Published : 12 Apr 2018 08:06 AM
Last Updated : 12 Apr 2018 08:06 AM
கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது நாடித்துடிப்பும் எகிறியதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி தெரிவித்தார்.
ஐபிஎல் டி20 தொடரில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி ஆந்த்ரே ரஸலின் வாணவேடிக்கையால் 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 202 ரன்கள் குவித்தது.
203 ரன்கள் இலக்குடன் பேட் செய்த சென்னை அணி 19.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 205 ரன்கள் விளாசி வெற்றி பெற்றது. இந்த ஆட்டம் கடைசி வரை ரசிகர்களை பரபரப்பாகவே வைத்திருந்தது. தோனியும், சேம் பில்லிங்ஸூம் 13-வது ஓவரில்தான் ஆட்டத்தை வேகமெடுக்கச் செய்தனர். 22 பந்துகளில், வெற்றிக்கு 49 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் தோனி (25) ஆட்டமிழக்க, ரவீந்திர ஜடேஜா களமிறக்கப்பட்டார்.
அதிரடி வீரரான பிராவோ இருந்த போதிலும் ஜடேஜா களமிறக்கப்பட்டதால் ரசிகர்கள் சற்று ஏமாற்றத்துக்குள்ளானார்கள். கொல்கத்தா பந்து வீச்சை புரட்டி எடுத்த சேம் பில்லிங்ஸ் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழக்க ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். 8 பந்துகளில் 18 ரன்கள் தேவையாக இருந்த நிலையில் பிராவோ களம் புகுந்தார். 19-வது ஓவரின் கடைசி இரு பந்துகளிலும் தலா 2 ரன்கள் சேர்க்கப்பட்டன. கடைசி ஓவரை வினய் குமார் வீசினார்.
முதல் பந்தையே நோபாலாக வீச பிராவோ சிக்ஸராக மாற்றினார். நோபாலுக்கு மாற்றாக வீசப்பட்ட அடுத்த பந்தில் 2 ரன்கள் சேர்க்கப்பட்டன. 2-வது பந்தில் பிராவோ 2 ரன்கள் எடுக்க முயற்சித்தார். ஆனால் ஜடேஜா மறுமுனையில் மறுப்பு தெரிவிக்க அந்த கணத்தில் பிராவோ மட்டும் அல்ல... ரசிகர்களும் ஆவேசம் அடைந்தனர். ஜடேஜாவை ஆட்டமிழந்து வெளியே செல்லுமாறும் ரசிகர்கள் கூட்டத்தில் இருந்த குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.
கடைசி இரு பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 5-வது பந்தை ரவீந்திர ஜடேஜா லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி வெற்றி தேடிக் கொடுத்தார். வெற்றிக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறியதாவது:
2 ஆண்டுகளுக்குப் பிறகு சேப்பாக்கத்தில் விளையாடி வெற்றி பெறுவது நல்ல உணர்வை தருகிறது. முதல் இன்னிங்ஸ், 2வது இன்னிங்ஸ் இரண்டுமே ரசிகர்களுக்குத் தகுதியான இன்னிங்ஸ்களே. அனைவருக்குமான உணர்ச்சி மட்டங்கள் உண்டு. ஆனால் இங்கு வீரர்கள் அமரும் இடத்தில் இருக்கும் போது ஒரு குறிப்பிட்ட தருணத்தில் பந்து வீச்சாளர் மீதும் பேட்ஸ்மேன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டியது அவசியம். நேர்மறையான ஆற்றல் உதவும்.
என்னுடைய நாடித்துடிப்பும் எகிறியது, அதனால்தான் ஓய்வறை என்ற ஒன்று உள்ளது. என் உணர்வுகளை நான் ஓய்வறையில் மறைவாகவே வெளிப்படுத்துவேன், இங்கு வெளியில் அமரும்போது கிடையாது. களத்தில் நம் உணர்வுகளை அதிகம் காட்டினால் வர்ணனையாளர்கள் நம்மைப் பற்றி பேசுவதற்கு இடம் கொடுப்பதாக அமைந்துவிடும். சாம் பில்லிங்ஸ் ஆட்டம் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. பந்து வீச்சில் நாங்களும் ரன்கள் கொடுத்தோம், கொல்கத்தா அணி நன்றாகவும் பேட் செய்தது. இரு அணி பந்து வீச்சாளர்களுக்கும் கடினமான நேரமாகவே அமைந்தது. ஆனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என உறுதியாக நம்புகிறேன்.
இவ்வாறு தோனி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT