Published : 11 Aug 2014 09:44 AM
Last Updated : 11 Aug 2014 09:44 AM
மேட்டூர் அணை ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தண்ணீரைக்கொண்டு காவிரி பாசனப் பகுதிகளில் வறண்டு கிடக்கும் ஏரி, குளங்களை நிரப்ப பொதுப்பணித் துறை திட்டமிட வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் கன மழை காரணமாக கர்நாடக அணைகள் நிரம்பி கடந்த 10 நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையொட்டி டெல்டா பாசனத்துக்கென அணை ஆக.15-ம் தேதி திறக்கப்படுமென தமிழக முதல்வர் அறிவித்திருந்தார்.
சனிக்கிழமை அணைக்கு நீர்வரத்து 89,000 கன அடியாக உயர்ந்தது. அணை வேகமாக நிரம்பி வருவதைக் கருத்தில்கொண்டு தமிழக அரசு அறிவித்ததற்கு 5 நாட்கள் முன்னதாகவே ஞாயிற்றுக்கிழமை (ஆக.10) அணை திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இந்த தண்ணீரை வீணாக்காமல் காவிரி பாசனப் பகுதிகளில் வறண்டுகிடக்கும் ஏரி, குளங்கள் மற்றும் நீர்நிலைகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் காவிரிப் பாசன பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள்.
இதுகுறித்து காவிரி டெல்டா பாசன விவசாயிகள் நலச் சங்க செயல் தலைவர் மகாதானபுரம் ராஜாராம் கூறியது:
மேட்டூர் அணையை அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அணை நிரம்பி, ஒரே நேரத்தில் அதிக அளவில் தண்ணீர் திறப்பதால், தண்ணீர் பயனற்றுப் போகும் என்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. காவிரி பாசனப் பகுதிகளில் உள்ள நீர் நிலைகளை நிரப்ப பொதுப்பணித் துறை திட்டமிட வேண்டும் என்றார்.
தஞ்சாவூர் மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்க துணைத் தலைவர் வெ.ஜீவக்குமார் கூறியபோது, “கடந்த ஆண்டில் திடீரென ஒரு லட்சம் கன அடிக்கு மேல் நீர் வந்ததால், அவை காவிரி மற்றும் கொள்ளிடத்தில் திறக்கப்பட்டு வீணானது. இந்த அனுபவத்தை பொதுப்பணித் துறை பாடமாகக் கொண்டு இந்த ஆண்டாவது தண்ணீரை வீணாகாமல் பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் மழையில்லாததால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. ஏரிகள், குளம் மற்றும் குட்டைகள் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கின்றன. அணையிலிருந்து முன்னதாக திறக்கப்படும் நீரை பயன்படுத்தி இவைகளை நிரப்ப உரிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை பொதுப்பணித் துறை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
வறட்சியால் குடிநீருக்கே பெரும் பஞ்சத்தை சந்தித்துவரும் நிலையில், தற்போது வரும் நீரை பயனுள்ள முறையில் பயன்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்கான திட்டமிடுதல்களை காவிரிப் பாசன மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள், பொதுப்பணித் துறையினர், வேளாண்மை மற்றும் வருவாய்த் துறையினர் விவசாயிகளுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் விவசாயிகள் மட்டுமல்லாது பொதுமக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT