Last Updated : 27 Jun, 2018 09:22 AM

 

Published : 27 Jun 2018 09:22 AM
Last Updated : 27 Jun 2018 09:22 AM

குறளுக்கு ஓவியம்: அன்பின் கலை ‘ஸ்பாட் டிராயிங்’

திருக்குறளின் கருத்துகளுக்கு ஓவியம் வரைந்து விளக்கிய கிருஷ்ணகிரி அன்பு, தற்போது இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஸ்பாட் டிராயிங் ஓவியக்கலையை சொல்லிக் கொடுக்கிறார். பலர் இக்கலையால் சாதித்து வருகின்றனர். கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதிவாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள சத்யசாய் நகரில் வசித்து வருபவர் அன்பு(எ) அன்பழகன் (50). இவரது மனைவி உஷா, அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர்.

சிறு வயதிலிருந்தே ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் கொண்ட அன்புக்கு படிப்பில் அதிக நாட்டமில்லை. ஆசிரியர் பாடம் நடத்தும்போது வகுப்பறையில் பாடத்தை கவனிக்காமல், ஆசிரியரை கவனித்து ஓவியமாக வரைந்து விடுவது இவரது வழக்கம். திட்டுவதற்கு வரும் ஆசிரியர் கூட இவரது ஓவியத் திறமையை கண்டு பாராட்டி விடுவார்கள்.

பிளஸ் 2 முடித்தவுடன் படிப்பைத் தொடராமல், முழு நேர ஓவியரானார். வணிக ரீதியான விளம்பரப் படங்களை வரைந்தார். 200-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு ஓவியம் கற்றுத் தந்து, அவர்களது வாழ்வாதாரத்துக்கு உதவுகிறார்.

இவர் கடந்த 2005-ம் ஆண்டு திருக்குறளின் கருத்துகளை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் 200 குறள்களுக்கு ஓவியம் வரைந்தார்.

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், காஞ்சிபுரம் உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடந்த ஓவிய கண்காட்சிகளில் இந்தத் திருக்குறள் ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ளார்.

10 ஆண்டுகள் கடந்து, 2015-ல் கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 7 மணி நேரத்தில் 133 மாணவிகள் மூலம் 1330 குறட்பாக்களுக்கு திருக்குறள் கருத்திற்கேற்ப ஓவியங்களை வரையும் நிகழ்ச்சியை நடத்தினார். முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவின்போதும் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போதும் கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே தார் சாலையில் பெரிய அளவிலான ஓவியத்தை வரைந்து அசத்தினார். தற்போது இளைஞர்களுக்கும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக ஸ்பாட் டிராயிங் பயிற்சி அளித்து வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘200 திருக்குறளை ஓவியமாக வரைந்து பல்வேறு இடங்களில் காட்சிக்கு வைத்தேன். பொருளாதார பலம் இல்லாததால் மேற்கொண்டு ஓவியம் வரைய முடியவில்லை. ஓவியக் கண்காட்சிக்கு வரவேற்பும் குறைந்தது. தற்போது இளைஞர்களுக்கும் ஸ்பாட் டிராயிங் பயிற்சி அளித்து வருகிறேன். ஒருவரை நேருக்கு நேர் உட்கார வைத்து அப்படியே அச்சு அசலாக வரைவதுதான் ஸ்பாட் டிராயிங். எவ்வித முதலீடும் இல்லாமல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஸ்பாட் டிராயிங் ஓவியக் கலை மூலம் வருவாய் ஈட்டலாம்.

மக்களிடம் நாம் வரையும் படம் பேச வேண்டும். முகத்தை ஓவியமாக வரைந்து பார்க்க வேண்டும் என அனைவருக்கும் விருப்பம் உண்டு. இதனால் ஸ்பாட் டிராயிங் கலைக்கு நல்ல வரவேற்பு உண்டு” என்றார்.

கலையை நம்பு கலை உன்னை வாழ வைக்கும், வரைந்து பார் வாழ்க்கை வசப்படும் என ஹைகூ கவிதைபோல பேசுகிறார். ஓவியம் மட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் உலக அமைதிக்காக நடைபயணம், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கான 10-க்கும் மேற்பட்ட அறிவுத்திறன் போட்டிகளை நடத்தி மாணவர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x