Last Updated : 17 Jun, 2018 10:48 AM

 

Published : 17 Jun 2018 10:48 AM
Last Updated : 17 Jun 2018 10:48 AM

6ல் இருந்து 50 வரை மாணவர் சேர்க்கையால் மீண்ட பள்ளி

தி

ருநெல்வேலி மாவட்டம் சீதபற்பநல்லூர் அருகே உள்ள கருவநல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட 2 ஆசிரியர்கள், சத்துணவு அமைப்பாளர் ஒருவர் பணியாற்றுகின்றனர். இப்பள்ளியில், கடந்த கல்வியாண்டில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை வெறும் 12 . அவர்களில் 5-ம் வகுப்பில் பயின்ற 6 பேர் நடுநிலைக் கல்விக்காக வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். மீதம் 6 மாணவர்கள் மட்டுமே இருந்தனர்.

இதேநிலை நீடித்தால் பள்ளி மூடப்படும் அபாயம் இருப்பதை ஆசிரியர்களும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும் கிராமத்தை சேர்ந்த தன்னார்வலர்களும் உணர்ந்தனர். கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயம், கட்டுமான வேலை, பீடி சுற் றும் தொழில் செய்யும் ஏழை மக்கள். இருப்பினும் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக் கல்வியில் சேர்ப்பதையே அவர்கள் விரும்பியது தெரியவந்தது.

இதையடுத்து உதவி தொடக் கக் கல்வி அலுவலரை அணு கிய ஆசிரியர்கள், பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியை கொண்டுவந்தனர். அடுத்ததாக வீடு வீடாகச் சென்று குழந்தைகளை பள்ளிக்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக ‘அரசுப் பள்ளியை மீட்டெடுப்போம்’ என்ற பெயரில் வாட்ஸ்அப் குழுவை தொடங்கி, ஏராளமானோரை குழுவில் சேர்த்தனர். அதே ஊரைச் சேர்ந்த மகாராஜன், தங்கராஜ், விநாயக் பாபு உள்ளிட்டோர் பள்ளியை மீட்டெடுக்க முழு மூச்சாக களத்தில் இறங்கினர். உதவிகள் துளித்துளியாக சேரத் தொடங்கின.

மாணவர்களின் எண்ணிக்கை யும் உயரத் தொடங்கியது. தமிழ் வழிக் கல்வியில் 6 பேர், ஆங் கில வழிக்கல்வியில் 25 பேர், எல்கேஜி, யுகேஜியில் 17 குழந்தைகள் என 48 பேர் தற்போது படிக்கின்றனர். மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பள்ளி தலைமை ஆசிரியர் சிறிய புஷ்பம் ஆக்ஸீலியா கூறும்போது, “முதல்முறையாக பள்ளியின் ஆண்டு விழாவை நடத்தினோம். ஏராளமான மக் கள் கலந்துகொண்டார்கள். அப்போது, இந்த பள்ளியில் ஆங் கில வழிக் கல்வி வர இருப்பதை அறிவித்தோம். கோடை விடுமுறையில் ஓய்வு எடுக்காமல் ஊர் மக்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினருடன் சேர்ந்து வீடு வீடாகச் சென்று, குழந்தைகளை பள்ளியில் சேர்க்க பெற்றோரிடம் வலியுறுத்தினோம்.

இதன் காரணமாக கருவநல் லூர் மட்டுமல்லாமல் அருகில் உள்ள சிறுக்கன்குறிச்சி, முத்தநல்லூர், வேளார்குளம், வெட்டுவான்குளம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகளும் பள்ளியில் சேர்ந்தனர். 6 பேராக இருந்த மாணவர் எண்ணிக்கை 50-ஐ தொட்டது” என்றார்.

குவியும் நிதி

தன்னார்வலரான விநாயக் பாபு கூறும்போது, “வாட்ஸ் அப் குரூப் மூலம் பள்ளியை மீட்டெடுக்க உதவிகள் கேட்டோம். வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் பலரும் உதவ முன்வந்துள்ளனர். இதுவரை 90 ஆயிரம் ரூபாய் நிதியுதவி கிடைத்துள்ளது. பள்ளிக்கு குழந்தைகளை அழைத்து வர மாதம் 7 ஆயிரம் ரூபாய் வாடகைக்கு வேன் ஏற்பாடு செய்துள்ளோம்.

எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு பாடம் கற்றுத் தர முதுநிலை பட்டப்படிப்பு முடித்த சுகன்யா சிவராஜ் என்பவருக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் மாதம் 3 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசி, நியமனம் செய்துள்ளோம். பள்ளிக்கு கணினி வசதி செய்து தர ஒரு தனியார் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. பள்ளியில் உள்ள ஒரு கட்டிடத்தில் பெயின்ட் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாணவர்களுக்கு தனித்திறன்களை வளர்க்க யோகா, சிலம்பம், கராத்தே, ஓவியம், விளையாட்டு, கம்ப்யூட்டர், ஸ்போக் கன் இங்கிலீஸ் கற்றுத் தர தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். ஒரு ரூபாய் கூட கையில் இல்லாமல் தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சியுடன் செயல்படுகிறோம்.

இன்னும் 5 ஆண்டுகளில் இந்த பள்ளியை நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தி, கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதே எங்கள் லட்சியம். பள்ளியின் அருகில் உள்ள புறம்போக்கு நிலத்தை பள்ளிக்கு அரசு ஒதுக்க வேண்டும். தனி யார் பள்ளியை மக்கள் தேடிச் செல்வதற்கான காரணங்களை அரசு ஆராய்ந்து, அரசுப் பள்ளிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார் அவர். வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x