Published : 03 Jul 2018 10:24 AM
Last Updated : 03 Jul 2018 10:24 AM

திசையெங்கும் திருவள்ளுவர்: சிலையுடன் வலம் வரும் மனிதர்

வீ

டுகள், பள்ளிகளுக்கு வள்ளுவர் சிலை செய்து கொடுக்கிறார் திருக்குறள் தொண்டர் நித்யானந்த பாரதி. பார்க்கும் இடமெல்லாம் திருவள்ளுவரே இருக்க வேண்டும். திசை எட்டும் திருக்குறள் பரவ வேண்டும் என்பதே இவரின் இலக்கு.

கோவை கணபதி பெரியார் நகரைச் சேர்ந்த பாரதி, 2002-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் பயிற்சி வகுப்புகளை நடத்துகிறார். இதுவரை பல்லாயிரக்கணக்கான மாணவர்களிடம் திருக்குறளை பேசியிருக்கிறார்.

ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் ஒப்புவித்தல், எழுதுதல், குறள் தொடர்பான ஓவியம், கதை, கவிதைப் போட்டிகள் நடத்தி, ஒவ்வோர் ஆண்டும் பரிசு வழங்குகிறார். திருவள்ளுவர் தினத்தன்று விழா எடுக்கிறார்.

கோவையில் உள்ள சிரவை ஆதீனம் கவுமார மடாலயம் முருகன் கோயில் வளாகத்தில் 'திருவள்ளுவர் அறிவுத் திருக்கோயில்' அமைத்து, நாலரை அடி உயரம் கொண்ட சிலையை நிறுவியுள்ளார். கோயிலுக்கு வரும் பக்தர்கள் பூக்களைத் தூவியும், திருக்குறளை கூறியும் வழிபாடு நடத்தி வருகின்றனர்.

இதுதவிர 13 பள்ளிகளில், 4 அடி உயர திருவள்ளுவர் சிலையை நிறுவியுள்ளார். வீடுகளுக்கும் சிலை வழங்குகிறார். இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் திருவள்ளுவர் குடி புகுந்திருக்கிறார். திருக்குறளைப் பரப்புவோருக்கு ஆண்டுதோறும் 'திருக்குறள் தொண்டர், திருக்குறள் தூதர்' உள்ளிட்ட விருதுகளை வழங்குகிறார்.

பினாயில், சோப் ஆயில், ஆசிட் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் தொழில் செய்து வரும் பாரதி, அதில் கிடைக்கும் வருவாயில் திருக்குறள் சேவையை செய்யத் தவறுவதில்லை. மரக்கன்றுகள் நடுதல், இலக்கிய அரங்கு, தொல்லியல் மாநாடு நடத்துதல், வாசிப்பு விழிப்புணர்வு, சித்த மருத்துவ முகாம், நீர் சேமிப்பு விழிப்புணர்வுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 20-க்கும் மேற்பட்ட விருதுகள் இவருக்கு கிடைத்துள்ளன.

திருவள்ளுவர் பெயரில் குளத்தை வெட்டி, மக்களிடம் ஒப்படைக்க வேண்டுமென்பதே இவரது லட்சியமாக இருக்கிறது. கோயில், அரசுப் பள்ளிகளில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு அனுமதி பெறும் முயற்சியில் இப்போது ஈடுபட்டுள்ளார் நித்யானந்த பாரதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x