Last Updated : 30 Aug, 2014 12:00 AM

 

Published : 30 Aug 2014 12:00 AM
Last Updated : 30 Aug 2014 12:00 AM

என் கால்கள் எங்கே அப்பா? திரும்ப வளருமா?- விபத்தில் கால்களை இழந்த சிறுவனின் வேதனை தரும் கேள்வி: உதவிக்காக ஏங்கும் தந்தை

கார் மோதியதில் கால்களை இழந்த மூன்றரை வயது மகன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமலும், மனைவி மற்றும் மகனின் சிகிச்சை செலவுக்கு பணம் இல்லாமலும் ஒரு தந்தை ஏங்கி நிற்கிறார்.

சென்னை சூளை கேசவபிள்ளை பார்க் டிமில்லர்ஸ் சாலையில் வசிப்பவர் சுப்பிரமணி(35). காவலாளியாக வேலை பார்க்கிறார். இவரது மனைவி கீதா. இவர்களுக்கு நித்யஸ்ரீ(7) என்ற மகளும், மூன்றரை வயதில் ஹிருத்திக் ரோஷன் என்ற மகனும் உள்ளனர். சென்னை சூளை காளத்தியப்பர் தெருவில் உள்ள மழலையர் தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி. படிக்கிறார் ஹிருத்திக் ரோஷன். கடந்த ஜூன் மாதம் பள்ளி அருகே உள்ள பிளாட்பாரத்தில் கீதாவும் ஹிருத்திக் ரோஷனும் அமர்ந்திருந்தபோது வேகமாக வந்த ஒரு கார் இருவர் மீதும் மோதியதில், ஹிருத்திக் ரோஷனின் இரு கால்களும் துண்டாகிவிட்டன. கால்களை மீண்டும் இணைக்க முடியாத அளவுக்கு அவை சிதைந்து விட்டதால், தற்போது படுக்கையில் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறான் சிறுவன்.

மருத்துவமனை சிகிச்சை முடிந்து இரு நாட்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த சிறுவனை நேரில் பார்த்தபோது நமது இதயமும் நொறுங்கிவிட்டது. அவர்களின் வாழ்க்கையில் சந்தோஷம் என்பதே மறைந்துவிட்டதைப்போல இருந்தது. சில நிமிட அழுகைக்கு பிறகு சிறுவனின் தந்தை சுப்பிரமணி பேசுகையில், "இந்த தெருவெல்லாம் என் மகனின் கால்கள் படாத இடங்கள் கிடையாது. எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பான். அவனை `வாலு' என்றுதான் தெருவில் இருப்பவர்கள் அழைப்பார்கள். ஆனா இப்போ..?

மருத்துவமனையில் இருக்கும் வரை படுக்கையில் இருந்ததால் அவனுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை. வீட்டுக்கு வந்ததும் என் கால்கள் எங்கே அப்பா? என்று தினமும் 20 முறைக்குமேல் கேட்கிறான். `ஒரு கார் என் கால் மேல இடிச்சிதுப்பா. அதுக்கு அப்புறம்தான் என் கால்கள் காணோம்' என்று கூறுவான். `உன் கால்கள் உன் தொடைக்கு உள்ளே இருக்குப்பா? கொஞ்ச நாள்ல அது திரும்ப வெளிய வளர்ந்திடும்’ என்று கூறி வைத்திருக்கேன். அதிலிருந்து, `என் கால்கள் திரும்ப வளருமா அப்பா? எப்போ வளரும்' என்று தொடர்ந்து கேட்கிறான். அவன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறேன்.

இரவெல்லாம் தூங்காமல் தவிக்கிறான். கால்கள் துண்டாகிப் போன இடத்தில் வலிக்கிறது என்கிறான். அவனை இரவு முழுவதும் கைகளில் தூக்கி வைத்துக் கொண்டே தூங்க வைக்கிறேன்.

அவன் அக்காவை விட உயரமாக இருப்பான். இப்போ ஒரு சின்ன இடத்தில் படுத்திருப்பதை பார்க்கும்போது நெஞ்சு வலிக்கிறது. மனக்கஷ்டம் ஒரு புறமும், பணக்கஷ்டம் மறுபுறமும் என்னை வாட்டுகிறது. மகனுக்கு பூரண குணமாக தினமும் ரூ.4 ஆயிரத்துக்கு மருந்து வாங்க வேண்டியுள்ளது" என்று கதறினார் சுப்பிரமணி.

உதவிக்காக ஏங்கும் தந்தை

விபத்தில் கால்களை இழந்த சிறுவனுக்கும், காலில் படுகாயம் அடைந்த அம்மா கீதாவுக்கும் சிகிச்சை செலவுகளுக்கு பணம் இல்லாமல் சுப்பிரமணி கஷ்டப்படுகிறார். தனக்கு அரசு உதவி கிடைத்தால் நன்றியுள்ளவனாக இருப்பேன் என்று சுப்பிரமணி தெரிவித்தார். கருணையுள்ளம் கொண்டவர்கள் சுப்பிரமணிக்கு உதவ நினைத்தால் 9941979145 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். முகவரி: ஹிருத்திக் ரோஷன், த/பெ. சுப்பிரமணி, 684 - 15வது பிளாக், டிமில்லர்ஸ் சாலை, சூளை, சென்னை 12

செயற்கை கால்கள் கொடுக்க முன்வந்த சமூகசேவகர்

விபத்தில் கால்களை இழந்த சிறுவன் குறித்த செய்திகளை 'தி இந்து'வில் படித்த சமூகசேவகர் நாராயணன், அந்த சிறுவனுக்கு நவீன செயற்கை கால்களை செய்து கொடுக்க முன்வந்திருக்கிறார். அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ள இந்த செயற்கை கால்களை பொருத்துவதன் மூலம் சிறுவனால் விரைவில் நடக்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x