Published : 24 Jun 2018 11:17 AM
Last Updated : 24 Jun 2018 11:17 AM
1980-ல் மதுரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிர் பிழைத்து, வயிற்றை துளைத்த துப்பாக்கி தோட்டாவை அப்படியே வயிற்றிலேயே வைத்துக்கொண்டு 38 ஆண்டுகளை கடந்திருக்கிறார் எல்லீஸ் நகரைச் சேர்ந்த ஏ.சி. ஏ. ஆனந்தன் (66). தோட்டா வயிற்றில் தஞ்சம் புகுந்த கதையை அறிய வேண்டுமானால் 38 ஆண்டுகள் பின்னோக்கி பயணிக்க வேண்டும்.
ஆனந்தன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். 1980-ல் மக்களவைத் தேர்தல் நடந்த நேரம். மதுரை தொகுதியில் திமுக - காங்கிரஸ் கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் சுப்புராமும் அதிமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் ஏ.பாலசுப்பிரமணியனும் போட்டியிட்டனர். மார்க்சிஸ்ட் கட்சிக்கு மதுரை வலுவான தளம் என்பதால், வெற்றிக்காக இரு அணியினரும் தீவிரம் காட்டினர்.
இதையொட்டி தேர்தல் பிரச்சாரத்தில் பல பிரச்சினைகள் ஏற்பட்டன. பிரச்சாரத்தின் கடைசி நாளான 1980 ஜனவரி 4-ம் தேதி காலை திமுக கூட்டணிக்கும் பிற்பகல் அதிமுக கூட்டணிக்கும் ஊர்வலம் நடத்த போலீஸார் அனுமதி கொடுத்தனர். அதுவே கலவரத்துக்கு காரணமாகிவிட்டது.
ஓபுளாபடித் துறை அருகே இரு அணியினருக்கும் இடையே மோதல் வெடித்தது. கலவரத்தை அடக்க போலீஸார் துப்பாக்கியை பிரயோகப்படுத்தினர். இதில், 2 பேர் துப்பாக்கிச் சூட்டில் இறந்தனர். 38 பேர் படுகாயமடைந்து, அன்றைய மதுரை எர்ஸ்கின் மருத்துவமனையில் (தற்போதைய அரசு ராஜாஜி மருத்துவமனை) சேர்க்கப்பட்டனர்.
குண்டடிபட்டவர்களில் எஸ்எஸ் காலனியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய ஊழியரும் சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணியின் (தற்போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்) நகரச் செயலாளருமான ஆனந்தன் முக்கியமானவர். அவரது தோள்பட்டையிலும், வயிற்றிலும் தோட்டா துளைக்க உயிருக்கு போராடினார்.
அன்றைய தினம் நிகழந்தது குறித்து ஆனந்தன் தொடர்ந்தார். “துப்பாக்கிச்சூடு சம்பவம் நடப்பதற்கு முன் கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். உயிர் தப்பிக்க ஊர்வலத்தில் வந்தவர்கள் வைகை ஆற்றில் குதித்தனர். ஆற்றில் பெரிய அளவில் தண்ணீர் வராததால் அதில் குதித்துப் பலர் தப்பினர். அதன் பிறகும் கூட்டத்தை கலைக்க முடியாததால், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
சம்பவத்தை கேள்விப்பட்டு, காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லவதற்காக ஓபுளா படித்துறைக்குச் சென்றேன். 2 பேர் குண்டடிபட்டு விழுந்து கிடந்தனர். அவர்கள் எந்தக் கட்சிக்காரர்கள் என்றெல்லாம் பார்க்கவில்லை. மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முனைப்பில் அவர்களை கைத்தாங்கலாக தூக்கியபோது, விர்ரென பறந்து வந்த தோட்டா ஒன்று எனது இடது தோள்பட்டையை துளைத்தது. மற்றொன்று வயிற்றில் புதைய, குடல் சரிந்து கீழே விழுந்தேன்.
அதன் பிறகு என்ன நடந்தது என எனக்குத் தெரியாது. பிழைக்க வழியில்லை என மருத்துவனையில் சொல்லிவிட்டனர். 6 நாட்கள் மயக்க நிலையில் இருந்தேன். அன்றைய பத்திரிகைகளில் உயிர் ஊசலாடுகிறது என செய்திகள் வந்தன. அப்போதைய முதல்வர் எம்ஜிஆரும் அமைச்சர் காளிமுத்துவும் ஆறுதல் கூறினர். அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தேன். 5 மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தோள் பட்டையில் இருந்த தோட்டாவை எடுத்த மருத்துவர்கள், வயிற்றில் இருந்ததை எடுக்கவில்லை. உயிருக்கு ஆபத்து என்பதால் அப்படியே விட்டுவிட்டனர்.
குண்டடிபட்டபோது எனக்கு 26 வயது. தற்போது 67 வயது. 38 ஆண்டுகளாக என் வயிற்றில் அந்த துப்பாக்கி தோட்டா பத்திரமாக உள்ளது. இடை யில் ஸ்கேன் செய்து பார்த்தபோது, தோட்டாவைச் சுற்றி பந்துபோன்ற சதை வளர்ந்துள்ளது, ஆபத்து இல்லை என்றனர் மருத்துவர்கள்.
என்னை துப்பாக்கியால் சுட்டவர் பி-1 ஸ்டேஷன் விளக்குத்தூண் இன்ஸ்பெக் டர் தேவராஜன். அவர் எனக்கு நல்ல நண்பரும்கூட. பின்னாளில் ஒருமுறை அவரை சந்திக்க நேர்ந்தது. அப்போது அவர், “திட்டமிட்டு எதுவும் செய்யவில்லை” என்றார். நான், விடுங்க சார்ன்னு கடந்து சென்றேன். துப்பாக்கிச் சூடு பற்றி விசாரணை கமிஷன் அமைத்தனர். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை” என கூறி முடித்தார், இப்போதும் கட்சி உறுப்பினராக தொடரும் ஆனந்தன்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பரபரப்பாக பேசப்படும் இந்த காலகட்டத்தில், மதுரை துப்பாக்கிச் சூட்டில் உயிர் பிழைத்ததுடன், அதில் பிரயோகப்படுத்தப்பட்ட தோட்டாவை சுமந்து திரியும் ஆனந்தனின் அனுபவம் நமக்கு ஆச்சரியத்தை தருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT