Published : 21 Jul 2018 09:48 AM
Last Updated : 21 Jul 2018 09:48 AM
கறுப்பு நிற காகங்களை போல் தற்போது பழுப்பு நிற காக்கைகளும் கண்டறியப்பட்டு வருகின்றன. இந்த காகங்களுடயை நிறம் குறைபாடுகள் சுற்றுச்சூழலின் சீர்கேட்டை உணர்த்துகிறதா என்பதை பறவையியல் ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
குழந்தைகளை ஏமாற்ற நாம் சில சமயங்களில், ‘‘அதோ வெள்ளைக் காக்கா பறக்குது, ’’ என்று சொல்வோம். இனி இப்படி கூட சொல்லலாம், ‘‘அதோ பாரு பழுப்புக் காகம் பறக்குது, ’’ என்று. என்னது பழுப்புக் காக்காவா என்று ஆச்சரியப் படுகிறீர்களா. ஆமாம், மிக அரிதாக வெள்ளை, பழுப்பு நிற இறகுகளுடன் பிறக்கும் காகங்களும் உண்டு. சமீபத்தில் மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில், இந்த பழுப்பு நிற அபூர்வ வகை காகம் கண்டறியப்பட்டது. இந்த காகத்தை திருமங்கலத்தை சேர்ந்த பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் தன்னுடைய கழுகு பார்வை காமிராவில் படம் பிடித்தார். இவர், கடந்த இரண்டு ஆண்டாகவே நகர்ப்புறங்களில் உள்ள காக்கைகளை நெருக்கமாக ஆய்வு செய்து வருகிறார். மனிதர்களை அண்டி இருக்கும் இந்த காகங்களின் வாழ்வில் ஏற்படும் மாறுதல்களை அவர் ஆவணப்படுத்தி வருகிறார்.
அவரிடம் அவர் பிடித்த அந்த பழுப்பு நிற காகத்தை பற்றி கேட்டபோது, ‘‘இதற்கு முன் சென்னை அருகே பழுப்பு நிறத்தில் ஒரு காகம் 2012-13 ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதே போல வட இந்தியாவில் சில இடங்களில் இது போன்ற நிற மாறுபாடு கொண்ட காகங்கள் காணப்பட்டுள்ளன. இந்த பழுப்பு காகம் மற்ற காகங்களுடன் சகஜமாகவே பழகுகிறன. இது காகங்களின் உட்பிரிவில் அண்டங்காக்கை இனத்தைச் சேர்ந்தது. அதை படமெடுத்து இந்திய அளவில் உள்ள பறவைகள் ஆர்வலர்களிடம் பகிர அனைவரும் ஆச்சரியமடைந்தனர்.
இந்த காகம், காகங்களில் தனி வகை கிடையாது. காகங்களின் உடலில் உள்ள நிறமிகளின் குளறுபடியால் ஏற்படும் விளைவுகள். நாம் நன்கு அறிந்த வெள்ளை மயில், வெள்ளை புலி என்பவைகள் எல்லாம் உடலின் நிறமிகளில் உள்ள தைரோசினேஸ் ( Tyrosinase) என்ற என்சைம்கள் முற்றிலும் செயல்படாமல் போக இவை நிறமே இல்லா நிலையில் வெள்ளையாக பிறக்கின்றன. இதை ஆங்கிலத்தில் Albinism என்று சொல்வார்கள். ஆனால் இதே நிறமிகளின் தைரோசினேஸ் (Tyrosinase) என்சைம்கள் அளவுக்கு அதிகமாக செயல்பட்டால் இயல்பாக உடலில் உள்ள நிறத்தைக் காட்டிலும் ஆழ்ந்த கருப்பு வண்ணமோ, அல்லது பழுப்பு வண்ணமோ தோன்றும்.
பொதுவாக தென்கிழக்காசிய நாடுகளிலும், கனடா, அலாஸ்கா மற்றும் சில வடஅமெரிக்க பல்கலைக் கழகங்களில் காகங்களைப் பற்றிய நிறைய ஆய்வுகள் செய்யப்படுகின்றன. அதன் மூலம் மனிதர்கள் வேண்டாம் என்று எறியும் உணவையும், கழிவுகளையும் தின்று உயிர் வாழும் காகங்களின் உடலில் நேரும் பாக்டீரியாவின் தாக்குதல்களையும் வைரஸ் தாக்குதல்கள் என்ன என்றும் கண்டு அறியப்படுகிறது.
இத்தகைய பிரச்சனைகளை எதிர்கொள்ளும் காகங்கள் ஏதோ வகையில் ஒரு கால் இல்லாமல் ஊனப்பட்டோ, அதன் வாய்புறத்தில் உள்ள அலகுகள் மிக நீண்டோ அல்லது பாதியில் உடைபட்டோ, குறைபாடுகளுடனோ பிறக்கும். எனவே இனி காகம்தானே என்று யாரும் அசட்டையாக அதை கடந்து செல்ல வேண்டாம். இந்த சூழலின் சீர்கேட்டை உங்களுக்கு உணர்த்தவே அந்த காகம் காத்திருந்து இருக்கலாம், ’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT