Last Updated : 03 Jun, 2018 10:03 AM

 

Published : 03 Jun 2018 10:03 AM
Last Updated : 03 Jun 2018 10:03 AM

நாய்கள்(ஜாக்கிரதை) அக்கறை: பரிவு பாராட்டும் நெல்லை வியாபாரி

நா

ய்கள் மீது பரிவும், பாசமும் காட்டி தினமும் அவற்றுக்கு உணவு அளிப்பதால், திருநெல்வேலி டவுனில் நெல்லையப்பர் காந்திமதியம்மன் கோயில் கிழக்கு ரத வீதியிலுள்ள மீரஷாவின் கண் கண்ணாடி கடை முன்பு எப்போதும் நாய்களின் கூட்டம் அலைமோதும். இது அன்றா டம் நடக்கும் செயல் என்பதால் தினமும் இரவில் கடை முன்பு நாய்கள் ஆஜராகிவிடுகின்றன. அவைகளுக்கு உணவு வழங்கிவிட்டுத்தான் கடையை சாத்துகிறார்.

தொடக்கத்தில் நாய்கள் கூட்டம் அதிகமானதால், ஆட்டோ ஓட்டுநர்களும் பாதசாரிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் கல்லால் அடித்து விரட்டினர். அவர்களி டம் இருந்து நாய்களை காக்க மீராஷா மல்லுகட்ட வேண்டியிருந்தது. இந்த விவகாரம் போலீஸ் வரை சென்றது. போலீஸாரும் வந்து பார்த்துவிட்டு அமைதியாகச் சென்றுவிட்டனர்.

நோய்வாய்ப்பட்டோ, நடக்க முடியாமலோ நாய்களை பார்த்துவிட்டால், அவற்றுக்கு மருத்துவம் பார்த்து, உணவளித்த பின்புதான் மீராஷாவுக்கு மறுவேலை. இதற்காகவே தனது மோட்டார் சைக்கிளில் எப்போதும் சில தடுப்பு மருந்துகள், முதலுதவி உபகரணங்களை வைத்திருக்கிறார்.

வாகனங்களில் அடிபட்டு நடக்க முடியாத நிலையிலுள்ள பல நாய்களை திருநெல்வேலி அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் உயர் சிகிச்சை தேவைப்பட்டால், சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவமனைக்கும் சென்று காப்பாற்றியிருக்கிறார்.

கோடை வெயில் கொளுத்தும் நிலையில், பொதுமக்களுக்காக ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டுள்ளன. நாய்களுக்கு ஏதும் அப்படி ஏற்பாடு இல்லாததால், தனது கடைமுன் தண்ணீர் தொட்டியை கட்டி தாகம் தீர்க்க ஏற்பாடு செய்துவிட்டார்.

தெருவில் வாழ்ந்து தெருவிலேயே வாழ்க்கையை முடிக்கும் நாய்களை அடக்கம் செய்ய தனி இடமில்லை. அவற்றுக்கென தனியாக இடம் ஒதுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மீராஷாவின் நீண்ட நாள் கோரிக்கை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x