Published : 29 Apr 2018 09:36 AM
Last Updated : 29 Apr 2018 09:36 AM
பிரெய்லி முறையில் அச்சிடப்படும் திருக்குறள் புத்தகம் கிடைக்காததால், திருக்குறளைப் படிக்க முடியாமல் ஏழை, எளிய பார்வையற்ற மாணவர்கள் சிரமப்படுகின்றனர். பார்வையற்றோருக்கான பள்ளிகளில் இந்தப் புத்தகத்தை கிடைக்கச் செய்ய வேண்டும். தமிழ் அமைப்புகள் மலிவு விலையில் பிரெய்லி திருக்குறள் புத்தகத்தை வெளியிட வேண்டும் என்று அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
2011 மக்கள்தொகை கணக்கின்படி தமிழகத்தில் 11 லட்சத்து 80 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இவர்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் பார்வையற்றவர்கள். இதில் ஆண்களுக்காக சென்னை அடுத்த பூந்தமல்லியிலும், பெண்களுக்காக திருச்சி புத்தூரிலும், இருபாலருக்காக தஞ்சாவூரிலும் என 3 அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. இங்கு படிப்பவர்களில் தமிழ் பாடம் படிப்பவர்கள் மட்டுமின்றி பிற பாடங்கள் படிப்பவர்களும் தமிழ் ஆர்வம் மிக்கவர்கள். இதனால், அவர்கள் பலரும் திருக்குறள் படிக்க விரும்புகின்றனர். ஆனால், தொடு உணர்வோடு படித்து அறியும் பிரெய்லி தாளில் அச்சிடப்பட்ட திருக்குறள் புத்தகம் இந்த அரசுப் பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் இல்லாததால், அவர்கள் படிக்க இயலாத நிலை உள்ளது.
இதுகுறித்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த பார்வையற்ற மாற் றுத் திறனாளிகளிடம் கருத்து கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:
முதுநிலை சட்ட மாணவர் பி.ராம்குமார்: மயிலாடுதுறையில் திருக்குறள் பேரவை சார்பில் சமீபத்தில் நடந்த விழாவில் நீதிபதி இல.சொ.சத்தியமூர்த்தி பேசும்போது, ‘பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு திருக்குறள் பிரெய்லி பதிப்பு அவசியம்’ என்று வலியுறுத்தினார். நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து இதுவரை திருக்குறள் பிரெய்லி பதிப்பு இல்லை. இதனால், ஏழை, எளிய மாணவ, மாணவிகள் திருக்குறள் முழுவதையும் கற்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
‘படிப்பவர்கள்தான் கண் உடையவர்கள்’ என்கிறது குறள். முதுகலை சட்டப்படிப்பு படிக் கும் என்னால்கூட இதுவரை மொத்த திருக்குறளையும் பிரெய்லியில் படிக்க முடியவில்லை. ஆடியோவில் கேட்டாலும், பிரெய்லியில் தொடு உணர்வு மூலம்தான் திருக்குறளின் சுவையை முழுமையாக உணர முடியும். உலகப் பொதுமறையாம் திருக்குறளை முழுமையாகப் படிக்கும் வாய்ப்பு ஏழை, எளிய மாணவர்களுக்கு இதுவரை கிடைக்காதது வேதனை.
சென்னை பக்தவத்சலம் மகளிர் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் ர.ராஜா: ராமகிருஷ்ணா மிஷன், கிறிஸ்டியன் மிஷன், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் பிரெய்லி முறையில் திருக்குறள் அச்சிட்டு வழங்குகின்றன. ஆனால், அதுபோன்ற பதிப்பு, அரசு பார்வையற்றோர் பள்ளிகளில் கிடைப்பதில்லை. ஒரு பிரெய்லி தாளில் திருக்குறளை அச்சிட ரூ.4 வரை செலவாகும். மொத்த திருக்குறளையும் அச்சிட்டால் சுமார் 400 பக்கத்துக்குரூ.1,600 செலவாகும். ஏழை, எளிய மாணவர்களால் இதை பணம் கொடுத்து வாங்க இயலாது.
பி.ஏ. பட்டதாரி சுமதி: பள்ளியில் தினமும் காலையில் இறைவணக்கம் பாடும்போது ஒரு திருக்குறளை விளக்கத்துடன் கூற வேண்டும். அப்போதுதான் திருக்குறள் மீது அலாதி பிரியம் ஏற்பட்டது. ஆனால், 1,330 திருக்குறளையும் அதன் விளக்கத்துடன் படிக்க முடியவில்லை. அதனால் திருக்குறள் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும், ஆய்வுப் படிப்பும் பலருக்கும் எட்டாமலேயே போய்விட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னாள் முதல்வர் அண்ணா தலைமையில் 2-ம் உலகத் தமிழ் மாநாடு நடந்த பிறகு, 3 பிரதான பல்கலைக்கழகங்களில் திருக்குறளுக்கு இருக்கை அமைக்கப்பட்டது. தமிழ் மேம்பாட்டுக்காக தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், செம் மொழி ஆய்வு மையம் செயல்படுகின்றன. இந்த அமைப்புகள் பார்வையற்றோருக்கான திருக்குறள் பிரெய்லி பதிப்பை உருவாக்காமல் இருப்பது பெரும் குறையாக கருதப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT