Published : 17 Jun 2018 10:48 AM
Last Updated : 17 Jun 2018 10:48 AM
க
டம்பவனமாக இருந்த மதுரையை பசுமையாக்க ஞாயி றுதோறும் வீடு, வீடாக மரக்கன்றுகளுடன் புறப்பட்டு விடுகின்றனர் 15 பேர் அடங்கிய ‘மழைத்துளி’ அமைப்பினர். மொபைல் போனில் அழைத்தால் போதும், ஞாயிற்றுக் கிழமை அவர்களுடைய வீட்டுவாசலில் இலவசமாக கூண்டு அமைத்து மரக்கன்று வைத்து செல்கின்றனர். இதுவரை 350 மரக்கன்றுகள் நட்டு அவற்றை பராமரிக்கவும் செய்கின்றனர்.
அந்தக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மதன்குமாரிடம் பேசினோம். ‘‘வேலைப் பளுவால் நேரம் கிடைக்காமல் வீடுகளில் மரக்கன்றுகள் வளர்ப்பதை பொதுமக்கள் பலர் தள்ளிப் போடுகின்றனர். அப்படி மரக்கன்றுகள் வளர்க்க ஆர்வமாக இருப்பவர்கள் எங்களுக்கு போன் செய்தால் நாங்களே அவர்களின் இல்லத்துக்கு நேரடியாகச் சென்று இலவசமாக மரக்கன்றுகளை நட்டு வைத்து வளர்க்க உதவுகிறோம்’’ என்றார்.
மதன்குமார் மதுரையில் விஏஓவாக பணிபுரிகிறார். ஒரு ஞாயிற்றுக்கிழமை வில்லாபுரத்தில் ஒரு வீட்டில் மரக்கன்று வைத்துக் கொண்டிருந்த அவரையும் அவரது குழுவினரையும் சந்தித்து, மரக்கன்றுகள் வளர்க்கும் ஆர்வம் துளிர் விட்டது பற்றி கேட்டோம்.
மதன்குமாரே தொடர்ந்தார். ‘‘நான் மதுரை கிருஷ்ணாபுரம் காலனியில் வசிக்கிறேன். தெற்குமாசி வீதியைச் சேர்ந்தவர் தீபா, வில்லாபுரத்தைச் சேர்ந்தவர் கோமதி ஆகியோர் எனது ‘முகநூல்’ நண்பர்கள் இந்த ‘மழைத்துளி’ அமைப்பை தொடங்குவதற்கு முன் வரை இவர்களின் முகம்கூட தெரியாது. இயற்கையாகவே நாங்கள் மரம் வளர்ப்பு, பசுமையைப் பற்றிய தகவல்களை அதிகமாக பகிர்ந்து கொள்வோம். அப்போதுதான் வெறுமனே தகவல்களை பகிர்வதால் மட்டும் சுற்றுச்சூழலுக்கு பங்களித்து விட்டதாக அர்த்தம் கிடையாது. களத்தில் இறங்கி நாமும் அதை செயல்படுத்தினால் மட்டுமே சுற்றுச்சூழல் பாதுகாப்பை சாத்தியப்படுத்த முடியும் என நினைத்தோம். அதன் விளைவாக உருவானதுதான் ‘மழைத்துளி’ அமைப்பு. முதற்கட்டமாக இல்லம் தேடிச் சென்று மரக்கன்று நட்டு உதவுகிறோம். இந்த சேவையை விளம்பரப்படுத்த ‘வாட்ஸ் அப்’ குரூப் தொடங்கி அதன் மூலம் இத்திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்கிறோம்.
மரக்கன்றுகளை நடுவதோடு பணி முடிந்துவிட்டதாக நினைக்காமல், 15 நாட்களுக்கு ஒருமுறை அந்த மரக்கன்று வளர்வதை படம் பிடித்து எங்கள் வாட்ஸ் அப்புக்கு அனுப்ப சொல்கிறோம். ஆடு, மாடு கடித்துவிட்டால் மீண்டும் புதிதாக மரக்கன்று நடுகிறோம். இதற்காக புங்கை, வேம்பு, வாதம் மரங்களை வனத்துறையினரிடம் மொத்தமாக சலுகை விலையில் வாங்குகிறோம். இதற்கு ஆகும் செலவை நாங்களே பகிர்ந்து கொள்கிறோம்.
மழையில்லாமல் மதுரையில் குடிக்கக் கூட தண்ணீர் இல்லை. ஒரு குடம் தண்ணீரை 8 ரூபாய்க்கு வாங்க வேண்டி உள்ளது. இதேநிலைதான், தமிழகத்தின் எல்லா நகரங்களிலும் நீடிக்கிறது. காடுகளில் மரங்களின் அடர்த்தி குறைந்துவிட்டது. ஊருக்குள் மரங்களை அழித்து சாலைகளும் கான்கிரீட் கட்டிடங்களும் கட்டி விட்டனர். வெயிலுக்கு ஒதுங்க மரத்தின் நிழலைப் பார்ப்பதே அபூர்வமாகி வருகிறது. சோலைக்காடுகள், புல்வெளிகளும் அழிந்து காடுகளே மழை மறைவு பிரதேசங்களாக மாறிவிட்டன. அதனால் முதற்கட்டமாக மதுரையை பசுமையாக்க முடிவு செய்துள்ளோம். அதன்பிறகு மற்ற மாவட்டங்களில் இந்த சேவையை தொடர உள்ளோம்’’ என சொல்லி முடித்தார்.
ஒரு காலத்தில் கடம்ப வனமாக இருந்த கூடல் மாநகர், நவீன மதுரை மாநகரமாக பரிணமித்த பின்னணியில் ஏராளமான மரங்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் குறையைப் போக்கும் வகையில், மழைத்துளி குழுவினரின் இந்த முயற்சியால் மீண்டும் மரங்கள் சூழ் மாநகராக மதுரை மாறட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT