Published : 18 May 2018 09:04 AM
Last Updated : 18 May 2018 09:04 AM
மி
கவும் சாதாரண நிலையில் இருந்த 4 பெண்கள் தங்களின் குடும்பச் சூழலைக் கருதி, இருண்டு கிடந்த தங்களது வாழ்க்கையில் எல்இடி பல்பு தயாரிப்பு மூலம் வெளிச்சத்தை பாய்ச்சி இருக்கிறார்கள்.
தஞ்சாவூரைச் சேர்ந்த ஏசு ரோஸ் ராணி, சுமதி, கவிதா, சரண்யா ஆகியோர்தான் அந்த 4 பேர். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் 4 பேரும் திருமணமான இல்லத்தரசிகள். இப்போது தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர்.
மாவட்ட மகளிர் திட்டம் மூலம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் எல்இடி பல்பு கள் அசெம்பிள் செய்யும் ஒருமாதப் பயிற்சியில் சேர்ந்தனர். பயிற்சியை நிறைவு செய்தபின், தொழிலில் இறங்கினர். கடந்த 8 மாதங்களாக எல்இடி பல்புகளை அசெம்பிள் செய்து வருகின்றனர். இந்த வேலையை இவர்கள் மட்டுமே அதாவது மகளிர் மட்டுமே செய்கின்றனர். இவர்களைச் சந்தித்தோம்.
“திருமணமான பின்னர், வீட்டுச்சூழலால், வேலைக்குச் செல்ல முடிவெடுத்தோம். எங்கு போவது என அல்லாடிக் கொண்டிருந்த நேரத்தில்தான், இந்த சுயதொழில் பயிற்சியில் சேர்ந்தோம். ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாவிட்டாலும், பயிற்சி பெற்றபோதே, இதை தொழிலாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் மட்டும் எங்களுக்குள் ஒன் றாக இருந்தது.
எல்இடி பல்புகள் பயன்பாட்டை அரசு ஊக்குவித்து வருவதால், சந்தை வாய்ப்பும் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை இருந்தது. இதில் பல்புகளை சால்ட்ரிங் வைப்பது தான் பிரதான வேலை. ஒரு மாதப் பயிற்சி முடித்த பிறகு அதுவும் எளிதானது. தஞ்சாவூர் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கக் கட்டிடத்தில், அப்துல் கலாம் சுய உதவிக் குழு என்ற பெயரில் எல்இடி பல்புகள் அசெம்பிளிங் கடை வைத்துள்ளோம். நைட் லாம்ப், பல்பு, சீரியல் விளக்கு ஆகியவற்றை தயாரிக்கிறோம்.
இந்தத் தொழிலை தொடங்குவதற்கான முதலீட்டுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை பரிந்துரை செய்ததன்பேரில் மத்திய கூட்டுறவு வங்கியில் இருந்து 4 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் கடனுதவி கிடைத்தது.
இப்போது, வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஸ்டால் அமைத்து பல்புகளை விற்பனை செய்கிறோம். தவிர, அரசுப் பொருட்காட்சிகள், அரசு சார்பில் நடைபெறும் கண்காட்சிகள் எந்த மாவட்டத்தில் நடைபெற்றாலும் மாவட்ட மகளிர் திட்டம், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம் மூலம் அங்கு சென்று விற்பனை செய்து வருகிறோம்.
எல்இடி விளக்கால், மின்சார செலவு குறை யும் என்பதாலும், பழுது ஏற்பட்டால் நாங்களே சீரமைத்துத் தருகிறோம் என்று உத்தரவாதம் அளிப்பதாலும் பொதுமக்கள் அதிக அளவில் இவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதனால், அவர்களது வீடுகள், நிறுவனங்களில் மட்டுமல்லாமல் எங்கள் வாழ்க்கையிலும் எல்இடி பல்பு வெளிச்சம் தருகிறது” என்றனர் பெருமை பொங்க.
முயன்றால் எதுவும் சாத்தியம் என்பதை செய்து காண்பித்திருக்கிறார்கள் நால்வரும். ஹவுஸ் வைஃப் எனச் சொல்லிக்கொள்ளும் ஒவ்வொருவரும் முயன்றால் தொழில் முனைவோர்தான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT