Published : 30 May 2018 09:39 AM
Last Updated : 30 May 2018 09:39 AM

மீனாட்சி., லட்சுமி., ராணி., லிங்கம்.. திருச்சியில் ஒரு சிங்காரவேலன்

ழகி இங்கே பார்…! மீனாட்சி அந்தப் பக்கம் போ…! லட்சுமிக்கும் ராணிக்கும் தண்ணி காட்டியாச்சா? இப்படி, தான் வளர்க்கும் ஒவ்வொரு மாடுகளையும் பெயர் சொல்லி அழைக்கிறார் தினேஷ்குமார். என்ஐடி-யில் எம்பிஏ படித்து, சென்னையில் நல்ல சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த தினேஷ்குமார் தற்போது திருச்சியில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறார். அதாவது அழியும் நிலையில் உள்ள நாட்டு மாடுகளை, பண்ணை வைத்து பராமரிக்கிறார்.

‘நவீன இளைஞர் கூட்டம் எங்கேயோ போய்க்கொண்டிருக்க, இவருக்கு ஏன் நாட்டு மாடுகள் மீது அக்கறை?’ என்ற கேள்வியோடு அவரை சந்தித்தோம். நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டது:

‘‘பார்க்கும் வேலையை விட்டுட்டு மாடு வளர்க் கப் போறேன் என்றதும் வீட்டில் எல்லோரும் அதிர்ந்துட்டாங்க. அப்புறம், புடிச்ச வேலையை செய்ய குடும்பம் கிரீன் சிக்னல் கொடுக்க, பணியை தொடங்கிவிட்டேன். துறையூரில் தாத்தா வீட்டில் 60 மாடுகள், ஆடு, கோழி என பட்டியே நிரம்பி இருக்கும். இதனால் கிராமத்து வாசமும், மாடுகளின் நேசமும் படித்து பெரிய வேலைக்குச் சென்ற பிறகும் குறையவில்லை.

திருச்சி அருகே ஒரு ஏக்கர் நிலத்தில் பண்ணை அமைத்து, குஜராத் மாநில காங்கிரிஜ் நாட்டு மாடுகள் 6 வாங்கி அதில் விட்டேன். இதுபோக 3 ஜல்லிக்கட்டு காளைகளும் இருக்கின்றன.

நாட்டு மாடுகள் குழந்தை போன்ற குணம் உடையவை. நம் வீட்டில் உள்ள ஒருவராகத்தான் எண்ணத் தோன்றும். அதனால்தான், ‘அழகி’, ‘மீனாட்சி’, ‘லட்சுமி’, ‘ராணி’, ‘லிங்கம்’ என ஒவ்வொரு மாட்டுக்கும் பெயர் வைத்து அழைக்கிறேன். பெயரைக் கேட்டுக் கேட்டு, அவற்றுக்கும் பழகிவிட்டன.

அற்புதமான நாட்டு மாடுகளை எல்லாம் அழித்துவிட்டு, நம்ம மண்ணுக்கு தொடர்பில்லாத கலப்பினம், மரபணு மாற்றப்பட்ட மாடுகளை பரப்பிட்டாங்க, இவற்றால் மண்ணுக்கோ, மனுசனுக்கோ எந்த பலனும் இல்ல. நாட்டு மாடு பால் குறைவாக கறக்கலாம். ஆனால், ஒவ்வொரு சொட்டும் தாய்ப்பாலுக்குச் சமம். பால் மட்டுமல்ல; சாணம், கோமி யம் உட்பட எல்லாமே மருத்துவ குணம் கொண்டவை.

நம்ம விவசாயிங்க, விவசாயம் கைவிட்டுப் போன உடனே மாட்டை வித்துடுறாங்க. ஆனா மாடு வளர்ப்பில் பால் மட்டுமே ஆதாரம் அல்ல. வெண்ணெய், நெய் என மதிப்பு கூட்டி சந்தைக்கு கொண்டு வரலாம்.

மாட்டின் கழிவுகளை வைத்து கோமிய அரக்கு, ஊதுபத்தி, கொசுவர்த்தி சுருள், விபூதி, இயற்கை மருந்து, பஞ்சகவ்யம் போன்ற பொருட்கள் தயாரிக்கலாம்.

தமிழகத்தில் பர்கூர், காங்கேயம், செம்மரை, அலிகார், உம்பளசேரி உள்ளிட்ட பல நாட்டு மாடுகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. இந்திய அளவில் கிர், தார்பார்க்கர், சாகிவால், காங்கிரிஜ், ராட்டி போன்ற நாட்டு மாடுகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டன” என்று ஆதங்கப்பட்டார் தினேஷ்குமார்.

நமது மாட்டினத்தை நாம்தான் காக்க வேண்டும் என்ற எண்ணமும், இந்த மாட்டுப் பண்ணை அமைய காரணம் என்கிறார் தினேஷ்குமார். ஒரு இனத்தின் வரலாறு என்பதை சமகால மனிதனின் கால்நடை வளர்ப்பில் இருந்தும் அறிய முடியும். அந்த வகையில், நமது பாரம்பரியத்தைக் காக்க, பாரம்பரிய மாட்டினங்களைக் காப்பதும் முக்கியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x