் செய்யும் அளவுக்கு போய் விடக் கூடாது. இது இந்து திருமணச் சட்டத்துக்கு எதிரானது. மேலும், தன்பாலின திருமணம் போன்றவை குறித்தும் எந்த முடிவுக்கும் வரக்கூடாது. அதுபற்றி பரிசீலித்தால், மத்திய அரசின் கருத்தைக் கேட்க வேண்டும்’ என கூறியிருந்தார்.

அதற்கு நீதிபதிகள், ‘சகோத ரர் உறவில் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம். அதுகுறித்தோ, தன்பாலின உறவாளர்களின் சிவில் உரிமைகள் குறித் தோ நாங்கள் பரிசீலிக்கப் போவதில்லை. வயது வந்த இருவர் விரும்பி உடல் உறவில் ஈடுபடுவது அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள அடிப்படை வாழ்வுரிமையின் கீழ் வருகிறதா என்பது பற்றி மட்டுமே நாங்கள் முடிவெடுக்க விரும்புகிறோம். தன்பா லின உறவில் உள்ள இருவர் கைகோர்த்து பீச்சில் நடந்து சென்றால், அவர்களை போலீ ஸார் தடுக்கலாமா, கூடாதா என்பதை பரிசீலிக்க உள்ளோம். அத்தகைய உறவை சட்டப்படி பாதுகாப்பது குறித்து மட்டுமே விவாதிக்கிறோம்’ என்று தெரிவித்தனர். வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற உள்ளது.

377-வது பிரிவு

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377-ன்படி, வயது வந்த ஒருவர் இயற்கைக்கு மாறாக ஆண், பெண் அல்லது விலங்குகளுடன் உறவு கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றம். இக்குற்றச் செயலுக்கு அதிகபட்சம் ஆயுள் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கலாம் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x