Published : 24 Jun 2018 11:19 AM
Last Updated : 24 Jun 2018 11:19 AM
திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புலிக்குத்திக் கல் ஒன்று 1200 ஆண்டுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தையும் அதன் கலாச்சாரத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இதுகுறித்து திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தைச் சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார், ர.குமார், சு.சதாசிவம், க.பொன்னுசாமி, சு.வேலுசாமி ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். இதுதொடர்பாக பொறியாளர் சு.ரவிக்குமார் கூறும்போது...
“பண்டைய காலத்தில் மக்களுக்கு கால்நடைகளே பெரும் செல்வமாக விளங்கின. விளைநிலங்களை மட்டுமின்றி, வேளாண் தேவைகளுக்கு இன்றியமையாத கால்நடைகளையும் பாதுகாத்தனர். அப்போது கால்நடைச் செல்வங்கள் தனி மனிதனின் உடமையாக மட்டுமின்றி, பொது உடமைச் செல்வமாகப் போற்றி பேணப்பட்டு வந்தது.
இக்கால்நடைகளை காக்க, புலியுடன் சண்டையிட்டு வீர மரணமடைந்த வீரனின் நினைவாகவும் வீரத்தின் அடையாளமாகவும் வீர நடுகற்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொல்காப்பியத்தில் புறத்திணையியலில் நடுகற்கள் பற்றிய செய்திகள் உள்ளன. சங்க காலத்தில் வீரர்களுக்கு இருந்த பெருமைகளை சங்கப் பாடல்கள் உணர்த்துகின்றன.
தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள வீரநடுகல் 65 செமீ அகலம், 120 செமீ உயரம் கொண்டது. வீரனின் தலை வலதுபுறம் சாய்ந்த நிலையில் உள்ளது. வலது கையில் உள்ள ஈட்டியால் புலியின் கழுத்துப் பகுதியைக் குத்தும் வகையிலும் இடது கையை, தன்னைத் தாக்கும் புலியைத் தடுக்கும் வகையிலும் வீரநடுகல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புலியின் முன்னங்கால் இரண்டும் எழுந்த நிலையில் வீரனின் இடுப்புப் பகுதியிலும் பின்னங்கால் இரண்டும் வீரனின் இடதுகால் மேல் அழுத்திய நிலையிலும் உள்ளன. புலியின் வால் அதன் இரண்டு கால்களுக்கு இடையே மடிந்த நிலையில் உள்ளது. காது, கழுத்துப் பகுதிகளில் அணிகலன்களும், கையில் வீரக்காப்பும் உள்ளது. இடையில் மட்டும் வீரன் ஆடை அணிந்துள்ளார். இதன் இடது மேல் பக்கவாட்டில் 6 வரிகளைக் கொண்ட வட்டெழுத்துச் செய்தி உள்ளது.
அதில் தேவரு, புலிகு, (த்)தி பட்டார், கல் ஆகிய வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து பாதுகாக்க வேண்டும்” என்றார்.
தொல்லியல் துறை வரலாற்றுப் பேராசிரியர் எ.சுப்புராயலு, உதவி இயக்குநர் (ஓய்வு) ர.பூங்குன்றன் ஆகியோர் கூறும்போது, ‘மேற்படி கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள முதல் இரண்டு வரிகளும் மிகவும் அழிந்துவிட்டன. கடைசி நான்கு வரிகளில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் விளக்கம், தேவரு என்பவர் இப்பகுதியில் இருந்த கால்நடைச் செல்வங்களைப் புலியிடம் இருந்து காப்பாற்றியபோது, புலி தாக்கி இறந்துவிட்டார். அவரது வீரத்தையும், தியாகத்தையும் போற்றி வழிபடும் வகையில் இவ் வீரநடுகல், 1200 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது.
இந் நடுகல் உள்ள பகுதிக்கு அருகே பெருங்கற்படைக் காலத்து மக்கள் வாழ்ந்த ‘சாம்பற்காட்டுத் தோட்டம்’, அம்மக்களின் வாழ்வுக்குப் பிறகு அடக்கம் செய்யும் ‘பாண்டியக்காடு’ ஆகியவை இன்றும் இருப்பதால், பொங்குபாளையம் கிராமமும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் நாகரிகத்தைக் கொண்டுள்ளன. இது தமிழகத்தில் வட்டெழுத்துக்களுடன் கிடைக்கப்பெற்ற 2-வது கல்வெட்டு’ என்றனர்.
ஒரு கல் என்பது ஒரு கண்ணாடி போல கடந்த கால வரலாற்றை காட்டுகிறது. கீழடியைப் போல இன்னும் பல நாகரிகங்கள் கொண்ட பெருமை தமிழ்ச்சமூகத்துக்கு உண்டு என்பதற்கு மிகச் சிறிய சான்றுதான் இந்த புலிக்குத்திக் கல்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT