Published : 07 Jul 2018 08:25 AM
Last Updated : 07 Jul 2018 08:25 AM
வழக்குகளை யாருக்கு ஒதுக்குவது என்ற அதிகாரம் தலைமை நீதிபதிக்கு மட்டுமே உண்டு. அவர் இதுகுறித்து யாரிடமும் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை யார் விசாரிக்க வேண்டும் என்பதை தலைமை நீதிபதியே முடிவு செய்து வருகிறார். இதுகுறித்து சமீபத்தில் கடும் சர்ச்சை எழுந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும் சமமானவர்கள். அவர்களில் தலைமை நீதிபதி முதன்மையானவர் என்பது மட்டுமே அவரது அதிகாரம். மற்றபடி அனைத்து நீதிபதிகளும் சம அதிகாரம் படைத்தவர்கள் என்பதால், வழக்குகளை ஒதுக்கும் அதிகாரத்தை அவர் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. கடந்த ஜனவரி 12-ம் தேதி நீதிபதிகள் சலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், மதன் பி.லோக்கூர், குரியன் ஜோசப் ஆகியோர் உச்ச நீதிமன்றத்திற்கு வெளியில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்ததையடுத்து இந்த சர்ச்சை மேலும் அதிகரித்தது.
இதன் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், ‘தலைமை நீதிபதி வழக்குகளை ஒதுக்கும்போது மூத்த 5 நீதிபதிகள் அடங்கிய கொலீஜியம் அமைப்பிடம் ஆலோசித்த பிறகே ஒதுக்க வேண்டும். தன்னிச்சை யாக முடிவெடுக்க கூடாது. அப்படி முடிவெடுப்பது சட்டவிரோதம்’ என்று அறிவிக்க வேண் டும் என்று கூறப்பட்டிருந்தது.
இம்மனு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷன் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் துஷ்யந்த் தவே, கபில் சிபல் ஆகியோர் வாதிட்டனர். நீதிமன்றத்திற்கு உதவும் வகையில் மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் தனது வாதங்களை முன்வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த உச்ச நீதிமன்றம் நேற்று தனது தீர்ப்பை அளித்துள்ளது. அதில், ‘அரசியல் சட்டத்தில் தலைமை நீதிபதியின் இந்த அதிகாரம் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்றாலும், மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் நீதிமன்றத் தின் அன்றாட நடவடிக்கையில் பல குழப்பங்கள் ஏற்படும். நீதிமன்றத்தின் மாண்பையும் ஒழுக்கத்தையும் காப்பாற்ற வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதியிடம் இருப்பது அவசியம். எனவே, வழக்குகளை ஒதுக்கும் அதிகாரம் தலைமை நீதிபதிக்கே உண்டு. அவர் கொலீஜியம் அமைப்பின் மூத்த நீதிபதிகளிடம் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT