Published : 21 Jul 2018 09:44 AM
Last Updated : 21 Jul 2018 09:44 AM
குக்கிராமத்தில் பிறந்து, பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காமல், சிறுவயதிலேயே ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த ஒருவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பாகிஸ்தானின் போர் விமானத்தை சுட்டு வீழ்த்தி, 1965-ம் ஆண்டிலேயே வீர்சக்ரா விருதை பெற்றார் என்பதை நம்பமுடிகிறதா? நம்பித்தான் ஆக வேண்டும். அவரது பெருமையை பஞ்சாப் மாநிலம் பதான் கோட்டில் அவர் பெயரில் நினைவு வளைவு, வணிக வளாகம், அருங்காட்சியகத்தில் வெண்கலச் சிலை, ஒடிசா மாநிலம் கோபால்பூரில் சிலை, பங்களாதேஷ் எல்லையில் கலாய் குண்டா விமானப் படைத் தளத்தில் கல்வெட்டு என அந்த மாவீரனை இந்திய ராணுவம் இன்றளவும் போற்றி, பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்தப் பெருமைக்கெல்லாம் சொந்தக் காரர் திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்துள்ள குக்கிராமமான கூகூரைச் சேர்ந்த மதலை முத்து. மங்கலம் - உத்தரியமேரி தம்பதிக்கு மகனாக 1927-ம் ஆண்டில் பிறந்தவர். பள்ளிப் படிப்பைக் கூட முடிக்கவில்லை. ஆடு, மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார்.
குடும்ப வறுமை காரணமாக ரயில்வே யில் தினக்கூலிக்கு கலாசி வேலை செய்து வந்தவருக்கு, ராணுவத்தில் சேர ஆசை. அப்போது ராணுவத்துக்கு ஆள் எடுத்துக் கொண்டிருந்ததை அறிந்து, 1951-ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது 24.
நாட்டுக்கு பணியாற்ற வேண்டும் என மனதில் இருந்த வைராக்கியத்தில் கடுமையான பயிற்சிகள் முடித்தார். 1962-ம் ஆண்டில் இந்தியா - சீனா இடையே நடை
பெற்ற போரில் இவரது திறமையை கண்ட ராணுவ அதிகாரிகள், இவரை வான்வழித் தாக்குதல் தற்காப்பு பிரிவுக்கு அனுப்பினர். அதைத் தொடர்ந்து 28.AD ரெஜிமெண்டில் இணைந்தார்.
1965-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் உக்கிரமடைந்திருந்த நேரம், இந்த போருக்கு இந்தியா ஆபரேஷன் ரிடில் என பெயரிட்டிருந்தது. மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பாகிஸ்தான் (தற்போது வங்கதேசம்) எல்லையில் உள்ள முக்கியமான விமானப் படைத் தளமான கலாய் குண்டாவில் இவருக்கு பணி. இந்த படைத்தளத்தில் வெடி மருந்துகள், வாகனங்கள், பீரங்கிகள், கண்ணி வெடிகள் என (ஏறத்தாழ அப்போதைய மதிப்பில் ரூ.14 ஆயிரம் கோடி) ஏராளமான ராணுவ தளவாடங்கள் வைக்கப்பட்டிருந்தன.
கலாய் குண்டா படைத்தளத்தை தகர்க்க வேண்டும் என பாகிஸ்தான் ராணுவம் திட்டமிட்டு, அமெரிக்க தயாரிப்பான எப் 86 சாபர்ஜெட் போர் விமானங்களை ஏவியது. வேகமாகவும் குறி தவறாமலும் இலக்கை தாக்கி அழிக்கும் ஆயுதங்களுடன் அந்த விமானங்கள் கலாய் குண்டாவை நோக்கி பறந்தன.
1965-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் தேதி அதிகாலை 4.30 மணி. அங்கு தன் சக வீரர்களுடன் வான்வழித் தாக்குதல் தற்காப்பு பிரிவில் இருந்த மதலை முத்து தன் தலைக்கு மேலே ஒரு சாபர்ஜெட் விமானம் பறப்பதைக் கண்டார். உடன் விமான எதிர்ப்பு பீரங்கி மூலம் விமானத்தை குறி வைத்து சுட்டார். வேடனின் வில்லுக்கு பலியான பறவை போல் அந்த விமானம் அடுத்த சில நொடிகளில் தரையில் வீழ்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் வந்த மற்றொரு விமானத்தையும் சுட்டார். அது பாகிஸ்தான் எல்லையில் சென்று விழுந்தது.
இரு போர் விமானங்கள் தகர்க்கப்பட்டது மற்றும் தரைப்படை மூலம் தாக்குதல் என இந்திய ராணுவத்தின் கை ஓங்கியதையெடுத்து பாகிஸ்தான் பின் வாங்கியது.
எழுதப்படிக்கக் கூடத் தெரியாத மதலைமுத்துவின் இந்த சாதுர்யமான, அதேநேரத்தில் இலக்கு தவறாமல் எதிரி நாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தி, நம் படை தளவாடங்களை காப்பாற்றியதற்காக ராணுவத்தில் உயரிய விருதான வீர் சக்ரா விருது 1965-ம் ஆண்டில் அப்போது குடியரசுத் தலைவர் டாக்டர் ராதா
கிருஷ்ணனால் வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற முதல் தமிழர் மதலை முத்துதான்.
பெருமைமிகு மதலை முத்துவின் மகன் ஜான் மதலையை அவரது வீட்டில் சந்தித்தோம். அவர் கூறியது :
என் தந்தை மதலை முத்துவின் பெருமையை போற்றும் வகையில் 1966-ம் ஆண்டில் லால்குடி ரயில் நிலையத்தில் பெருமை சின்னம் என்ற பெயரிலான கல்வெட்டு அமைக்கப்பட்டு, அதை அப்போதைய ரயில்வே அமைச்சர் அனுமந்தையா திறந்து வைத்தார். அதை தற்போது புதுப்பித்துள்ளோம்.
ராணுவத்தில் 17 ஆண்டுகள் பணியாற்றி விட்டு, 1968-ல் ஓய்வு பெற்று, 1981-ல் இறந்து விட்டார். ஆனால், அவரது வீரச் செயலை போற்றும் வகையில் பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் உள்ள ராணுவ முகாமில் முத்து தவார் என்ற பெயரில் வரவேற்பு வளைவு, அதே இடத்தில் மதலை முத்து ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் என்ற வணிக வளாகம், அருங்காட்சியகத்தில் வெண்கல மார்பளவு சிலை ஆகியவை வைத்துள்ளனர். 2013-ம் ஆண்டில் வரவேற்பு வளைவை நான் தான் திறந்து வைத்தேன் அந்த நிகழ்ச்சிக்காக ராணுவத்தின் அழைப் பின் பேரில் நான் எனது குடும்பத்துடன் அங்கு சென்றிருந்தேன்.
இதேபோன்று ஒடிசா மாநிலம் கோபால்பூரில் பளிங்குச் சிலை, கலாய் குண்டா விமானப் படைத்தளத் தில் வீரத்தை போற்றும் கல்வெட்டு என ராணுவம் மிகப்பெரிய பெருமையை, அங்கீகாரத்தை எனது தந்தைக்கு அளித்துள்ளது என்கிறார் ஜான் மதலை.
இவருக்கு இருக்கும் ஒரே ஆசை வீரத் திருமகனாக திகழ்ந்த தனது தந்தையை நினைவு கூறும் வகையிலும், ராணுவத்தின் மீது இளைஞர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையிலும் திருச்சி - சிதம்பரம் நெடுஞ்சாலையில் லால்குடியில் அமைக்கப்பட்டு வரும் ரவுண்டானாவில் போர் நினைவுச் சின்னத்தை தமிழக அரசு அமைக்க வேண்டும் என்பது தான். இதற்காக பலருக்கும் மனுக்களை அனுப்பிக் கொண்டிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT