Published : 03 Jun 2018 10:04 AM
Last Updated : 03 Jun 2018 10:04 AM
நீ
லகிரி மாவட்டம் உதகையில் இருந்து 70 கிமீ தொலைவில் கேரள மாநில எல்லையில் அமைந்துள்ளது எருமாடு கிராமம். சேர மன்னர்கள் காலத்தில் போருக்குச் செல்லும்போது, யானை மற்றும் குதிரைப் படைகள் நீண்ட நாட்கள் இங்கு தங்க வைக்கபட்டதாகவும் அந்த விலங்குகளின் சாணம் மலைபோல் குவிக்கப்பட்டிருந்ததால் இப்பகுதி எருமேடு என அழைக்கப்பட்டதாகவும் பின்னர் எருமாடு என மருவியதாகவும் கூறப்படுகிறது.
எது எப்படியோ, எருமாடு எனும் பெயரைத் தாண்டி வெகுஜன மக்களை ஈர்த்து வருகிறது அங்குள்ள அரசு தொடக்கப் பள்ளி. தமிழகத்தில் பல அரசு தொடக்கப் பள்ளிகள் மூடுவிழா கண்டு வரும் நிலையில், சுமார் 250-க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்டு, மாவட்டத்திலேயே அதிக மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப் பள்ளி என்னும் பெருமையோடு இயங்கி வருகிறது.
எருமாடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிகவும் வறிய நிலையிலுள்ள பனியர், குரும்பர் பழங்குடியின மக்கள் மற்றும் தாயகம் திரும்பிய தோட்டத் தொழிலாளர்களின் ஒரே புகலிடமாக விளங்குவது இப்பள்ளிதான். வறுமை, மது, அதனினும் கொடுமையாக பழங்குடிகளை ஆட்டுவிக்கும் ரத்தசோகை (சிக்கில்செல் அனிமியா) போன்ற பாதிப்புகள் உட்பட மோசமான குடும்பச் சூழலில் சிக்கித் தவிக்கும் மாணவர்களின் ஒரே நம்பிக்கை இப்பள்ளிதான்.
ரேஷனில் கிடைக்கும் இலவச அரிசியை நம்பி மட்டுமே, பல குடும்பங்கள் இங்கு வாழ்கின்றன. இவர்களின் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து தேவைப்பட, பசலைக் கீரை கூட்டு முதல் பல்வேறு வகை காய்கறி குழம்பு என அனைத்தும் பள்ளி வளாகத்தில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கொண்டு மதிய உணவு தயார் செய்யப்படுகிறது.
இதற்கு வித்திட்டவர், பள்ளியில் உதவி ஆசிரியராக பணிபுரியும் கே.ஜே.மேத்யூ. இவர், மாணவர்களுக்கு சத்தான உணவு வழங்கவும் இயற்கை விவசாயம் குறித்து தெரிந்து கொள்வதற்காகவும் பள்ளி வளாகத்தில் இருந்த வெற்றிடத்தை சீரமைத்து சிறிய காய்கறி தோட்டத்தை உருவாக்கினார். இதனால் வெற்றிடங்கள் எல்லாம் முட்டைகோஸ், கத்தரிக்காய், வெண்டை, கீரைகள், பீட்ரூட், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை என விளைந்து கிடக்கிறது. அறுவடை செய்யப்படும் காய்கறிகள் பள்ளியின் சத்துணவு தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.
இதுதொடர்பாக ஆசிரியர் கே.ஜே.மேத்யூ கூறும்போது, ‘‘மாணவர்களிடம் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட தோட்டம் இது. இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறோம். நல்ல விளைச்சல் கிடைக்கிறது. பராமரிப்பதும் எளிதாக உள்ளது’’ என்றார்.
பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.பி.யாகோப் கூறும்போது, ‘‘ஆரம்பத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டுடன் பள்ளி வந்த குழந்தைகள், இப்போது எங்களின் திட்டமிட்ட சத்துணவு காரணமாக அவர்களின் ஆரோக்கியம் மேம்பட்டுள்ளது’’ என்கிறார் பெருமையுடன்.
மதிய உணவுத் திட்டம் கொண்டுவந்தது காமராஜர், சத்துணவு கொண்டுவந்தது எம்ஜிஆர் என்ற தகவல்கள் ஒருபுறம் இருக்க, பள்ளியின் சத்துணவை நிஜமாகவே சத்தான உணவாக மாற்றி சாதித்திருக் கிறார்கள் இப்பள்ளியின் ஆசிரியர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT