Published : 03 Jun 2018 08:25 AM
Last Updated : 03 Jun 2018 08:25 AM
தெலுங்கு நடிகர் சிவாஜி கூறிய ‘ஆபரேஷன் கருடா’ திட்டம் உண்மையாக இருக்கக்கூடும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சந்தேகம் தெரிவித்துள்ளார்.
புதிய ஆந்திர மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, நேற்று ஆந்திர மாநிலம் முழுவதும் மாவட்டங்கள்தோறும் ‘நவநிர்மான தீட்சை’ எனும் பெயரில் அரசு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, விஜயவாடாவில் நடந்த நிகழ்ச்சியில் சந்திரபாபு பேசியதாவது:
ஆந்திர மாநில பிரிவினை சட்டத்தை மத்திய அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும். மாநில சிறப்பு அந்தஸ்து என்பது ஆந்திர மக்களின் உரிமை. இதனை விட்டுக் கொடுக்க மாட்டோம். ஆந்திர மாநிலத்தை காங்கிரஸ் கட்சி வரைமுறைகள் இன்றி பிரித்துவிட்டது. அதனால், காங்கிரஸுக்கு ஆந்திர மக்கள் கடந்த தேர்தலில் தக்க பாடம் கற்பித்தனர்.
தற்போது பாஜகவும் சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் ஆந்திர மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. எனவே, 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.
இன்றைய அரசியல் செயல்பாடுகளை வைத்து பார்க்கும்போது, தெலுங்கு நடிகர் சிவாஜி கூறிய ஆபரேஷன் கருடா திட்டம் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. எங்கள் தெலுங்கு மக்களை அரசியல் ரீதியாக ஏமாற்ற நினைத்தால் அதற்கு தகுந்த பதிலடி கொடுப்போம்.இவ்வாறு சந்திரபாபு நாயுடு பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT