Published : 21 Aug 2014 11:00 AM
Last Updated : 21 Aug 2014 11:00 AM

ஓய்வு நாளில் உருவம் பதித்த தபால்தலை வெளியீடு: விபத்து இல்லாமல் 23 ஆண்டுகள் ஓட்டிய அரசு ஜீப் ஓட்டுநருக்கு கவுரவம்

திண்டுக்கல் மாவட்ட சமூகநலத் துறை அலுவலகத்தில் 23 ஆண்டுகள் விபத்து இல்லாமல் ஓட்டிய அரசு ஜீப் ஓட்டுநருக்கு, மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஊழியர்கள் தபால்தலை வெளியிட்டு கவுரவம் அளித்துள்ளனர்.

பொதுவாக அரசுத் துறைகளில் உயர் அதிகாரிகள் ஓய்வுபெற்றால் உடன் பணிபுரியும் ஊழியர்கள் பிரிவு உபச்சார விழா நடத்தி கொண்டாடுவர். அதே ஊழியர்கள், உடன் பணிபுரியும் கடைநிலை ஊழியர்கள் ஓய்வுபெற்றால் கண்டுகொள்வதே இல்லை.

ஆனால், திண்டுக்கல் மாவட்ட சமூகநலத் துறையில் ஓய்வுபெற்ற அரசு ஜீப் ஓட்டுநருக்கு உடன் பணிபுரிந்த அதிகாரிகள், ஊழியர்கள் ஆட்சியர் தலைமையில் பிரிவு உபச்சார விழா நடத்தி, அந்த ஓட்டுநரின் உருவம் பதித்த சிறப்பு தபால்தலை வெளியிட்டு அவருக்கு கவுரவம் அளித்துள்ளனர்.

23 ஆண்டுகளாக ஒருமுறைகூட விபத்து ஏற்படுத்தாமல் ஓட்டுநராக பணிபுரிந்த குழந்தைசாமிக்குத்தான் இந்த சிறப்பு கிடைத்துள்ளது.

அவரை `தி இந்து'வுக்காக சந்தித்தோம். அவர் கூறியதாவது:

’’1983-ம் ஆண்டு வேடச்சந்தூர் ஊட்டச்சத்து அலுவலகத்தில் பியூனாக பணிக்கு சேர்ந்தேன். அதற்குப் பிறகு ஓட்டுநராக 23 ஆண்டுகள் சிவகங்கை, விழுப்புரம், நாகப்பட்டினம், கடைசி யாக திண்டுக்கல்லில் வேலை பார்த்தேன். என்னுடைய 23 வருட டிரைவர் சர்வீஸ்ல ஒரு முறைகூட விபத்து ஏற்படுத்தல. என்னோட ஓய்வு பெறுகிற கடைசி நாள், ஆபீசுக்கு வரவே இஷ்டமில்லாம ஜீப் சாவியை ஒப்படைக்கச் சென்றேன். அன்னைக்கு, என்கூட வேலைபார்க்கிறவங்க எனக்கே தெரியாம என் உருவத்துல தபால்தலை வெளியிட்டு பாராட்டு விழா நடத்தினாங்க, ஆட்சியரே அழைத்து பாராட்டியது என்னுடைய ஓட்டுநர் வேலைக்கு கிடைத்த கவுரமாக நினைக்கிறேன்.

திருமணமாகி 33 வருஷம் ஆகுது. எனக்கு குழந்தையே இல்லை. நான் ஓட்டிய ஜீப்பைத்தான் குழந்தை மாதிரி நினைச்சேன். என்னோட இத்தன வருட சர்வீஸ்ல ஒரு முறைகூட ரிப்பேர்னு சொல்லி, இடையில அதிகாரிகளை இறக்கிவிட்டதே கிடையாது. காலையில வந்ததும் முதல் வேலையா டயர், பிரேக் எல்லாம் சரியாக இருக்கிறதா என செக் பண்ணுவேன், எல்லாம் சரியாயிருந்தாதான் வண்டிய எடுப்பேன். சரியில்லனு தோணுச்சுதுனா அதிகாரிங்க ரெடியாகுதற்கு முன்ன, வேலை பார்த்துட்டு வந்துதான் வண்டியை எடுப்பேன். எந்த நாள மறக்க நினைச்சி (ஓய்வு நாளை) கஷ்டப்பட்டனோ, இப்போ அந்த நாள மறக்க முடியாம நினைச்சு நினைச்சு சந்தோஷப்படுறேன்.

அறிவுரை

டிரைவர்களுக்கு என்னோட ஒரே அறிவுரை என்னன்னா, ஆபீஸ்ல எத்தனையோ மனக்கசப்பு இருக்கலாம், வீட்டிலும் பிரச்சினை இருக்கலாம், ஸ்டியரிங்கை பிடிச்சு ஓட்ட ஆரம்பிச்சுட்டா பிரச்சினைகளை மறந்துடணும். வண்டியை ஓட்டுவதில்தான் முழுக் கண்ணோட்டமும் இருக்கணும், இரண்டு பக்கமும் பார்க்கணும், முன்னும்பின்னும் வர்ற வண்டியைப் பார்க்கணும். செல்போனை தொடவே கூடாது என்றார்.

சக ஊழியர்களை கவுரவிக்கலாம்

முன்பெல்லாம் முக்கிய தலைவர்கள் பெயரில், அதுவும் அரசு நினைத்தால் மட்டுமே தபால் தலை வெளியிடும் அதிகாரம் பெற்றி ருந்தது.

கடந்த 2013-ம் ஆண்டு இந்திய தபால்துறையானது தபால் தலை களை பிரபலப்படுத்த `மை ஸ்டாம்ப்' என்ற திட்டத்தை நாடு முழுவதும் தொடங்கியது.

இந்தத் திட்டத்தில், சக ஊழியர்கள், அதிகாரிகள் பாராட்டு விழா, பிரிவு உபச்சார விழா, குழந்தைகள் பிறந்த நாள் விழா, திருமண நாள் உள்ளிட்ட சம்பந்தப்பட்டவர்களை கவுரவிக்க, அவர்கள் பெயரில் தபால்தலை வெளியிடலாம். இதற்கு தபால் அலுவலங்களில் கவுரவிக்க விரும்பும் நபருடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முகவரி சான்றுடன் விண்ணப்பத்தை நிரப்பி ரூ.300 கட்ட வேண்டும்.

அடுத்த 8-வது நாளில் நீங்கள் கவுரவிக்க விரும்பும் நபர் உருவம் பதித்த 12 தபால்தலைகளை நேரடியாக தபால் அலுவலகத்தில் சென்று பெற்றுவிடலாம். வீட்டுக்கே தேடி வர, பதிவு தபால் கட்டணம் 25 ரூபாயை விண்ணப்பப் படிவத்துடன் சேர்த்து கட்டவேண்டும். இதில் ஒரே நிபந்தனை என்னவென்றால் தபால்தலை பதிக்கப்படும் நபர் உயிரோடு இருக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட தபால் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x