Published : 26 Apr 2018 09:10 AM
Last Updated : 26 Apr 2018 09:10 AM

பஞ்சாயத்து ராஜ்ஜியம்: சரியான பாதையைத்தான் தேர்வு செய்திருக்கிறீர்கள் கமல்! கிளம்பிச் செல்லுங்கள் கிராமங்களுக்கு

ரசியல்வாதி கமல்ஹாசன் மீது, ‘பேச வேண்டிய முக்கியமான விஷயங்களை அவர் பேசுவதில்லை’ என்பது உட்பட சில விமர்சனங்கள் உண்டு. ஆனால், சமகால அரசியல்வாதிகள் எவரும் செய்ய துணியாத, சொல்லப்போனால் அவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்காத ‘பஞ்சாயத்து ராஜ்ஜியம்’ என்கிற தத்துவத்தை கமல்ஹாசன் இப்போது கையில் எடுத்திருக்கிறார். அந்த வகையில் அவரது அரசியல் பயணத்தில் மிகச் சரியான பாதையையே அவர் தேர்ந்தெடுத்துள்ளார் என்றே தோன்றுகிறது!

சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனை பேட்டிக்காக நேரில் சந்தித்தபோது ‘தி இந்து’ தமிழ் நாளிதழில் வெளியான ‘உள்ளாட்சி உங்கள் உள்ளங்களின் ஆட்சி’ தொடர் கட்டுரைகளின் நூலை அளித்தேன். அப்போது அவரிடம், “இந்த நூலை உங்களிடம் கொடுப்பதற்கு குறிப்பிடத்தக்க காரணங்கள் இருக்கின்றன. கிராமங்களில் இருந்து உங்களது அரசியல் பயணத்தை தொடங்குவதாகக் கூறிவருகிறீர்கள். அதற்கு இந்த நூல் பெரும் வழிகாட்டியாக இருக்கும்...” என்று கூறினேன். அருகில் இருந்த அவரது கட்சியின் உயர் மட்டக் குழு உறுப்பினரும், சொற்பொழிவாளருமான பாரதி கிருஷ்ண குமாரும் அதனை ஆமோதித்தார். அதன் பின்பு கமல் அந்தப் புத்தகத்தை படித்திருப்பாரா? படித்திருக்க மாட்டாரா என்பதைப் பற்றி எந்த சிந்தனையும் இல்லை.

ஏப்ரல் 24-ல் என்ன முக்கியத்துவம்?

இந்நிலையில்தான் கடந்த ஏப்ரல் 24-ம் தேதி தமிழக அரசியல்வாதிகள் யாரும் செய்ய முன்வராத மாதிரி கிராம சபைக் கூட்டத்தை முன்னெடுத்து நடத்தியிருக்கிறார் கமல். உண்மையில் ஏப்ரல் 24-ல் இந்திய ஜனநாயகத்தின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். எப்படி என்பதை சுருக்கமாகப் பார்ப்போம்.

சுதந்திரத்துக்குப் பின்பு கிராம சுயராஜ்ஜியத்தை எப்படியாவது அரசியல் சாசன சட்டப் பாதுகாப்புடன் நிறைவேற்றிவிட வேண்டும் என துடித்தார் காந்தி. நேருவும் வல்லபாய் படேலும் ஆதிக்கம் செலுத்திய அந்த நாட்களில் காந்தியின் வார்த்தைகளுக்கு அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்பது கசப்பான வரலாற்று உண்மை. ஆனாலும் காந்தியின் தொடர்ந்த வலியுறுத்தலால், வேறுவழியில்லாமல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாகம் 4-ல் ‘மாநிலங்களின் உள்ளாட்சி களுக்கான வழிகாட்டுதல் குறிப்பு’ என்கிற 40-வது சட்டப்பிரிவில் ‘பஞ்சாயத்துகளை அமைத்தல்’ என்கிற தலைப்பைப் புகுத்தினார்கள். அதிலும் நிறைய குளறுபடிகள். இடையே அதுவும் நீர்த்துப்போனது. அதன் பின்பு ராஜீவ்காந்தி இதை நிறைவேற்றுவதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டார். அவரது முயற்சியும் நிறைவேறவில்லை. ஒருவழியாக நரசிம்மராவ் ஆட்சிக் காலத்தில் இது நிறைவேறியது. 1992, டிசம்பர் 22-ம் தேதி மக்களவையும் அதற்கு மறுநாள் மாநிலங்கள் அவையும் 73-வது திருத்த மசோதாவை நிறைவேற்றின. 1993, ஏப்ரல் 20-ம் தேதி குடியரசுத் தலைவர் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். 1993, ஏப்ரல் 24-ம் தேதி இந்தச் சட்டம் அமலுக்கு வந்தது.

25 ஆண்டுகளுக்கு பிறகு..!

அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. சொல்லப்போனால் கடந்த ஏப்ரல் 24-ம் தேதியன்று நாடு முழுவதும் பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கான வெள்ளி விழாக்களை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், சம்பிரதாயத்துக்காகக் கூட இதற்கான விழாக்களோ சிறப்புக் கூட்டங்களோ இங்கு நடக்கவில்லை. மத்தியப்பிரதேசத்தில் நடந்த பஞ்சாயத்து ராஜ்ஜியம் மாநாட்டில் மோடி கலந்துகொண்டது மட்டுமே ஆறுதலான செய்தி. குறிப்பாக, தமிழகத்தில் கடந்த 2016, அக்டோபர் 24-ம் தேதியுடன் உள்ளாட்சிகளின் பதவிக் காலம் நிறைவடைந்தது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக் காலம் முடிவடையும் முன்பே தேர்தல் நடத்தப்பட்டு, பதவிக் காலம் முடிந்த மறுநாள் புதியதாக தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பதவியேற்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் நிலவும் மலிவான அரசியல் சூழல் காரணமாக மாநில அரசு திட்டமிட்டே உள்ளாட்சித் தேர்தலை புறக்கணித்துவருகிறது.

“அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருந்து விடுபட்டிருக்க வேண்டும் என்கிற ஓயாத முயற்சியே சுயாட்சி. அந்த அரசாங்கம் வெளிநாட்டு அரசாங்கமாக இருந்தாலும் சரி, தேசிய அரசாங்கமாக இருந்தாலும் சரி. வாழ்க்கையின் ஒவ்வொரு காரியத்துக்கும் மக்கள் அரசாங்கத்தையே எதிர்பார்த்துக்கொண்டிருந்தால் சுதந்திர அரசாங்கம் என்பதும் வருந்தத் தக்கதாகிவிடும்” என்றார் காந்தி. ஆனால், இன்றைய நாட்கள், காந்தியடிகள் வலியுறுத்திய அதிகார பரவலுக்கு நேர் எதிரான நாட்களாக அமைந்துவிட்டன. கடந்த 22 ஆண்டுகாலம் தடையின்றி ஓடிக்கொண்டிருந்த பஞ்சாயத்து சக்கரம் இன்று நிறுத்தப்பட்டிருக்கிறது.

தத்தளிக்கும் கிராமப் பொருளாதாரம்

தமிழகம் முழுவதும் 12,524 கிராமப் பஞ்சாயத்துகளிலும் மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மக்கள் சந்தித்து வரும் பிரச்சினைகள் கொஞ்சநஞ்சமல்ல. அடிப்படைத் தேவைகளான குடிநீர், சுகாதாரம் தொடங்கி வாழ்வாதாரமான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டங்கள் வரை ஸ்தம்பித்துள்ளன. ஏற்கெனவே, விவசாயமும் கைவிட்ட நிலையில் உள்ளாட்சி அமைப்புகளும் இல்லாததால் கிராமப் பொருளாதாரம் முற்றிலுமாக சிதைந்துப்போயுள்ளது. கிராமங்களில் அரசு திட்டப் பணிகள் முறையாக நடக்காததால் கிராமப்புற கூலித் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகள் அழிந்துவிட்டன. மத்திய அரசின் 14-வது நிதி ஆணையத்தில் தமிழகத்துக்கு வர வேண்டிய நிதியும் பெற முடியவில்லை.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிறது. எப்போது உள்ளாட்சித் தேர்தல் வரும் என்றே தெரியாத சூழல் நிலவுகிறது. திமுக, பாமக மற்றும் இடதுசாரி உள்ளிட்ட கட்சிகள் அவ்வப்போது அழுத்தம் கொடுத்தும், ஆளும் அரசு அசைவதாகத் தெரியவில்லை. இந்தச் சூழலில்தான் பஞ்சாயத்து ராஜ்ஜியம் என்னும் உள்ளாட்சித் தத்துவத்தை கையில் எடுத்திருக்கிறார். குறிப்பாக, மாதிரி கிராம சபைக் கூட்டத்தில், அவர் பேசத் தொடங்கும்போதே ‘பங்கேற்பு ஜனநாயகம்’ குறித்து விரிவாகவும் அழுத்தம் திருத்தமாகவும் பேசியது உள்ளாட்சியின் மீது அவருக்கு உள்ள புரிதலை உணர்த்தியது.

“தற்போதைய நடைமுறை ஜனநாயகம் என்பது பிரதிநிதித்துவ ஜனநாயகமாக உள்ளது. நீங்கள் ஓட்டுப் போடுகிறீர்கள். உங்கள் பிரதிநிதி உங்களை ஆட்சி செய்கிறார். ஆனால், நீங்கள் வாக்களித்து நீங்களும் ஆட்சியில் பங்கு பெறுவதுதான் உள்ளாட்சி ஜனநாயகம். அது பங்கேற்பு ஜனநாயகம். அதாவது, உங்கள் ஊர் உங்கள் உரிமை. உங்கள் ஊர் உங்கள் பொறுப்பு...” என்ற வரிகளை கமல் ‘உள்ளாட்சி... உங்கள் உள்ளங்களின் ஆட்சி’ நூலில் படித்திருப்பார் என்றே நம்புகிறேன். அதேசமயம், கமல்ஹாசன் கிராம சபைக்கான விதையை அவரது நிர்வாக வசதிக்காக ஆழ்வார்பேட்டையில் விதைத்திருக்கலாம்... ஆனால், அது கடைக்கோடி வரை சென்றடைய அவர் நேரடியாக பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x