Last Updated : 06 Jul, 2018 10:25 AM

 

Published : 06 Jul 2018 10:25 AM
Last Updated : 06 Jul 2018 10:25 AM

பென்சில் பதுமைகள்: சிற்பியான கோவை இளைஞர்

மிழகத்தில் சிறந்து விளங்கும் சிற்பக் கலையின் ஆரம்பப் புள்ளியாக மலைகள் மற்றும் பாறைகள் இருந்தன. பின்னர் களிமண் பயன்பாட்டுக்கு வந்தது. உலோகங்களிலும் சிற்பங்கள் உருவாகத் தொடங்கின. காலங்கள் மாற மாற, பாறைகளில் தொடங்கிய சிற்பக்கலை படிப்படியாக அரிசி, சாக்பீஸ், சோப்பு, மணல் என பல வடிவங்களில் உருவெடுத்து, தற்போது பென்சிலில் வந்து நிற்கிறது.

மிக நுட்பமாக செய்ய வேண்டிய பென்சில் சிற்பத்தில் தடம் பதித்திருக்கிறார், கோவை பீளமேடு புதூரைச் சேர்ந்த எம்.சவீத்ரு. பிடெக். பட்டதாரி. பென்சில், சாக்பீஸ்களில் சிற்பங்களை வடித்து அசத்துகிறார். காமராஜர், நேதாஜியை பென்சில் முனைக்கு கொண்டு வந்திருக்கிறார். மனதை மயக்குகின்றன இந்த பென்சில் பதுமைகள்.

'அன்பிலார் எல்லாம் தமக்குரியர்' எனத் தொடங்கும் திருக்குறள், தமிழின் உயிர் மற்றும் மெய் எழுத்துகள், ஒட்டகச்சிவிங்கி, காண்டாமிருகம், பாம்பு ஆகிய சிற்பங்களை திறம்பட செதுக்கி இருக்கிறார். பகத்சிங், அன்னை தெரசா சாக்பீஸ் சிற்பங்களாக மனதில் நிற்கின்றனர். இவை 3 மி.மீ. உயரத்துக்குள் மிக நுண்ணிய வேலைப்பாடுகளுடன், உருவங்களைத் துல்லியமாகக் காண்பிக்கும் வகையில் அமைந்துள்ளன.

இது குறித்து சவீத்ரு நம்மிடம் கூறியது: சிறு வயது முதலே நுண்சிற்ப வடிவமைப்பில் எனக்கு ஈடுபாடு உண்டு. சோப்பில் கார்ட்டூன்களை வடிவமைத்தேன். அதை பெற்றோர் மற்றும் நண்பர்கள் ஊக்குவித்தனர். அதைத் தொடர்ந்து சாக்பீஸ், பென்சிலில் சிற்பங்கள் செய்யும் திறன் வசமானது.

பென்சிலில் சிற்பங்களை வடிப்பதற்கு 3 முதல் 7 மணி நேரம் ஆகும். இதுவரை நூற்றுக்கணக்கான சிற்பங்களை உருவாக்கியுள்ளேன். இக்கலையை தொடர் முயற்சி மற்றும் பயிற்சியால் நானே கற்றுக் கொண்டேன். இதை மற்றவர்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காக காந்திமா நகரில் உள்ள ஆதரவற்றோர் இல்ல மாணவர்களுக்கும் மேலும் 30 மாணவர்களுக்கும் இலவசமாக பயிற்சி அளித்து வருகிறேன். நுண் சிற்ப வடிவமைப்பில் சாதனை படைக்க வேண் டும் என்பது என்னுடைய நீண்டகால கனவு. அதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன் என்கிறார் அவர்.

நுட்பமான கலையை சுயம்புவாக கற்றுக் கொண்டதும், அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்கும் இந்த இளைஞர் பாராட்டுக்குரியவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x