Published : 23 Jun 2018 10:05 AM
Last Updated : 23 Jun 2018 10:05 AM
தே
ர்தல்களில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு புதிய வழியைக் காட்டியிருக்கிறார் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலமரத்துப்பட்டியைச் சேர்ந்த இந்த பொறியியல் பட்டதாரி குருசாமி. முயற்சிக்கும் சாதனைக்கும் வறுமை தடையில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். இவரது தந்தை கருப்பசாமி. ஆப்செட் தொழிலாளி. தாய் விஜயலட்சுமி தீப்பெட்டித் தொழிலாளி.
புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, தேர்தலில் பொதுமக்கள் சிரமம் இன்றி இருந்த இடத்தில் இருந்தே வாக்களிக்கும் வகையில் புதிய செல்போன் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளார்.
"இந்த செயலி தேர்தல் ஆணையம், வாக்காளர்கள், தேர்தல் முடிவு என 3 பகுதிகளைக் கொண்டது. தேர்தல் ஆணை யம் பகுதியில் ஆதார் எண் அடிப்படையில் 18 வயது பூர்த்தியானவர்கள் பட்டியல் பதிவேற்றம் செய்யப்படும். அத்துடன் தேர்தலின்போது வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் விவரங்கள் பதிவு செய்து வைக்கப்பட்டிருக்கும். வாக்காளர் தமது ஆதார் எண்ணை பயன்படுத்தி லாக்-இன் செய்யலாம். உடனே அவரது செல்போன் எண்ணுக்கு "ஒன் டைம் பாஸ்வேர்டு" எனப்படும். அதை "என்டர்" செய்தவுடன் திரையில் வேட்பாளர் பட்டியல் தோன்றும். வாக்காளர் தாம் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரை தேர்வு செய்து கிளிக் செய்தவுடன், வாக்களிக்க விருப்பமா என்று உறுதி செய்யும் பெட்டி தோன்றும். ஆம் என்று கிளிக் செய்தால் குறிப்பிட்ட வேட்பாளருக்கு வாக்கு பதிவாகும்.
அதைத் தொடர்ந்து, வாக்காளரின் ஐ.டி. லாக்-அவுட் ஆகிவிடும். அவரால் மறுபடியும் வாக்கு செலுத்த முடியாது. வாக்குப்பதிவு நடக்க, நடக்க அந்த எண்ணிக்கை கூடிக்கொண்டே இருக்கும். வாக்குப்பதிவு நேரம் முடிந்ததும் உடனடியாக, ஒவ்வொரு வேட்பாளருக்கும் பதிவான வாக்கு எண்ணிக்கை விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்து விடலாம். போனில் வைக்கும் கைரேகையும், ஆதார் அட்டை கைரேகையும் பொருந்தினால்தான் வாக்கு செலுத்த முடியும் என்பதனால் முறைகேட்டுக்கு வழியில்லை. மேலும் பிரைவேட் கிளவுட் முறையில் செயல்படுத்தலாம் என்பதால் இதில் யாரும் ஊடுருவ முடியாது என்றும் "நேரடி சாட்லைட் சிக்னல்" மூலமும் இதை இயக்கலாம் என்பதால் எந்த பாதுகாப்பு குறைபாடு இருக்காது. அத்துடன் மனித உழைப்பு குறையும் பணவிரயத்தை தடுக்கலாம்” என்கிறார் குருசாமி.
இவரின் கண்டுபிடிப்பு இந்த நவீன காலத்துக்கு பொருந்தினாலும் இதில் உள்ள சாதக பாதங்களை கணக்கிட்டு மெருகேற்றினால், உண்மையில் நூறு சதவீத வாக்களிப்பு சாத்தியமாகலாம். தேர்தல் ஆணையம் பரிசீலிக்கட்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT