Published : 18 May 2018 09:06 AM
Last Updated : 18 May 2018 09:06 AM
க
ம்பைச் சுற்றும்போது எதை வீசினா லும் உடல் மேல் படாமல் எதிரியை நிலைகுலைய வைக்கும் சாகசம் நிறைந்த வீரக்கலைதான் சிலம்பம். தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் நிறைந்திருந்த இந்த விளையாட்டு இப்போது வீடி யோ கேம்ஸ்களாக உருமாறி நிற்கிறது.
மனதுக்கும் உடலுக்கும் வலுவேற்றும் சிலம்பக் கலையை தேடிப்பிடித்து கற்க வேண்டிய நிலை ஏற்பட்டது இந்த நூற்றாண்டின் சோகம். இருப்பினும் சிலம்பத்தை அழிந்துவிடாமல் காத்து நிற்கும் ஆசான்கள் இப்போதும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான் பாக்குடி அழகிரி. கிராமப்புறம் மற்றும் நகர்ப்புற மக்களிடம் சிலம்பக் கலையை கொண்டு சேர்க்கும் பணியை விடாமல் செய்து வருகிறார்.
இந்த வீரக் கலையோடு பின்னிப் பிணைந்ததுதான் புதுக்கோட்டை அறந்தாங்கி அருகே உள்ள பாக்குடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்தான் சிலம்ப ஆசான் அழகிரி. இப்போது வசிப்பது சென்னை ஆவடி அருகே உள்ள அயப்பாக்கத்தில். தனது 8 வயதில் கழுகுமனையார் சந்திரசேகரிடம் சிலம்பாட்டத்தை கற்கத் தொடங்கி, 16 வயதுக்குள் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான சிலம்பம், வேல் கம்பு, மான் கொம்பு, வாள் வீச்சு மற்றும் கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுத் தேர்ந்தார். தெற்காசிய அளவிலும் மாநில அளவிலும் சிலம்பாட்டப் போட்டிகளில் பரிசுகளை அள்ளிக் குவித்தார்.
இப்போது, தமிழ்நாடு கம்பு விளையாட்டு மற்றும் ஆயுத விளையாட்டுக் கழகத்தின் போட்டி அமைப்பு இயக்குநராக இருக்கிறார். கட்டுமானத் தொழில்தான் இவர் பணி என்றாலும், சிலம்பாட்டக் கலையை வளர்ப்பதுதான் பிரதான பணி. கடந்த 25 ஆண்டுகளாக தொய்வில்லாமல் இந்த காரியத்தை செய்து வருகிறார். அதன்படி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்களில் வாரந்தோறும் இலவசமாக சிலம்பம் கற்றுத் தருகிறார்.
ஆவடி அடுத்த அயப்பாக்கம் வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பேரறிஞர் அண்ணா பூங்காவில் ஞாயிறுதோறும் காலை வேளையில் இலவசமாக சிலம்பாட்ட பயிற்சி அளிக்கிறார். பூங்கா நடைபயிற்சியாளர்கள் சங்கத்தினரின் ஒத்துழைப்போடு வழங்கப்படும் இந்த பயிற்சியில் 400-க்கும் மேற்பட்டோர் அழகிரியின் மாணவர்கள்.
இதுகுறித்து அழகிரி கூறும்போது, “மூத்த குடியான தமிழ்க்குடியின் போர் கலைகளின் தாய் கலை சிலம்பாட்டம். இந்த கலை, தற்காப்புக் கலை மட்டுமல்ல, தன்னம்பிக்கை மற்றும் துணிச்சலை அளிக்கக் கூடியது. இதனை கணினி யுகத்திலும் தொடர்ந்து வளர்க்க வேண்டும் என்ற நோக்கில் இலவச பயிற்சி வழங்கி வருகிறேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT