Published : 25 Feb 2018 10:12 AM
Last Updated : 25 Feb 2018 10:12 AM
தூ
ய்மையான பழக்கம்.. தூய்மையான இந்தியா - ‘ஸ்வச் பாரத்’ திட்டம் வலியுறுத்தும் வாசகங்கள் இவை. திட்டம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனால், தூய்மை பாரதம் என்பதில் எவ்வளவு தூரம் முன்னேறியிருக்கிறது நம் சமூகம்? கிராமங்கள் என்று இல்லை; மாநகரகங்கள், சிறு நகரங்களின் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், தண்டவாளங்கள், சிறுவர்கள் விளையாடும் திடல்கள், சாலையோரங்கள், முட்டுச் சந்தில் இருக்கும் சுற்றுச்சுவர்கள்.. என வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் மனிதர்கள் கூச்சமின்றி சிறுநீர் கழிக்கிறார்கள். அதிலும் சிலருக்கு, ‘சிறுநீர் கழித்தால் அபராதம்’ என்கிற சுவர் அறிவிப்பின் மீதே சிறுநீர் கழிப்பதென்றால் அப்படியொரு அலாதிப் பிரியம்.
அப்படி சிறுநீர் கழிக்கும்போதோ, எச்சில் துப்பும்போதோ ‘நாளை நம் குழந்தையும் இதே இடத்தில்தானே விளையாட நேரிடும். மண்ணை எடுத்து வாயில் வைக்க நேரிடும்’ என்று யாரேனும் ஒரு நிமிடம் எண்ணிப் பார்த்தது உண்டா? ஒருவேளை அப்படி எண்ணிப் பார்த்தால் பொது இடத்தை அசுத்தம் செய்யும் எண்ணம் வராது.
ஒரு புள்ளி விவரம்.. தேசிய குடும்பநலக் கழகம் வெளியிட்ட 4-வது ஆய்வறிக்கையின்படி நம் நாட்டில் 38.4 சதவீத குழந்தைகள் வளர்ச்சி குறைபாட்டுடன் இருக்கின்றனர். 35.7 சதவீத குழந்தைகள் வயதுக்கேற்ற எடை இல்லாமல் எடை குறைபாட்டுடன் இருக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம் சுகாதாரமின்மை என்கிறது அந்த ஆய்வறிக்கை.
பாதிப்பு இத்துடன் முடிந்துவிடுவதில்லை. உடல்நல பாதிப்பால் குழந்தைகளின் அறிவுத்திறன் (I.Q.) குறைந்து, பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கிறது என்கிறது அறிக்கை. இதுதவிர ‘இந்தியா எங்கே செல்கிறது’ என்கிற ஆங்கில ஆய்வு புத்தகம், “மனித பரிணாம வளர்ச்சியில் இங்கிலாந்தை சேர்ந்த பெண்ணின் உடல் உயரத்தை எட்டிப் பிடிப்பதில் ஓர் இந்தியப் பெண் 250 ஆண்டுகள் பின்தங்கி இருக்கிறார். இதற்கு முக்கியக் காரணம் சுகாதாரமின்மை” என்கிறது.
இந்தப் பிரச்சினை உலகம் முழுவதும் இருக்கிறது என்றாலும், வளர்ந்துவரும் நாடான இந்தியாவின் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது சுகாதாரமின்மை. உலகம் முழுவதும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சுமார் 16.2 கோடி பேர் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் 6.5 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக சுகாதார நிறுவனம் உட்பட உலக அளவிலான பல்வேறு ஆய்வுகள் சொல்லும் விவரம் இது. இந்தியாவில் சுகாதாரமின்மையால் வயிற்றுப்போக்கால் மட்டும் ஆண்டுக்கு சுமார் 1 லட்சம் குழந்தைகள் இறக்கிறார்கள் என்கிறது மத்திய சுகாதார அமைச்சகம்.
“சுகாதாரமின்மை குறைபாடுகளால் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதம் இழப்பு ஏற்படுகிறது. எனவே, இதனை சுகாதாரமின்மைப் பிரச்சினையாக மட்டுமே பார்க்கக் கூடாது. இது நாட்டின் வளர்ச்சி சார்ந்த பிரச்சினை. அனைவரும் சுகாதாரத்தைப் பேணிக் காப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்துவோம்” என்று குறிப்பிடுகிறார் துப்புரவுத் துறை நிபுணரும், மத்திய அரசின் குடிநீர், துப்புரவு அமைச்சக செயலருமான பரமேஸ்வரன் அய்யர்.
கை, கால்களைக் கழுவாதது, திறந்தவெளியில் மலம் கழிப்பது போன்றவை தனிநபர் ஆரோக்கியப் பிரச்சினை மட்டுமல்லாமல், ஒரு நாட்டின் வளர்ச்சியையே பாதிக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். எதனால் இந்தப் பிரச்சினை? என்ன தீர்வு? என்பதை நோக்கி நகர்வது இன்றைய காலகட்டத்துக்கு முக்கியமானது.
இத்தனை காலமாக, உணவுப் பற்றாக்குறை, சரிவிகித சத்தான உணவு கிடைக்காதது, பட்டினி ஆகியவையே ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான காரணிகளாக கூறப்பட்டுவந்த நிலையில், சுகாதாரமின்மையே குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்கான முக்கிய காரணம் என்கின்றன சமீபத்திய உலகளாவிய ஆய்வுகள். இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 6.5 கோடி குழந்தைகளில், 3 பங்கு எண்ணிக்கை வசதியான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் என்கிறது சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகளால் ஊட்டச்சத்து குறைபாடு அடையும் குழந்தைகளுக்கான ஆய்வு அறிக்கை. வாய் மற்றும் கைகளையும், மலம் கழித்த பிறகு பின்பகுதியையும் சரியாக கழுவாததே இதற்கான முக்கியக் காரணங்கள் என்று பெரும்பாலான ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
திறந்தவெளியில் மலம், சிறுநீர் கழிப்பதற்கும், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கும் என்ன தொடர்பு என்று பார்ப்போம்.மனித மலத்தில் இருந்து உருவாகும் நோய்க் கிருமிகளில் முக்கியமானது கோலிஃபார்ம் கிருமி (Coliform Bacteria). திறந்தவெளியில் மலம் கழிக்கும்போதும், திறந்தவெளியில் மலம் கழித்துவிட்டு கழுவும்போதும், நீர்நிலைகளில் கழுவும்போதும், நீர்நிலைகளில் சாக்கடைக் கழிவுகள் கலக்கும்போதும் இந்த வகை நோய்க் கிருமிகள் அதிகம் பரவுகின்றன. இந்த நீரைத்தான் நாம் அருந்தும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பான விஷயத்தில் இது நம் குழந்தைகளைப் பாதிக்கிறது. எப்படி பாதிக்கிறது என்பதையும் பார்ப்போம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT