Published : 10 Apr 2018 09:48 AM
Last Updated : 10 Apr 2018 09:48 AM
எ
ழுத்தாளர்கள், கவிஞர்களை மதிக்கும் தமிழ்ச்சமூகம் கொண்டாடிய பல கவிஞர்களில் பாவேந்தர் பாரதிதாசன் முக்கியமானவர்.
எழுத்தாளர்கள், கவிஞர்களுக்கு உள்ள முக்கியத்துவம் அவர்கள் வசித்த இல்லத்துக் கும் வெளிநாட்டில் கிடைக்கும். சுற்றுலா செல்வோர் அங்குள்ள முக்கிய கலைஞர்களின் இல்லத்தை தரிசிக்காமல் திரும்புவதில்லை.
அப்படி தரிசிக்கப்பட வேண்டியவைகளில் ஒன்றுதான் ‘புரட்சி கவிஞர்’ வசித்த இல்லம். புதுச்சேரியில் பெருமாள் கோயில் வீதியில் உள்ளது. தற்போது அது ‘பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் - ஆய்வு மை யம்’ என்ற பெயரில் நம்மை வரவேற்கிறது.
1900-ம் ஆண்டு கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த வீட்டில் சுப்புரத்தினம் என்ற இயற் பெயரைக் கொண்ட பாரதிதாசன் 1945-ல் குடியேறினார். இங்கு 1964 வரை வாழ்ந்தார். பாரதியின் மீதுள்ள பேரன்பால் பாரதிதாசனாக அவதரித்தார். புதுச் சேரி சுதந்திர போரிலும் அவரது பங்கு நிலைத்துள்ளது.
பாவேந்தர் வசித்த பெருமாள் கோயில் இல்லம் 1971-ல் அரசுடைமையாக்கப்பட்டு, அருங்காட்சியமாக மாறியது. 1977-ல் ஆறாவது ஐந்தாண்டு திட்டத் தில் பாரதிதாசன் நினைவு நூல கம் காட்சிக் கூடம் ஆகியவற்றை ஆராய்ச்சிக் கூடமாக மாற்றி அமைப்பதற்கான திட்டம் உருவாக்கப்பட்டது.
அதையடுத்து 1978-ல் மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டது. 1984 ஏப்ரலில் இந்நினைவு நூல கம் காட்சிக் கூடமானது. பாவேந் தர் பாரதிதாசன் நினைவு அருங்காட்சியகம் ஆய்வு மையம் என பெயருடன் இயங் கத் தொடங் கியது. இந்த அருங்காட்சியம் திங்கள் கிழமையும் அரசு விடுமுறை நாட்களிலும் இயங்காது. காலை 9.40 முதல் மதியம் 1 மணி வரையும் மதியம் 2 முதல் 5.20 வரையும் திறந்திருக்கும்.
பாரதிதாசன் வாழ்க்கை வரலாற்றினை அறியும் வகையில் அவரது புகைப்படங்கள், கை யெழுத்துப் படிகள், அவர் எழு திய நூல்கள், இதழ்கள், அவர் பயன்படுத்திய பொருட்கள், பாவேந்தர் காலத்தில் அவருடன் வாழ்ந்து பழகிய நண்பர்கள், பத்திரிக்கை மதிப்புரை ஆகியவை இந்த அருங்காட்சியகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
வீட்டில் நுழைந்தவுடன் சுவற் றில் வரிசையாய் புகைப்படங்களும் பாவேந்தரின் சிலையும் உள்ளது. அதில் இலக்கியம், அரசியல், பத்திரிக்கை, திரைத்துறை, மொழி, இனம் தொடர் பான பாரதிதாசன் ஆற்றிய பணிகளை படங்களாக நம்முன் விரிகின்றன.
குறிப்பாக பாவேந்தர் தான் கைப்பட எழுதிய கவிதைகள், கலை, இலக்கிய நண்பர்களுக்கு எழுதிய மடல்கள், ஆசிரியராக இருந்தபோது எழுதப்பட்ட பாடத்தயாரிப்புகள், பெரியார், கலைஞர் கருணாநிதி ஆகியோரால் எழுதப்பட்ட மடல்களையும் அருங்காட்சியகத்தில் பார்க்கலாம். பாவேந்தர் இதழாசிரியராக பொறுப்பேற்று நடத்திய இதழ்களின் படிகளையும் பார்க்கலாம்.
மேலும், பாரதிதாசன் பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி, சால்வை, அவர் அமரும் நாற்காலி மற்றும் கட்டில் வரை அனைத்தும் நம் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. நம்மை அறிய நம் பூர்வீகத்தின் வரலாற்றை அறிவது அவசியம். பாவேந்தரை அறிந்து கொள்வதும் கூட தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளும் முயற்சிதான். தமிழை, தமிழர்களை நேசித்த மகத்தான தலைவனை பற்றி இப்போதைய தலைமுறை அறிந்துகொள்ள வசதியாக குழந்தைகளை அழைத்துக் கொண்டு ஒருமுறை வாருங்களேன்.., புதுச்சேரிக்கு. வரப்போகும் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க இது சிறந்த வழி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT