Published : 01 Jun 2018 09:49 AM
Last Updated : 01 Jun 2018 09:49 AM
நடந்து முடிந்த பிளஸ் 1 பொதுத் தேர்வில் மதிப்பெண் குறைந்ததற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் வெவ்வேறு காரணங்களைக் கூறுகிறார்கள்.
இதுதொடர்பாக ‘தி இந்து’விடம் அவர்கள் கூறியதாவது:
ஆர்.ராஜராஜன், கல்வியாளர்: நுழைவுத் தேர்வுகளுக்குத் தேவையான அடிப்படை அறிவை மாணவர்கள் பெறுவதில்லை என்ற காரணத்துக்காகத்தான் பிளஸ் 1 தேர்வை கடந்த ஆண்டு பொதுத்தேர்வாக அரசு அறிவித்தது. ஆனால், பொதுத் தேர்வின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் அளிக்கப்படவில்லை. அதனால், வழக்கமான தேர்வுபோல இந்தத் தேர்வையும் மாணவர்கள் கருதிவிட்டனர்.
தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பிளஸ் 1 மதிப்பெண்களும் உயர்கல்விக்கு முக்கியம் என்பதை மாணவர்கள் உணர்ந்துள்ளனர். மருத்துவப் படிப்பு, ஐஐடி சேர்க்கை போன்றவற்றுக்கு மேல்நிலைக் கல்வி மதிப்பெண் தேவையில்லை. ஆனால், பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டுவரை நுழைவுத் தேர்வு இல்லை. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இந்தச் சூழலில், தற்போது வெளியான பிளஸ் 1 முடிவுகளின்படி, ஏழை மாணவர்கள் பொறியியல் சேர்க்கை கட் ஆஃப் மதிப்பெண்ணுக்கு குறைவான மதிப்பெண் பெறும் நிலைதான் உள்ளது. எனவே கலந்தாய்வின்போது, முதல்முறை பிளஸ் 1 தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண்களை கணக்கில் கொள்ளக்கூடாது. அவர்களின் பிளஸ் 2 மதிப்பெண்ணை மட்டும் பார்க்க வேண்டும்.
எம்.அனந்தகிருஷ்ணன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்: முன்பு பிளஸ் 1 பாடத்துக்கு கவனம் செலுத்தாமல், மதிப்பெண்களை மட்டும் குறிக்கோளாகக் கொண்டு பிளஸ் 2 பாடத்துக்கு கவனம் செலுத்தினர். இதனால், அடிப்படை விஷயங்களை மாணவர்கள் கற்றுக்கொள்வதில் குறைபாடு இருந்து வந்தது. அதைப் போக்கவே பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத் தேர்வு கொண்டுவரப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டு முதல் பிளஸ் 1-க்கு புதிய பாடத்திட்டம் அமலாக உள்ளது. அதை சிறந்த முறையில் பயிலும் மாணவர்கள் நுழைவுத் தேர்வுகளில் சிறப்பாக வெற்றிபெறுவர்.
சரண்யா, பிளஸ் 1 மாணவி, தாராபுரம்: பிளஸ் 1 தேர்வுக்கு புளூ பிரின்ட் அளிக்காதது மதிப்பெண்கள் குறைய முக்கிய காரணம். மேலும், அறிவியல் பாடங்களில் ஒரு மதிப்பெண் கேள்விகள் கடினமாக இருந்தன. எதிர்பாராத கேள்விகளும் இடம்பெற்றிருந்தன. பாடத்தின் உட்பகுதியில் இருந்தும் கேள்விகள் கேட்கப்பட்டன. பிளஸ் 1 மதிப்பெண்களும், கட் ஆஃப் மதிப்பெண்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை தேர்வு முடிவுகள் வெளியான பின்னரே உணர்கிறோம். 10, 11, 12-ம் வகுப்புகள் என அடுத்தடுத்து பொதுத் தேர்வு எழுதுவது மனதளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
சி.அமுதா, பிளஸ் 1 மாணவரின் தாய், திருப்பூர்: பிளஸ் 1 பொதுத் தேர்வு தேவையான ஒன்றுதான். அடிப்படையை சொல்லித் தராமல், பல பள்ளிகளில் ஒரே பாடத்தை 2 ஆண்டுகள் சொல்லித் தருகின்றனர். இதனால், மாணவர்கள் மதிப்பெண் பெறுகிறார்களே தவிர, கல்லூரியில் மிகவும் சிரமப்படுகின்றனர். நடந்து முடிந்த பிளஸ் 1 தேர்வில் கேள்விகள் சற்று கடினமாக இருந்ததாக பிள்ளைகள் தெரிவித்தனர். புதிய கேள்வித்தாள் முறை என்பதால், கேள்விகளை சற்று எளிமையாக கேட்டிருக்கலாம். மாணவர்கள் உயர் கல்விக்குச் செல்லும்போது அவர்கள் கட்-ஆஃப்-ல் இந்த மதிப்பெண் கண்டிப்பாக தாக்கத்தை ஏற்படுத்தும்.
எட்வர்டு சாலமன் ராஜா, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர், நெல்லிக்குப்பம், கடலூர்: பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு என்பது நல்ல நடைமுறைதான். ஆனால், பொதுத் தேர்வு என்பதை மாணவர்கள் முழுமையாக உணராதது மதிப்பெண் குறையக் காரணமாகிவிட்டது. கல்வியாண்டின் தொடக்கத்திலேயே இதற்கு அனைத்து நிலைகளிலும் உரிய கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மாணவர்கள் எதிர்கொண்ட சிரமங்களை கருத்தில்கொண்டு நடப்பாண்டு பிளஸ் 1 தேர்வை எழுதிய மாணவர்களுக்கு மட்டும் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள ‘இம்ப்ரூவ்மென்ட்’ தேர்வுமுறையை அனுமதிக்க வேண்டும்.
வி.கிருஷ்ணவேணி, காட்டம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை, கோவை: கடைசிவரை மாணவர்கள் பிளஸ் 1 பொதுத் தேர்வுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து தயாராகவில்லை. பாடங்கள் அதிகம் இருந்தும் அதில் இருந்து 70 மதிப்பெண்களுக்கே கேள்விகள் கேட்கப்பட்டன. பாடங்களின் உட்பகுதியில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால் எதையும் புறக்கணிக்காமல் மாணவர்கள் முழுமையாக படிக்கும் நிலைக்கு ஆளானார்கள். இதனால், சராசரி மாணவர்கள் சிரமப்பட்டனர். இந்தக் காரணங்களால்தான் மதிப்பெண் குறைந்துள்ளன.
தொடர்ந்து 2 ஆண்டுகள் பொதுத்தேர்வு என்பதாலும், புதிய தேர்வு முறையாலும் இந்த ஆண்டு பிளஸ் 1-ல் அறிவியல் பாடப்பிரிவு தேர்ந்தெடுத்த மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. பலர் கலைப்பிரிவு பாடங்களையே தேர்வு செய்தனர். புதிய முறையை மாணவர்கள் ஏற்றுக்கொள்ள இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். புதிய, பாடத்திட்டம், தேர்வு முறைக்கு ஏற்ப ஆசிரியர்களும் தயாராவது அவசியம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT