Published : 22 Aug 2014 06:39 PM
Last Updated : 22 Aug 2014 06:39 PM
தலையில் தண்ணீர் ஊற்றிக் கொண்டு குளிப்பது நம் ஊரில் சிறு குழந்தை கூட செய்யும் செயல். அதிலும் குளிர் காலங்களில் சில்லென்ற பச்சைத் தண்ணீரை, மூச்சைப் பிடித்துக் கொண்டு, தலையில் ஊற்றிக் குளித்த அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். கோயில் திருவிழாக்களின்போது, அதிகாலையிலோ, நள்ளிரவிலோ, தலையில் மஞ்சள் தண்ணீரை ஊற்றிக் கொண்டு வலம் வருபவர்களையும் பார்த்திருப்போம். ஆனால் ஒரு பக்கெட்டில், ஐஸ் கட்டிகள் கலந்த, கரைந்த தண்ணீரை தலையில் ஊற்றிக் கொள்ளும் தைரியம் உங்களுக்கு இருக்கிறதா? | வீடியோ இணைப்புகள் கீழே |
இதுதான் ஐஸ் பக்கெட் சவால் (ice bucket challenge). உலகம் முழுவதிலும் தற்போது பலதரப்பட்ட மக்கள் இந்த ஐஸ் பக்கெட் சவாலை கையிலெடுத்துள்ளனர். அதுவும் நற்செயலுக்காக.
காரணம்?
ஏ.எல்.எஸ் (Amyotrophic lateral sclerosis) எனப்படும் நோயைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி சேர்க்கவும் இந்த ஐஸ் பக்கெட் சவாலை பலர் மேற்கொண்டுள்ளனர். இந்த நோயால் நரம்பு மண்டலம் பாதிப்படைவதால், நோயாளிகளுக்கு நடப்பது, பேசுவது போன்ற செயல்கள் மிகக் கடினம். ஒரு கட்டத்தில் அவை சுத்தமாக நின்றும் போகும். இது மரணத்தில் முடியும் அபாயமும் உள்ளது.
விதிகள்
முதல் விதி, இந்த சவாலை ஏற்றுக் கொண்ட 24 மணிநேரத்தில் இதை செய்து முடித்து 10 டாலரை மட்டும் ஏ.எல்.எஸ் அமைப்புக்கு நன்கொடையாகத் தர வேண்டும். சவாலை செய்ய முடியவில்லை என்றால் 100 டாலர்களை நன்கொடையாகத் தர வேண்டும்.
ஏற்றுக் கொள்பவர்கள் முதலில் கேமராவின் முன் நின்று தாம் இந்த சவாலை ஏற்றுக் கொள்வதாக தெரிவிக்க வேண்டும். அடுத்து ஐஸ் கட்டிகள் நிறைந்த பக்கெட் அல்லது, ஐஸ் கட்டிகள் கரைந்த பக்கெட் நீரை நிறுத்தாமல் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும். அடுத்து, தனக்குத் தெரிந்த ஒருவருக்கோ, பலருக்கோ சவால் விட வேண்டும். அவ்வளவே.
இந்த சவால் விடும் முறை எப்படி, எங்கு ஆரம்பித்தது என்பது தெரியவில்லை. ஆனால் இதற்கு முன்னரே பல நல்ல காரியங்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த ஐஸ் பக்கெட் முறை வேறு வேறு பெயர்களில் பின்பற்றப்பட்டுள்ளது.
வைரலான வீடியோக்கள்
ஐஸ் பக்கெட் சாலஞ்சை திரை, விளையாட்டு மற்றும் அரசியல் பிரபலங்கள் பலர் செய்து வருவதால், அவர்களின் சவால் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் படுவேகமாகப் பரவி வருகின்றன. பொதுமக்கள் பலரும் தங்கள் பங்குக்கு தலையில் தண்ணீர் ஊற்றி அதை வீடியோவில் பதிவு செய்து, பகிர்ந்து வருகின்றனர். எக்குத்தப்பாக செய்து நகைச்சுவையில் முடிந்த வீடியோக்களும் உள்ளன.
மார்க் ஸக்கர்பெர்க், பில் கேட்ஸ், ஜார்ஜ் புஷ், பிரிட்னி ஸ்பியர்ஸ், ‘ராக்’ டுவைன் ஜான்சன், அண்டர்டேகர், கெவின் பீட்டர்சன், லயனல் மெஸ்ஸி என எண்ணற்ற பிரபலங்களது ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள் யூடியூபில் காணக் கிடக்கின்றன.
அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு பலரும் சவால் விட்டிருந்தனர். ஆனால், ஒபாமா, அதற்கு பதிலாக நன்கொடை அளித்து விடுவதாக உறுதியளித்துள்ளார்.
இந்தியாவிலிருந்து சானிய மிர்சா, யுவராஜ் சிங், அக்ஷய் குமார், பிபாஷா பாசு, அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளனர். தமிழ் சினிமா நடிகைகள் ஹன்சிகா, கார்த்திகா போன்றோரும், தாங்கள் எடுத்த சவாலை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர். இதில் வித்தியாசமாக சோனாக்ஷி சின்ஹா, தண்ணீரை மிச்சப்படுத்த வேண்டும் என்று கூறி, ஒரே ஒரு ஐஸ் கட்டியை தலையில் சாய்த்து, கண்டிப்பாக நன்கொடை வழங்குங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
குவிந்த நன்கொடை
இந்த சவால் பிரபலமானதால், ஏ.எல்.எஸ் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளதாகவும், கடந்த சில வாரங்களில் மட்டும் 15.6 மில்லியன் டாலர் நன்கொடை சேர்ந்துள்ளதாகவும் ஏ.எல்.எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூன் முதல் வாரத்தில் இருந்து, ஆகஸ்ட் இரண்டாம் வாரம் வரை, கிட்டத்தட்ட 1.2 மில்லியன் ஐஸ் பக்கெட் சவால் வீடியோக்கள் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டுள்ளதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மேலும் 2.2 மில்லியன் முறை, இந்த வார்த்தை தங்களது பயனர்களால் குறிப்பிடப்பட்டுள்ளதாக ட்விட்டர் தளம் தெரிவித்துள்ளது.
விமர்சனங்கள்
வழக்கம் போல, ஐஸ் பக்கெட் சாலஞ்ச் பற்றிய விமர்சனங்களும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. இந்த சவாலை செய்யும் பல பிரபலங்கள் நன்கொடை தரவேண்டும் என்பதை சொல்ல மறந்துவிடுகின்றனர். வெறும் பரபரப்புக்காக மட்டுமே பலர் இதை செய்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. எது எப்படியோ, எளிமையான ஒரு செயலின் மூலம், உலகை திரும்பிப் பார்க்க வைக்க முடியும் என்று இந்த ஐஸ் பக்கெட் சாலஞ்ச் நிரூபித்துள்ளது.
பிரபலங்களின் ஐஸ் பக்கெட் சேலஞ்ச் வீடியோ இணைப்புகள்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT