Published : 17 Jun 2018 10:27 AM
Last Updated : 17 Jun 2018 10:27 AM
என்னுடைய பழைய டிஜிட்டல் கேமராவில் நான் எடுத்த புகைப்படங்களையும் கேமரா கைபேசி வாங்கிய பிறகு நான் எடுத்த புகைப்படங்களையும் சில நாட்களுக்கு முன்பு தேடித் தொகுத்தேன். கிட்டத்தட்ட எட்டு ஆண்டு காலப் புகைப்படங்கள் சிதறியும் அழிந்தும்போய்விடக் கூடாது என்பதற்காக அந்த முயற்சியில் ஈடுபட்டிருந்தேன். அப்போது ஒரே கணினியின் பல்வேறு கோப்புகளில் ஒரே படத்தின் நகல்கள் சேமிக்கப்பட்டிருந்ததைக் கண்டறிந்தேன். நகல்களை அழிப்பதன் மூலம் கணினியில் இடத்தைச் சேமிக்கலாம் என்பதற்காக எல்லாப் புகைப்படங்களையும் ஒரே இடத்தில் வந்து கொட்டினேன். அப்படிக் கொட்டும்போது ஒரே படங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தால், அவற்றைச் சேர்த்துக்கொள்ளலாமா இல்லை விட்டுவிடலாமா என்று கணினி கேட்கும் அல்லவா? அதன் மூலம் நகல்களைக் கண்டுபிடித்துக் களையெடுத்தேன். கணினியில் மட்டுமல்லாமல் ஹார்ட் டிஸ்க்கிலும் அதே படங்கள் பல முறை பல்வேறு கோப்புகளில் இருப்பதைக் கண்டறிந்தேன். எல்லாவற்றையும் ஒரே இடத்தில் கொட்டிக் களையெடுத்து முடித்தபின் புகைப்படங்களின் எண்ணிக்கையைப் பார்த்து மலைத்துப் போய்விட்டேன். எட்டு ஆண்டுகளில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகைப்படங்கள். அதாவது சராசரியாக ஒரு நாளைக்கு 3 படங்கள்.
என்னைப் பொறுத்தவரை அதிகமாக இருக்கலாம். ஆனால், உலக சராசரி
யைப் பொறுத்தவரை என்னுடைய தனிப்பட்ட எண்ணிக்கை மிகவும் குறைவே.
கேமரா கைபேசியை வைத்திருக்கும் ஒரு நபர் சராசரியாக ஒரு நாளைக்கு 10 படங்கள் எடுப்பதாக ஒரு தரவு கூறுகிறது. அப்படியென்றால் ஒரு ஆண்டுக்கு 3,650 படங்கள். இன்றைய தேதியில் உலக மக்கள்தொகை சுமார் 760 கோடி; அதில் சரிபாதி மக்களிடமாவது கேமரா கைபேசி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஆக,
3,650-ஐ 380 கோடியால் பெருக்கினால் 13 லட்சத்து 87
ஆயிரம் கோடி (13,87,000,00,00,000). ஒரு படம் ஏறத்தாழ
ஒரு எம்.பி. அளவில் இருக்கிறது என்று வைத்துக்கொண்
டால், ஒரு ஆண்டுக்கு மொத்தம் 13 லட்சத்து 87 ஆயிரம் கோடி எம்.பி. அளவில் படங்கள் எடுக்கப்படுகின்றன.
சிக்கல் இங்குதான்! எடுத்த படங்களை என்ன செய்வோம்? கைபேசியிலிருந்து கணினியில் சேமித்துக் கொள்வோம், கணினியிலிருந்து பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க் போன்றவற்றில் சேமித்துக்கொள்வோம். வாட்ஸ்-அப்பிலும் மின்னஞ்சலிலும் அனுப்பிக்கொள்வோம். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிர்வோம், கூகுள் டிரைவ், கிளவுட் போன்ற இணைய சேமிப்பகங்களில் சேமித்து வைப்போம். ஆக, முன்பு போல படச்சுருள்கள், அவற்றைக் கழுவி உருவாக்கிய படங்கள், அவற்றுக்கான ஆல்பங்கள் போன்று இடத்தை அடைக்கும் சேமிப்பு முறை தற்போது இல்லை என்று நாம் எண்ணிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், படங்கள் என்ற பெயரில் நாம் போட்டுக்கொண்டிருக்கும் டிஜிட்டல் குப்பைகள் முந்தைய படச்சுருள்களைவிட அதிகமாகவே இடத்தை அடைத்துக்கொண்டிருக்கின்றன.
ஒரு ஆண்டுக்கு உலகத்தில் எடுக்கப்படும் படங்கள் அனைத்தையும் ஹார்ட் டிஸ்க்குகளில் சேமிக்க வேண்டும் என்றால், ஆயிரம் ஜி.பி. சேமிப்பு வசதியுள்ள சுமார் 1,38,70,000 ஹார்ட் டிஸ்க்குகள் தேவைப்படும். ஒரு ஹார்ட் டிஸ்க் இந்திய மதிப்பில் ரூ.4,000 என்று வைத்துக்கொண்டால் ஒட்டுமொத்தமாக ரூ. 5,548,00,00,000. ஆக, ஒன்று இடத்தை அடைக்கிறது என்றால் அது அடைக்கும் இடமானது பணத்துடனும் தொடர்புடையது. கூடவே, அதை உருவாக்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் உள்ளிடப்படும் மனித உழைப்பு, இயற்கை - செயற்கை வளங்கள், நேரம் போன்றவற்றையும் கணக்கில் எடுத்துக்கொண்டு பாருங்களேன்.
டிஜிட்டல் யுகம் நம் உணர்விலிருந்து இடத்தையும் காலத்தையும் மறைத்து விடுவதால், இது எதுவுமே நமக்கு உறைப்பதில்லை. எந்த ஒன்றையும் அதீதமாக ஜனநாயகப்படுத்தும்போது அது தன்னைத்தானே அழித்துக்கொள்ளும் என்று சொல்வார்கள். டிஜிட்டல் தொட்ட பல விஷயங்களுக்கு இது பொருந்தும். முன்பெல்லாம் கேமராவுக்கான படச்சுருள் வாங்கும்போது 36 படங்கள்தான் எடுக்க முடியும் என்பதால் பார்த்துப் பார்த்து எடுத்தோம். டிஜிட்டல் யுகத்துக்கு முன்பு ஒரு மனிதர் தன்னுடைய படங்கள் பத்து வைத்திருந்தாலே அதிகம். அதிகபட்சமாக நூறு படங்கள் வரை வைத்திருக்க வாய்ப்புண்டு. பொது வாழ்க்கையில் ஈடுபடும் மனிதரென்றால், பத்திரிகைகளால் அடிக்கடி புகைப்படம் எடுக்கப்படும் வாய்ப்பிருப்பதால் நூற்றுக் கணக்கில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம். ஆனால், அப்படிப்பட்டவர்கள் லட்சத்தில் ஒருவராகத்தான் இருப்பார்கள். முன்பெல்லாம் ஒரு ஆளுமையைப் பற்றி ஆவணப்படம் எடுக்க வேண்டுமென்றால் அவரது அரிதான ஒன்றிரண்டு புகைப்படங்களை வைத்து, மற்றவர்களின் நினைவுகளை அதில் பின்னி ஆவணப்படம் எடுப்பார்கள். இன்றோ, நாம் வாழ்நாள் முழுவதும் எடுத்திருக்கும் புகைப்படங்களை வரிசையாக ஒன்றிணைத்து அடுத்தடுத்து ஓட்டினால் ஒவ்வொருவருக்கும் ஒரு ஆவணப்படம் கிடைத்துவிடும்.
2015-ம் ஆண்டின் உலகப் புகழ்பெற்ற புகைப்படம் எது தெரியுமா? ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் வருகைதந்த ஒரு நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. ஜானி டெப் வரும்போது வேடிக்கை பார்த்த அனைவரும் கைபேசி ஏந்திக்கொண்டு புகைப்படம் எடுத்தபடியோ வீடியோ எடுத்தபடியோ இருக்க, ஒரே ஒரு பாட்டி மட்டும் கைபேசி இல்லாமல் ஜானி டெப்பை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். நிகழும் கணத்தில் முழுமையாய் வாழ்பவர் என்று ஒரே நாளில் உலகெங்கும் அவரது படம் பிரபலமானது. நம்மில் பலரும் நிகழும் கணத்தை அனுபவிப்பதைவிட அதைப் படமெடுப்பதிலேயே அதிக கவனம் செலுத்துகிறோம். அதனால், ஒரு நிகழ்வுக்கு சாட்சியாக நாம் எடுக்கும் புகைப்படங்கள் நம்மிடம் இருந்தாலும் அந்த நிகழ்வு சார்ந்து அனுபவரீதியான உணர்வு ஏதும் இல்லாமல் போகிறது.
“ரயில், பேருந்து, டாக்ஸி என்று பல வாகனங்களில் பயணித்து, பல நாட்கள் செலவிட்டு இமயமலையில் அழகான இடமொன்றுக்குப் போவோம். பின்னணியில் மலைச்சிகரம் தெரிய சில செல்ஃபிகள் எடுத்துவிட்டுத் திரும்பிவிடுவோம். பணத்தையும் நேரத்தையும் இவ்வளவு செலவுசெய்து அந்த இடத்துக்கு வந்தது செல்ஃபி எடுக்கத்தானா? அதை ரசிக்க இல்லையா?” என்று நண்பர் ஒருமுறை வருத்தப்பட்டதை இங்கு நான் நினைத்துப்பார்க்கிறேன். “சிந்திக்கிறேன், அதனால் இருக்கிறேன்” என்று பிரெஞ்சு தத்துவ அறிஞர் ரெனே தேகார்த் கூறினார். நாமோ இன்று, “செல்ஃபி எடுக்கிறேன், அதனால் இருக்கிறேன்” என்று அந்தத் தத்துவத்தை மறு வரையறை செய்திருக்கிறோம்.
எல்லாவற்றுக்கும் இடம் தேவை, காலம் தேவை. இந்த இடத்தில் டிஜிட்டல் படங்களுடன் நினைவுகளை ஒப்பிடத் தோன்றுகிறது. நினைவுகள், யோசனைகள் போன்றவை உருவமில்லாதவை; அதனால், இடத்தை அடைத்துக்கொள்ளாதவை என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். நினைவுகளும் யோசனைகளும் உருவமில்லாதவைதான். ஆனால், அவை உருவாவதற்கு உருவமுள்ள ஒன்று தேவைப்படுகிறது. நம் மூளை. அது இடம் சார்ந்தது. அதற்கும் எல்லை இருக்கிறது. கருவில் நம் மூளை உருவான கணத்திலிருந்து இந்தக் கணம் வரை நாம் எதிர்கொண்ட அனுபவங்கள் மூளையில் நிரந்தரமாகப் பதிந்திருக்க நம் மூளையில் போதுமான இடம் கிடையாது. அதனால்தான், தேவைப்படுபவற்றை மட்டும் நிரந்தர நினைவாகவும் தேவையற்றவைகளைத் தற்காலிக நினைவாகவும் மூளை பராமரிக்கிறது. இதற்கு மறதி என்னும் வசதி மிகவும் பயனுள்ளது. எந்த நினைவுமே அழியாமல் நம்முள் இருந்தால் நம் மூளை என்னவாகும்? நாம் என்ன ஆவோம்?
இணையவெளியும் மூளையைப் போன்
றதுதான். அதற்குள் படங்கள் என்ற பெயரில் கணக்கற்ற நினைவுகளை நாம் போட்டு அடைத்துக்கொண்டே வருகிறோம். அவை, இணைய குப்பைகளாகவும், அதன் விளைவாக மின்
னணுக் குப்பைகளாகவும் வாழ்க்கைக்கும் சூழலுக்கும் பெருங்கேடு விளைவிப்பவையாக மாறிவருகின்றன.
நம் கையில் வசதியாக ஒரு சாதனம் இருக்கிறது. அது நம் அனுபவங்கள், நினைவுகளையெல்லாம் படமாகப் பதிவுசெய்து தள்ளுகிறது. இதற்குத் தேவையான முயற்சி ஒரு பொத்தான் குறியீட்டை அழுத்துவது மட்டுமே. ஆகும் நேரம் ஒரு நொடி மட்டுமே என்பதால், தினமும் கணக்கில்லாத படங்களை எடுக்கிறோம். நம் கைபேசி, கணினி, ஹார்ட் டிஸ்க், இணையம் என்று எல்லாவற்றையும் நிரப்பிக்கொண்டிருக்கிறோம். இப்படியாக வாழ்க்கை முழுவதும் புகைப்படங்கள்!
படங்களை விட முக்கியமானது வாழ்க்கை. முதலில் வாழ்வனுபவங்களைச் சேகரிப்போம். அவற்றின் அரிய பதிவுகளாக மட்டும் புகைப்படங்கள் இருக்கட்டும். அழகிய நினைவுகளுக்கும் அழகிய பூமிக்கும் அதுவே நல்லது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT