Published : 21 Jul 2018 09:46 AM
Last Updated : 21 Jul 2018 09:46 AM
மரபுக் கவிதையானது ஆசுகவி, மதுர கவி, வித்தாரக் கவி, சித்திரக் கவி என 4 வகைப்படும். இவை வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா, கலிப்பா என பல்வேறு பாக்களைக் கொண்டு படைப்பதாகும். இவற்றைப் படைக்கும் திறமைப் படைத்த சமகால கவிஞர்கள் இங்கொருவரும் அங்கொருவருமாக வெகுசிலரே உள்ளனர். அத்தகைய வெகுசில கவிஞர்களில் சித்திரக் கவி படைப்பதில் வல்லவராகத் திகழ்கிறார், கோவையைச் சேர்ந்த கோ.செல்வமணி.
7-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தேர், சக்கரம், மயில், கலஸம், மிருதங்கம், ஏகநாகம், இரட்டை நாகம், சதுர நாகம், அஷ்டநாகம், சிவலிங்கம், வேல், மலர், கூடை, கடகம், திருக்கை, திருவடி, மாணிக்கமாலை, சுழிக்குளம், சதுரங்கம், மலை ஆகிய சித்திரங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளைப் படைத்து வியக்கச் செய்துள்ளார். சமகால கவிஞர்களில் இதுபோன்ற சித்திரக் கவிகளை சல்லடையிட்டு தேடினால் கூட கிடைப்பார்களா என்பது கேள்விக்குறியே. மிருதங்கம் போன்ற சித்திரத்துக்குள் கட்டங்கள் வரைந்து, எத்தனை கட்டங்கள் வருகின்றனவோ, அதை எண்ணி, அந்த கட்டத்துக்கு எவ்வளவு எழுத்துகள் தேவைப்படும் என்று கணக்கிட்டு,
‘விதை விதை செவ்வமி
கப்பாருள்ளே மேல்வான்
மழைநாட ஏர்முனை சூழ்
கவிபாட கார் மேவ வாழ்’
என்ற கவிதையை வஞ்சித்துறையில் படைத்துள்ளார்.
ஒரு மயிலை வரைந்து அதன் தோகைகளை எண்ணி கணக்கிட்டு,
‘விற்சந்தம் வாங்குமகள் குண்டலினி யாட்டுங்கால்
முற்பிணி நீக்கிபொரு தும்தாயாம்-நற்கீர்த்தி
அம்மணி யேநீ யருள்புரி பண்ணினம்மே
கும்பநீர் பொங்குவாச வி’
என்று கவிதை இன்னிசை வெண்பாவால் எழுத்தப்பட்டுள்ளது.
நேரிசை வெண்பாவைக் கொண்டு கலஸ சித்திரத்தை வைத்து,
‘வாழுளமே பூவிருந்து வாழ்வதற்கும் கல்விதந்தென்
பாழுமவா வாழுண்மைப் பண்புக்கே-கூழு
முணவக்கும் வித்தகமும் நாமணக்கும் காலம்
இலக்கண மைந்தருள வா’ என்ற கவிதையைப் படைத்துள்ளார்.
இவை வெண்பாவின் இலக்கணமான எழுத்து, அசை, சீர், அடி, தொடை, தளை ஆகியவற்றைக் கொண்டு, ஈற்றடி முச்சீராகவும் ஏனைய அடிகள் நாற்சீராகவும் படைக்கப்பட்டுள்ளது இவரது தமிழ்ப் புலமைக்கு சிறந்த எடுத்துகாட்டாகும்.
சித்திரக்கவியை சந்தித்தோம், “சிறுவயதில் எஸ்.என்.நாராயணன் என்பவர் இயக்கிய கலிங்கராணி உள்ளிட்ட நாடகங்கள் நடிப்பதில் ஆர்வம் காட்டினேன். அவற்றிற்கு புலவர் புகழேந்தி என்பவர் எழுதிய வசனத்தைப் பேச முடியாமல் தவித்தேன். அக்காலக்கட்டத்தில் வேதாத்ரி மகிரிஷியால் ஏற்படுத்தப்பட்ட உலக சமுதாய சேவா சங்கத்தில் இணைந்தேன். ஆசான் சிவஞானம் என்பவர் இலக்கியங்களைப் போதித்தார். அப்போதுதான் ‘மாறன் அலங்காரம்’ என்ற நூலைப் படிக்க நேர்ந்தது. அதைப் படித்தபோது தனக்கும் அதுபோல் சித்திரங்களில் கவிதை எழுத வேண்டும் என்ற ஆவல் உண்டானது. இதை தன்னுடைய ஆசான் சிவஞானத்திடம் கூற, புதுக்கவிதை படைப்பதை அழிந்து வரும் மரபுக் கவிதையை எழுதினால் வருங்கால சந்ததியினருக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அறிவுறுத்தினார்.
அவருடன் செய்த ஆலோசனையின் முடிவில் வெண்பாக்களைக் கொண்டு, சித்திரக் கவி படைப்பது என்ற முடிவு செய்தேன். குறள் வெண்பா, சிந்தியல் வெண்பா, பக்
றொடை வெண்பா, இன்னிசை வெண்பா, நேரிசை வெண்பா ஆகியவற்றில் சித்திரக் கவி படைத்துள்ளேன். இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகள் எழுதியுள்ளேன். அவற்றில் பல செல்லரித்து போய்விட்டன.
என்னுடைய படைப்புகளை வெளியுலகத் துக்கு கொண்டுச் செல்ல பலரையும் சந்தித் தேன். ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. இதைப் பற்றிய புரிதல் இல்லாததும் ஒரு காரணமானது. இது பற்றி அறிந்த கோவை அரசு கலைக் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியை முனைவர் சந்திரா கிருஷ்ணன், என்னைப் பற்றியும் என்னுடைய படைப்புகள் குறித்தும் எழுதி நூலாக வெளியிட்டு படைப்புலகில் எனக்கொரு அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார்.
மரபுக்கவிதைகள் படித்தால் எளிதில் புரியாது என்றாலும், அதை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு இந்த படைப்புலகம் கொண்டு செல்ல வேண்டும்” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT