Published : 29 Apr 2018 09:34 AM
Last Updated : 29 Apr 2018 09:34 AM

‘தூய்மை இந்தியா’ - எங்கு இருக்கிறோம் நாம்: சுத்தத்தை தூக்கிப் பிடிக்கும் கிராமங்கள்

சு

காதாரத்தைப் பராமரிப் பது தொடர்பாக சில குறைபாடுகள் இருந்தாலும் கடந்த 10 ஆண்டுகளில், சுகாதாரத்தில் இந்தியா பல மடங்கு முன்னேறியிருக்கிறது. ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் 100 சதவீதம் திறந்தவெளியில் மலம் கழிக்காத மாநிலங்களாக கேரளா, குஜராத், ஹரியாணா, உத்தராகண்ட், சிக்கிம் மாநிலங்கள் கோலோச்சுகின்றன. தமிழகம் ஓரிரு ஆண்டில் அந்த நிலையை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் 2,77,422 கிராமங்கள், 237 மாவட்டங்கள் திறந்தவெளியில் மலம் கழிக்காத பிராந்தியங்களாக மாறியுள்ளன. இதில் சில முன்னுதாரண கிராமங்களைப் பார்ப்போம்.

அசத்தும் கிராமங்கள்

திருவள்ளூர் மாவட்டம் அதிகத்தூர் கிராமப் பஞ்சாயத்தின் தலைவராக இருந்தவர் சுமதி. தனது கிராமத்தில் இவர் ஆற்றிய சுகாதார மேம்பாட்டுப் பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளின் விருதுகளைப் பெற்றவர். இவரது முயற்சியால் 100% திறந்தவெளியில் மலம் கழிக்காத கிராமமாக மாறியிருக்கிறது அதிகத்தூர். இதற்காக, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் சென்று, திரவக் கழிவு மேலாண்மை பயிற்சி பெற்றார். அந்தத் தொழில்நுட்பம் மூலம் அனைத்து வீடுகளுக்கும் கழிப்பறை கட்டிக்கொடுத்தார். ஆந்திர மாநிலம் நந்தியால் நகராட்சிக்கு சென்று, திடக்கழிவு மேலாண்மை பயிற்சி பெற்றார். இதன் மூலம் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து, விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. சமீபத்தில் இவருக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.

திண்டுக்கல் அருகே உள்ள பஞ்சம்பட்டி கிராமத்தில் எங்கு தேடினாலும் தெருவோரத்தில் அசுத்தத்தைப் பார்க்க முடியாது. காரணம், இங்கு சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காகவே மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலை இரு வேளையும் தெருத் தெருவாக சென்று வீடுதோறும் குப்பைகளை சேகரிக்கிறார்கள் இந்த மகளிர் குழுவினர். அவற்றை ஊரின் ஒதுக்குப்புறமான இடத்தில் உள்ள கிடங்கில் மலைபோல குவிக்கின்றனர். இன்னொரு பக்கம் தள்ளுவண்டியில் பிளாஸ்டிக் குப்பைகளை கொண்டுவருகின்றனர் பெண்கள். அருகில் உள்ள அறையில் அரவை இயந்திரம் கரகரவென ஓடிக்கொண்டிருக்கிறது.

“எங்க கிராமத்துல மட்டுமில்லைங்க, சுத்துவட்டாரத்துல ஆலமரத்துப்பட்டி, பிள்ளையார் நத்தம், பித்தளைப்பட்டி உட்பட சுமார் 25 கிராமத்துல எங்கேயும் குப்பைகளை பார்க்க முடியாது. எல்லா கிராமப் பஞ்சாயத்திலேயும் பேசி குப்பையை சேகரிக்கிறோம். அதை தரம் வாரியாக பிரித்து, விவசாயத்துக்கான உரம் தயாரிக்கிறோம். பிளாஸ்டிக் குப்பையில் இருந்து கிடைக்கும் அரவையை கிலோ ரூ.25-க்கு விக்குறோம். அதை சாலை போட பயன்படுத்துறாங்க” என்கின்றனர் மகளிர் குழுவினர். கடந்த 13 ஆண்டுகளில் டெங்கு, மலேரியா என்று ஒரு நோய்கூட பதிவாகாததே இந்த கிராமத்தின் சுகாதார மேம்பாட்டுக்கான சாட்சி!

மாணவர்கள் செய்த பிரச்சாரம்

ஹைட்ரோ கார்பன் பிரச்சினையால் அறியப்பட்ட நெடுவாசல் கிராமம் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்பே திறந்தவெளியில் மலம் கழிக்காத கிராமமாக மாறிய பெருமை கொண்டது. இங்கு இருக்கும் கிழக்கு நெடுவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியரான கருப்பையன் ஆறுமுகம் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார். அதிகாலையில் பள்ளி மாணவர்கள் மூலம் தண்டோரா போட்டு, திறந்தவெளியில் மலம் கழிக்கும் பழக்கத்தை ஒழித்துள்ளார்.

பட்டுக்கோட்டை அடுத்த வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள பூங்குளம், மண் மூடி சீமை கருவேலக் காடாக மாறி, திறந்தவெளி கழிப்பிடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இங்கு பஞ்சாயத்து தலைவராக இருந்த சிங்கதுரை இங்கு மலம் கழிக்க தடை விதித்தார். நூறு நாள் வேலை திட்டம் மூலம் குளத்தை தூர் வாரி புனரமைத்தார். கூடவே கிராமத்தில் அத்தனை வீடுகளுக்கும் அரசாங்கத்தின் திட்டங்களைப் பயன்படுத்தி கழிப்பிடம் கட்டிக்கொடுத்தார். இப்போது, கிராமத்தில் நுழைந்ததுமே அழகான பூங்காவுடன் நீர் நிறைந்து வரவேற்கிறது பூங்குளம். குளத்தைச் சுற்றி மக்கள் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர்.

பள்ளியில் சுகாதாரப் பாடம்

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே இருக்கிறது மாணிக்கல் கிராமப் பஞ்சாயத்து. இங்குள்ள பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையின் முகப்பிலும் ‘மாணவர் நாடாளுமன்றம்’ என்கிற தலைப்பில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருக்கிறது. ‘குப்பையை குப்பைத் தொட்டியில் போடுங்கள். தினமும் கை, வாய், பின்பக்கத்தை சுகாதாரமாக பராமரிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். கை, காலைக் கழுவிவிட்டு வகுப்பறைக்குள் வாருங்கள். பள்ளியில் சுகாதார குறைபாடு இருந்தால் தலைமை ஆசிரியரிடம் தெரிவியுங்கள்’ என்று அதில் எழுதப்பட்டுள்ளன. இதுதவிர, வாரம் ஒருநாள் குழந்தைகளோடு, பெற்றோரையும் வரவழைத்து சுகாதாரம் குறித்து வகுப்பெடுக்கின்றனர்.

இவை எல்லாம் கண்முன் நிகழ்ந்துகொண்டிருக்கும் சுகாதார மேம்பாட்டுக்கான சாட்சிகள். நம்பிக்கையுடன் செயல்பட்டால் மொத்த நாட்டையும் 100 சதவீதம் சுகாதாரமானதாக மாற்றலாம்!

(இந்தக் கட்டுரை ‘ஸ்வச் பாரத்’ குறித்து HUL நிறுவனத்துடன் ‘தி இந்து’ இணைந்து வெளியிடும் ஸ்பான்சர்டு தொடரின் ஒரு பகுதி.)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x