Published : 06 Jun 2018 11:49 AM
Last Updated : 06 Jun 2018 11:49 AM
வீ
டியோ கேம், டேப், லேப்டாப், கம்ப்யூட்டர், செல்போன் என உட்கார்ந்த இடத்தில் மனதையும் உடலையும் வலுவிழக்கச் செய்யும் விளையாட்டுகளில் இருந்து குழந்தைகளை மீட்டு, வியர்க்க விறுவிறுக்க உடலுக்கும் மூளைக் கும் பயிற்சி தரும் விளையாட்டுகளை விளையாடச் செய்த அவசியமான நிகழ்ச்சி ஒன்று கோவில்பட்டியில் நடந்து முடிந்திருக்கிறது.
நகரம் முழுவதும் `ரயில் வண்டி’ என்ற பெயரில் வைக்கப்பட்டிருந்த விளம்பர பலகைகள் நம்மை ஈர்க்க நிகழ்ச்சி நடந்த மண்டபத்துக்குச் சென்றோம்.
அங்கு சுமார் 35-க்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒருவரின் பின்புறம் சட்டையை ஒருவர் பிடித்துக் கொண்டு ரயில் வண்டி போல் சத்தமிட்டபடி சுற்றிச் சுற்றி வந்தனர். ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் உற்சாகம் தழும்பியது. உடன் வந்த பெற்றோ ரும் ரசிக்க நிகழ்ச்சி களைகட்டியிருந்தது. நிகழ்ச்சியை நடத்திய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் உதயசங்கரை சந்தித்துப் பேசினோம்.
“இப்போதுள்ள சூழலில் குழந்தைகளுக்கு பெற்றோர், ஆசிரியர்களால் கல்வி தொடர்பான அழுத்தம் இருந்து கொண்டே உள்ளது. விளையாட்டு என்பது இல்லாமல் போய்விட்டது. அதிலும் கூடி விளையாடும் முறை அறவே இல்லை. கதை சொல்ல தாத்தா, பாட்டி கிடையாது. எப்போதும் மனஅழுத்தத்தில் ஆழ்ந்து இருப்பதால் குழந்தைகளுக்கு விரக்தி, வெறுமை ஏற்படுகிறது. இதனை போக்குவதற்காக தமுஎகச சார்பில் ரயில் வண்டி அமைப்பை தொடங்கியுள் ளோம்” எனக் கூறினார்.
குழந்தைகளை சுதந்திரமாக இருக்க விட வேண்டும், இஷ்டம் போல் இங்கே அமர அனுமதிக்க வேண்டும் என நிகழ்ச்சிக்கு வந்த பெற்றோருக்கு கட்டளையிடப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக ரயில் வண்டி ஓட்டப்பட்டது. மன இறுக்கத்தில் இருந்த குழந்தைகள் இலகுவாகினர். தொடர்ந்து உருளைக் கிழங்கை வைத்து விளையாட்டு மூலம் அனைத்து குழந்தைகளின் பெயரையும் சொல்ல வைத்து அனைவரைப் பற்றி அறிமுகப் படலம் நடத்தப்பட்டது.
வால் கோமாளி வேடமிட்ட சங்கரன்கோவில் மேல்நிலைப்பள்ளி தமிழ் ஆசிரியர் சங்கர்ராம், ஆசிரியர் மதியழகன் ஆகியோர் குழந்தைகளுக்கு சிரிப்புடன் கூடிய சிந்திக்கும் கதைகளை கூறினர். குழந்தைகளும் பதிலுக்கு தங்களுக்கு தெரிந்த பாடல்கள், கதைகளைக் கூறினர். இரண்டரை மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியின் முடிவில் பெற்றோரும் பங்கெடுத்த ரயில் வண்டி ஓட்டம் நடந்தது. பிரிய மனமின்றி விடை பெற்றுச் சென்றனர்.
இந்த நிகழ்ச்சி, குழந்தைகளிடம் என்ன விளைவுகளை ஏற்படுத்திவிடும் என உதயசங்கரை கேட்டோம்.
“கூடி விளையாடும்போது, தோல்விகளை எளிதாக எடுத்துக்கொள்ளும் பக்குவம் வரும். கோப தாபங்களை தவிர்க்க வைக்கும். ஆனால் கணினி, கைபேசியில் விளையாடும் விளையாட்டுகளில் நாம் ஒருவர்தான். வெற்றி மட்டுமே இருக்கும். இது வெளியேயும் எதிரொலிக்கும்போது, குழந்தைகளை கடுமையாக பாதிக்கும். அவற்றை களைவதே எங்களது நோக்கம்.
அடுத்த கட்டமாக குழந்தைகளுக்குள் உள்ள தனித்திறனை வெளிக்கொண்டு வரும் வகையில், கதைகள் எழுதவும் படங் கள் வரையவும் ஏற்பாடு செய்ய உள்ளோம். இதற்கு கதை பெட்டி ஒன்றை வைத்து, அதில் தேர்வாகும் கதைகள் `பஞ்சுமிட்டாய்’ இதழில் வெளியிடுவோம்” என்றார் பெருமிதத்துடன். இங்கு நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான புத்தகக் காட்சியில் ரூ.2 ஆயிரம் மதிப்பிலான புத்தகங்களை குழந்தைகள் அள்ளிச் சென்றதுதான் நிகழ்ச்சியின் முக்கிய அம்சமே. இயந்திரமயமான வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளுக்கு குழு விளையாட்டுகள் மிகவும் முக்கியத்துவமானவை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT